அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகல்

ராஜதந்திரிஸ்டாலினாராமதாஸா?

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் ராஜதந்திர வலையில் பாமக வீழ்ந்து விட்டதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் விடுபட்டுப் போன 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக மாவட்டங்களாக பிரிக்கப்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9ம் தேதி நடைபெறவுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுநாளே தனித்துப் போட்டி என்னும் அறிவிப்பை பாமக வெளியிட்டுள்ளது. இப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களில் 7 மாவட்டங்கள் வடதமிழகத்தில் உள்ளன. இந்த 7 மாவட்டங்களிலும் பாமகவுக்கு கணிசமான செல்வாக்கு உள்ளது. அதேபோல அதிமுக அணியில் போதுமான இடங்கள் தரமாட்டார்கள் என்பதற்காகவும் இந்த முடிவை பாமக எடுத்திருக்கலாம்.

இதன் காரணமாக திமுக அணிக்கு, அதிமுக அணி போட்டியே கொடுக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. கடந்த பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் பாமக கூட்டணியில் இருந்த போதே வடதமிழகத்தில் மொத்தமுள்ள 65 தொகுதிகளில் 54 தொகுதிகளில் திமுக வெற்றியைப் பெற்றுள்ளது. கடந்த பேரவைத் தேர்தலில் வடதமிழகத்தில் மையப் புள்ளியாக இருந்த வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை இப்போது ஸ்டாலினும் அமல்படுத்தியுள்ளதால் அந்தபுள்ளி நீர்த்துப் போய்விட்டது.

இந்நிலையில், அதிமுக, பாமக தனித்து களம் இறங்கும்போது வன்னியர் வாக்குகள் அதிமுக, பாமக, திமுக என மூன்றாகப் பிரியும் நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாகவே திமுக எளிதில் வெற்றிக்கோட்டை தொடும் நிலையில் உள்ளது. மேலும், அதிமுக – பாமக தனித்து களம் இறங்கியுள்ளதால் நாம் தமிழர், தேமுதிக போன்ற கட்சிகள் முழுமூச்சாகக் களத்தில் இறங்கி தங்களது வாக்கு வங்கியை உயர்த்தும் வாய்ப்பும் உள்ளது.

வடதமிழகத்தில்  7  மாவட்டங்களிலும் தனித்து களம் கண்டால் தான் தனது பலத்தை அரசியல் களத்தில் காட்ட முடியும் என்றும், எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சி, 2024 மக்களவைத் தேர்தல், 2026 பேரவைத் தேர்தல் ஆகியவற்றில் முக்கிய அரசியல் முடிவுகளை எடுக்க இப்போதைய ஊரக உள்ளாட்சி தேர்தல் தான் உரைகல்லாக இருக்கும் என்று கணக்குப் போடுகிறது பாமக.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை ஆளும் கட்சிகளே ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவுடன் கூட்டணியாக ஊரக உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பது பாமகவுக்கு ஒத்துவராது என்று கணக்குப் போடுகிறார் ராமதாஸ். உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை உள்ளூர் செல்வாக்கை மட்டுமே மையமாக வைத்து மக்கள் வாக்களித்தாலும் மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பதவிக்கு கட்சிகளின் சின்னம் பயன்படுத்தப்படுவதால் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் பெறும் வாக்கு வங்கியும் அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறிவிடும்.

இப்போதைய சூழலில் வட தமிழகத்தில் 7 மாவட்டங்களிலும் அதிமுகவுடன் கூட்டணியாக போட்டியிட்டால் பாமக வாக்குகள் அதிமுகவுக்கு பரிமாற்றம் ஆகுமே தவிர, அதிமுக வாக்குகள் பாமகவுக்கு பரிமாற்றம் ஆகாது என்றும், கூட்டணியாக இருக்கும்போது அதிக எண்ணிக்கையில் தங்களது கட்சி நிர்வாகிகளுக்கு போட்டியிட வாய்ப்பும் கிடைக்காது. எனவே, கூட்டணியால் அதிமுகவுக்கு அதிக லாபம், பாமகவுக்கு அதிக நஷ்டம் என்ற முடிவுக்கு பாமக வந்துவிட்டதால் தான் தனித்துப் போட்டி என்ற முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

வடதமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 7 மாவட்டங்களிலும் வன்னியர்கள் அடர்த்தியாக (அதாவது 30 சதவீதம்) உள்ள பகுதியாக இருப்பதால் இப்போதே தனித்து நின்றுவிட்டால் தங்களது வாக்கு வங்கியை அதிமுக, திமுக கரைத்துவிடாமல் பாதுகாக்கலாம் என்ற முன்முடிவுக்கும் பாமக வந்திருக்கக்கூடும்.

