இலவச மருத்துவ ஆலோசனை முகாம்: தொடங்கி வைத்த வானதி சீனிவாசன்

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மக்கள் சேவை மையம் மற்றும் ஸ்ரீ சிவா மருத்துவமனை சார்பில் பெண்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் கோவை புலியகுளம் பகுதியில் நடைபெற்றது.

இம்முகாமினை பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

இம்முகாமில் புலியகுளம் மற்றும் அம்மன்குளம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு இலவச மருத்துவ ஆலோசனைகள் பெற்றனர். மருத்துவ ஆலோசனைக்கு பின் அறுவை சிகிச்சைக்கான தேவை இருப்பவர்களுக்கு பிரதமர் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இம்முகாமினை தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், ‘ பிரதமரின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று முதல் அக்டோபர் 7ஆம் தேதி வரை பல்வேறு மக்கள் நலத் திட்டப் பணிகள் பாஜக சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெண்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றுள்ளது. அறுவை சிகிச்சைக்கு தேவையுள்ள பெண்களுக்கு இலவச சிகிச்சை மேற்கொள்ளவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெண்கள் பொதுவாக தங்களது உடல் நலம் குறித்து மருத்துவ ஆலோசனைகள் பெறுவதில் தயக்கம் காட்டக் கூடியவர்கள். இந்த நிலையில் அவர்களது குடியிருப்புகளுக்கு அருகில் இலவச மருத்துவ முகாம் நடத்தி ஆலோசனைகள் வழங்கி வருகிறோம். இதற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் மக்களுக்கு விரைவாக தடுப்பூசி செலுத்திய நாடுகளில் முதன்மையாக இந்தியா இடம் பெற்றுள்ளது என தெரிவித்தார்.