பள்ளி மாணவர்களுக்கு போக்சோ சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் சுண்டக்காமுத்தூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின்பேரில் காவல்துறையினர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே போக்சோ சட்டம் (சிறார்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம்) குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா அச்சுறுத்தலால் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டிருந்த இந்நிலையில், கடந்த சில நாட்களாக இணையதளம் வாயிலாக இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. தற்போது பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள சூழலில் காவல்துறை அதிகாரிகள் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று விழிப்புணர்ச்சி நடத்தி வருகின்றனர்.

அதன்படி பேரூரை அடுத்த சுண்டக்காமுத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு காவல்துறை அதிகாரிகள் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

போக்சோ சட்டம் யார் மீது பாயும்? குழந்தை திருமணம் செய்து வைத்தால் யாருக்கு என்ன தண்டனைகள்? சமூக ஊடகங்களின் பயன்பாட்டு முறை, போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் உள்ளிட்ட விவரங்கள் இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டன.