அதிமுக அரசு பேரவையில் கொண்டுவந்த 10.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை திமுகவும் அப்படியே நிறைவேற்றி அரசாணை வெளியிட்டது, 1987ல் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தியபோது காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் இறந்த 21 சமூகநீதிப் போராளிகளுக்கு விழுப்புரத்தில் மணி மண்டபம் கட்டும் அறிவிப்பு, திமுகவுக்கு உதயசூரியன் சின்னம் கொடுத்த ஏ.கோவிந்தசாமிக்கு விழுப்புரத்தில் சிலை, மணிமண்டபம் கட்டும் அறிவிப்பு ஆகியவற்றால் பேரவைத் தேர்தலின்போது அதிமுக கூட்டணிக்கு வாக்களித்த வன்னியர் வாக்குகளில் ஒரு குறிப்பிட்ட பகுதி மீண்டும் திமுகவை நோக்கி நகரக்கூடும்.

வன்னியர் வாக்குகள் திமுகவை நோக்கி நகர்வது அன்புமணி ராமதாஸின் எதிர்கால வளர்ச்சிக்கு உகந்தது அல்ல. எனவே, தொடர்ந்து தனித்து களம் இறங்குவதால் மட்டுமே பாமகவின் வாக்கு வங்கியை உயர்த்த முடியும், குறைந்தபட்சம் இருக்கும் வாக்கு வங்கியை தக்கவைக்க முடியும் என்பதும் ராமதாஸின் அரசியல் கணக்காக இருக்கக்கூடும். குறிப்பாக நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் பாமக 3.8 சதவீதத்துக்கு சரிந்ததால் தான் இந்த முடிவுக்கு ராமதாஸ் வந்திருக்கக்கூடும். நடந்து முடிந்த பேரவைத் தேர்தல் முடிவுகளை ஒப்பிட்டு பார்க்கும்போது 9 மாவட்டங்களில் திருநெல்வேலி, தென்காசி தவிர பிற மாவட்டங்களில் திமுகவின் கை ஓங்கியுள்ளது தெளிவாக தெரிகிறது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 13 தொகுதிகளில் மூன்று தொகுதிகளிலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 11 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டும், அதேபோல விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 11 தொகுதிகளில் 4 தொகுதிகளை மட்டுமே அதிமுக கைப்பற்றியுள்ளது. திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 10 தொகுதிகளில் 4 தொகுதிகளை மட்டுமே அதிமுக கைப்பற்றியுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் மட்டுமே அதிமுக பலமான நிலையில் உள்ளது. காரணம், அங்கு கணிசமாக வாழும் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் அவர்களின் 7 உள்பிரிவுகளையும் சேர்த்து தேவந்திரகுல வேளாளர் என பெயர் மாற்றம் செய்து உதவிய பிரதமர் மோடி மீதான அபிமானத்தால் அதிமுகவுக்கு வாக்களித்துள்ளனர்.

அதேபோல பிற 7 மாவட்டங்களில் பாமக துணையின்றி திமுகவுக்கு, அதிமுகவால் போட்டி கொடுப்பது சிரமமான விஷயம் தான். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரலாற்றை ஆய்வு செய்தால் அதிமுக மோசமான தோல்வி அடைந்த 1996 பேரவைத் தேர்தல், அதிமுக ஆட்சியை இழந்தபோதும் கணிசமான தொகுதிகளை பெற்றிருந்த 2006 பேரவைத் தேர்தல் ஆகியவற்றுக்குப்பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு பெரிதாக போட்டியை அதிமுகவால் கொடுக்கவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.

