சென்னை, மும்பை, கல்கத்தா கடலில் மூழ்கி விடுமா?

இப்படியே சுற்றுச்சூழல் கெட்டுக்கொண்டே போனால் சென்னை, மும்பை, கல்கத்தா போன்ற நகரங்கள் ஒரு நாள் கடலில் மூழ்கி விடும் அல்லது கடல் ஊருக்குள் புகுந்து விடும் என்று சுற்றுச்சூழல் அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.

உலக அளவில் காலநிலை மாற்றம் காரணமாக கடலின் நீர் மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது என்று இது குறித்து செய்யப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஒரு பக்கம் புவியின் வெப்பநிலை உயர்வது காரணமாக பனிமலைகள் உருகி வரும் அதிக அளவிலான வெள்ளநீர், இன்னொருபுறம் ஏற்கனவே உள்ள கடல் நீர் வெப்பமடைந்து விரிவடைவது என்று இரு வகையிலும் கடல் நீர் மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது.

கடந்த 140 வருடங்களில் கிட்டத்தட்ட 21 முதல் 24 இஞ்ச் வரை அதாவது ஒன்றே முக்கால் முதல் இரண்டு அடி வரை கடல் நீர் மட்டம் உயர்ந்து கொண்டே வந்திருக்கிறது. இதில் மூன்றில் ஒரு பகுதி கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் தான் நடந்திருக்கிறது. சரி, அதனால் இப்போது என்ன என்று நாம் சும்மா இருந்து விட முடியாது.

ஏனென்றால் உலகின் முதல் பத்து பெரிய நகரங்களில் எட்டு நகரங்கள் கடற்கரையில் தான் இருக்கிறன. அப்படி என்றால் உலகில் எத்தனை பெரிய நகரங்கள் கடற்கரையை ஒட்டி அமைந்திருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். அதுவும் வளர்ச்சி பெற்ற நகரங்களாகவே பல நகரங்கள் கடற்கரையில் உள்ளன. இந்தியாவின் நான்கு பெரிய நகரங்களான டில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகியவற்றில் டில்லி தவிர மற்றவை கடற்கரையை ஒட்டித்தான் இருக்கின்றன. இது போக விசாகப்பட்டினம், பாரதீப், தூத்துக்குடி, கொச்சின், கோவா என்று பல துறைமுக நகரங்கள் நாட்டின் பொருளாதாரத்துக்கு வலு சேர்ப்பவையாக உள்ளன. நம்முடைய ஏற்றுமதி, இறக்குமதி மிகப் பெரும்பாலும் இந்த துறைமுகங்களை நம்பித்தான் உள்ளன. ஏன் அமெரிக்காவின் நாற்பது சதவீத மக்கள் கடலை ஓட்டித்தான் வசிக்கிறார்கள், தொழில் புரிகிறார்கள். இந்தியாவுக்கு அருகில் உள்ள மாலத்தீவு என்ற நாடு கூட கடுமையாக பாதிக்கப்படும் என எச்சரிக்கையும் அளிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் கடல்நீர் மட்ட உயர்வு என்பது இந்த நகரங்களைக் கடுமையாக பாதிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். பசுமை இல்ல வாயுக்கள் எனப்படும் வாயுக்கள் நமது பூமியில் இருந்து வெளியேறி காற்று மண்டலத்தில் சேர்வதுதான் இதற்கு முக்கிய காரணம். அதற்கு தொழிற்சாலைகள், வாகனப் போக்குவரத்து, தாவர எரிபொருள் மிக அதிக அளவு பயன்படுத்துதல் ஆகியன காரணம் என்று கூறப்படுகிறது.

உலக அளவில் வளர்ந்த நாடுகளுக்கும், வளரும் நாடுகளுக்கும் இது குறித்து பல கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வருகின்றன.  என்றாலும் கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவதை கண்கூடாக காண முடிகிறது. பனிப்பாறைகள், படிவங்கள் விரிசல் கண்டு வருவதையும், பனிப்பரப்பு குறைந்து வருவதையும் தகவல்கள் உறுதி செய்கின்றன. இது போன்ற நிலையில் சுற்றுச்சூழல் நடவடிக்கைகள் என்பது உலக அளவில் செயல்பட்டால்தான் இது போன்ற ஆபத்துகளில் இருந்த மீள முடியும் என்பதை உணர வேண்டும். ஏனென்றால் நமக்கு சென்னை, மும்பை, கொல்கத்தா மட்டும் அல்ல, எந்த நகரமும் கடல் நீரால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது.