தமிழ்நாட்டின் ஆளுநராக பொறுப்பேற்றதற்கு ஆர்.என். ரவி பெருமிதம்

ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தமிழ்நாட்டின் 26வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றார் ஆளுநர் விதிகளுக்கு உட்பட்டு, தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக உழைப்பேன் என புதிய ஆளுநராக பதவி ஏற்றுள்ள ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய ஆளுநர் ஆா்.என்.ரவிக்கு சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி பதவியேற்பு உறுதிமொழி செய்து வைத்தார்.

இந்த நிகழ்வில் முதல்வா் மு.க.ஸ்டாலின், பேரவைத் தலைவர் அப்பாவு, அமைச்சா்கள், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஜி.கே. வாசன், கே.பி, முனுசாமி, வேலுமணி, வைத்திலிங்கம், தங்கமணி தனபால் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டனர்.

புதிய ஆளுநராக பதவி ஏற்ற பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஆர்.என்.ரவி, வணக்கம் என தமிழில் கூறி செய்தியாளர் சந்திப்பை தொடங்கினார். பின்பு பேசிய அவர், ‘ பாரம்பரியம், பண்பாடு கொண்ட பழம்பெருமை மிக்க தமிழ்நாட்டில் ஆளுநராக பொறுப்பேற்றதற்கு பெருமைபடுகிறேன். பழமையான தமிழ்மொழியை கற்க விரும்புகிறேன்.

தமிழ்நாட்டின் மேம்பாட்டிற்க்காக அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக உழைப்பேன். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு தமிழ்நாட்டில் உள்ளது. ஆளுநர் பதவி அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது. தமிழ்நாடு அரசு சிறப்பாக உள்ளது” என தெரிவித்தார்.