அப்போதைய தேர்தல்களில் மதிமுக, தேமுதிக கட்சிகள் பலம் பெற்றன. இப்போது அதிமுக ஆட்சியை இழந்தபிறகும் 66 தொகுதிகளை கைப்பற்றியிருக்கும் நிலையில், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக எப்படி சாதிக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்திருத்து தான் பார்க்க வேண்டும். 1996, 2006 உள்ளாட்சித் தேர்தல்கள் போல இப்போதும் அதிமுக பலவீனமடைந்தால், அதை சாதகமாகப் பயன்படுத்தி நாம் தமிழர் கட்சி வளரக்கூடும். ஏற்கெனவே பேரவைத் தேர்தலில் 6.85 சதவீத வாக்கு வங்கியுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ள நாம் தமிழர் கட்சியை வளரவிடுவது பாமகவின் எதிர்கால அரசியலுக்கு நல்லதல்ல என்பதும் ராமதாசுக்கு புரிந்திருக்கும். மேலும், தமிழகத்தைப் பொறுத்தவரை இந்திரா காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அந்த அணி மிகப்பெரிய வெற்றியை பெற்றுவிடுகிறது என்பதை 1971, 1980, 1984, 1989, 1991, 2004, 2019 மக்களவைத் தேர்தல் முடிவுகளில் இருந்து உணர முடியும். 2024 மக்களவைத் தேர்தலிலும் ராகுல் காந்தியே பிரதமர் வேட்பாளராக திமுக – காங்கிரஸ் கூட்டணி அறிவிக்கும்போது மீண்டும் அதே முடிவே வரக்கூடும்.

திமுக முதல்வர் ஸ்டாலினை பொறுத்தவரை அதிமுக அணி உடைய வேண்டும் என தொடர்ந்து காய்நகர்த்தி வந்தார். பாறை போன்ற அதிமுக  – பாஜக கூட்டணியை உடைப்பது எளிதான விஷயம் அல்ல. ஆனால், அடிக்கடி கூட்டணி மாறும் தன்மை கொண்ட பாமகவை அதிமுகவில் இருந்து கழற்றிவிடுவது மிகவும் சுலபம் என்பதால் அதற்கேற்ற அரசியல் நகர்வுகளை சில மாதங்களாகவே ஸ்டாலின் செய்து வந்ததாகத் தெரிகிறது.

பாமகவும் ஸ்டாலின் விரித்த வலையில் கொஞ்சம் கொஞ்சமாக வேண்டும் என்றே விழத் தொடங்கியது. வன்னியர் வாக்குகளை உடைப்பதற்காக 10.5 சதவீத இடஒதுக்கீடு, சமூகநீதிப் போராளிகளுக்கு மணிமண்டபம், ஏ.கோவிந்தசாமிக்கு சிலை, மணிமண்டபம் போன்ற அறிவிப்புகளை பேரவையில் ஸ்டாலின் அறிவித்ததால் இனிமேல் அதிமுக கூட்டணியில் தொடர்ந்தால் வன்னியர் வாக்குகளை தாங்களும் இழக்க நேரிடும் என்ற முடிவுக்கு பாமக வந்துவிட்டது. இதனால், பேரவையில் முதல்வர் ஸ்டாலினை புகழும் நிலைக்கு பாமகவும் தள்ளப்பட்டது. ஒருகட்டத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்துப் போட்டி என்ற மனநிலைக்கு பாமக வந்தததற்கு ஸ்டாலின் விரித்த இந்த ராஜதந்திர வலை தான் காரணம்.

பாமகவுக்கும் 2009, 2019, 2021 தேர்தல்களில் அதிமுக அணியில் வெற்றி கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் மனதளவில் இருந்தது. மேலும், தங்களது வாக்குகள் அதிமுகவுக்கு முழுமையாக பரிமாற்றம் ஆகி அதிமுக வெற்றி பெறுகிறது, ஆனால், அதிமுக வாக்குகள், தங்களுக்கு பரிமாற்றம் ஆவதில்லை என்ற மனக்குறையும் பாமகவுக்கு உள்ளது. இதன் விளைவாகவே அரசியல் போக்கை மாற்ற வேண்டும் என்ற முடிவுக்கு மருத்துவர் ராமதாஸ் வந்துள்ளார்.

2009 முதல் தொடர்ந்து 12 ஆண்டுகளாக தோல்வி வளையத்தில் இருக்கும் பாமக, அதிமுக கூட்டணியில் நீடிக்கும்போது 2024 மக்களவைத் தேர்தலிலும் வெற்றிப் பாதைக்கு செல்வது கடினமாகி விடகூடும். எனவே, இப்போதே ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணியில் இருந்து விலகிவிட்டால் ஊரக உள்ளாட்சி, நகர்ப்புற உள்ளாட்சி என இரண்டிலும் தனித்து நின்று பலத்தைக் காட்டும்போது ஒருவேளை மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து வாக்கு கேட்கும் திமுக – காங்கிரஸ் அணியில் இடம் கிடைத்தால் வெற்றிக் கூட்டணியில் இடம்பெறலாம்.

அப்படியே இடம் கிடைக்காவிட்டாலும் 2014 மக்களவைத் தேர்தல், 2016 பேரவைத் தேர்தல் போல எதிர்வரும் 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் 2026 பேரவைத் தேர்தலில் தனித்து களம் இறங்குவது தான் எதிர்காலத்தில் அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு உகந்த அரசியல் சூழ்நிலையை உருவாக்கும் என்பது மருத்துவர் ராமதாஸின் எண்ணமாக இருக்கக்கூடும்.

எப்போதுமே நிகழ்கால, எதிர்கால அரசியல் சூழ்நிலைகளை மனதில் வைத்து வெற்றிகரமான அரசியல் நகர்வுகளை தான் செய்து வந்திருக்கிறார் ராமதாஸ்.

அவரது இப்போதைய அரசியல் நகர்வு வெற்றிகரமானதா, இல்லையா என்பதை ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாமக பெறப் போகும் வாக்கு வங்கி உணர்த்தும்.

பாமகவின் அரசியல் கணக்கு

இது குறித்து அரசியல் விமர்சகர் ரிஷி கூறும்போது,  ஊரக,  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை இணைத்து நடத்தியிருந்தால் அதிமுக – பாமக கூட்டணி நீடித்திருக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.  இதற்கு காரணம், நகர்ப் பகுதிகளில் பாமக செல்வாக்கு மிகவும் குறைவு.

2011ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைவர் மு.க.கருணாநிதி அனைத்து கட்சிகளையும் தனித்து போட்டியிட வேண்டிய சூழலை உருவாக்கியபோது பாமக 3.5 சதவீத வாக்குகளை தான் பெற்றது. இதை நன்கு உணர்ந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின்,  9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை தனியாக நடத்தினால் வடதமிழகத்தில் கிராமங்களில் அதிக செல்வாக்கு கொண்ட பாமக தனித்து களம் இறங்கும் என்பதை முன்கூட்டியே உணர்ந்துவிட்டார்.

பாமகவைப் பொறுத்தவரை அதிமுக கூட்டணியில் போதிய இடங்கள் கிடைக்காது என்றும் ஒருவேளை தனித்து களம் இறங்கினால் தங்களது வாக்கு வங்கியை நிரூபிக்க இயலும் என்றும் அதிலும் குறிப்பாக விழுப்புரம்,  விக்கிரவாண்டி,  சோளிங்கர், ஆர்க்காடு,  திண்டிவனம் ஆகிய பேரவைத் தொகுதிக்குட்பட்ட ஒன்றியங்களில் ஒரு சில ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகளை பாமக பெற முடியும் என ராமதாஸ் கணக்கு போட்டுள்ளார்.

இதற்கு முக்கிய காரணம்,  2021 பேரவைத் தேர்தலில் பாஜக,  பாமகவையும் சமமாக அதிமுக நடத்தி பாஜகவுக்கு 20,  பாமகவுக்கு 23 என தொகுதிகளை ஒதுக்கியது ராமதாசுக்கு மிகுந்த மனவேதனையை கொடுத்திருக்கும்.  அதன் காரணமாக பாமக வாக்கு வங்கி 3.8 சதவீதத்துக்கு போய் விட்டது என்றும் ராமதாஸ் கணக்குபோட்டிருப்பார். இதில் இருந்து மீளவே தனித்து தங்களது பலத்தை காட்டவே பாமக தனித்து போட்டியிடுகிறது என்றார் ரிஷி.