சூழல்தொடர்

நல்லா இருக்கீங்களா?

நம்ம ஊரில் யாரையாவது பார்த்தால் “நல்லா இருக்கீங்களா?” என்று கேட்பது வழக்கம். அது நமது பண்பாடு. ஆனால் இன்று நிலைமை வேறு. நாம் மட்டும் இந்த பூமியில் தனியாக நல்லா இருந்து விட முடியாது. நம்மைச் சுற்றி இருக்கிற அனைத்தும் நல்லா இருக்க வேண்டும். நாம் குடிக்கின்ற தண்ணீர் நல்லா இருக்க வேண்டும். நமது நதிகள் நல்லா இருக்க வேண்டும். இப்படியே உலகம் முழுவதும் நல்லா இருந்தால் தான் நாமும் “நல்லா இருக்க முடியும்”. ஏனென்றால் எங்கோ ஒரு மூலையில் உள்ள சீனாவின் வூஹான் நகரில் சில பேருக்கு வந்த “கொரோனா வைரஸ்” அவர்களை நல்லா இருக்கவிடவில்லை. அங்கிருந்து கிளம்பி உலகெங்கும் சுற்றுப் பயணம் செய்து அழையா விருந்தாளியாய் பல நாடுகளுக்கும் வந்து ஜம் என்று உட்கார்ந்து கொண்டு, போகாமல் அடம் பிடிக்கிறது. நாமும் பல ஆயிரம் பேரை பலி கொடுத்திருக்கிறோம்.

இன்னும் ஒரு பக்கம் அது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வூஹான் நல்லா இருந்திருந்தால் நாமும் நல்லா இருந்திருப்போம். உலகம் இன்று சுருங்கி விட்டது, உள்ளங்கையில் உலகம் என்று எல்லாம் பேசியது, வேறு வகையில் நமக்கு வேட்டு வைத்துவிட்டது. விமானம், ரயிலில் எல்லாம் கோவிட் 19 வந்து இறங்குகிறது. அன்று கர்ணனுக்கு கவச குண்டலம் போல இன்று நமக்கு முகக்கவசம், தடுப்பூசி, சானிடைசர் ஆகிவிட்டது. இது கொரோனாவுக்கு மட்டும் அல்ல, உலகமே இன்று சுற்றுசூழல் சீர்கேட்டால் சிக்கி தவிக்கிறது.

காற்று மற்றும் நீர் மாசுபாடு, காலநிலை மாறுதலால் இன்று மனிதர்களோடு பல்வேறு உயிரினங்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. பஞ்சாபில் கோதுமை வயலில் அறுவடைக்குப் பின் தீ வைத்தால் புகை கிளம்பி, டில்லியில் குழந்தையின் நுரையீரல் பாதிக்கிறது. நூறு ஆண்டு வராத மழை ஒரே நாளில் கொட்டுகிறது. ஆங்காங்கே காட்டுத்தீ பற்றி எரிகிறது. இதற்கெல்லாம் ஏதாவது ஒரு குறிப்பிட்ட பொதுக் காரணம் இருக்கிறதா என்று பார்த்தால் கண்டிப்பாக இருக்கிறது. அது தான் சுற்றுச்சூழல் சீர்கேடு. அதனால் வந்தது தான் தற்போது ஏற்படும் பல சிக்கல்களும், பாதிப்புகளும் என்றே கூறலாம்.

இதற்கு முன்பு வெள்ளம் வரவில்லையா, காட்டுத்தீ எரியவில்லையா என்று கேட்கலாம். ஆனால் கடந்த இரு பத்தாண்டுகளைப்போல எப்போதும் முறை தவறி மழையும் பெய்ததில்லை, வர்தா, கஜா என்று புயல் வாரிச் சுருட்டியதும் இல்லை, மற்ற நாடுகளில் அமெரிக்கா, துருக்கி, கிரீஸ், ஆஸ்திரேலியா என்று காட்டுத் தீயும், சீனா தொடங்கி பல நாடுகளில் வெள்ளம் புயல் என்று இயற்கை கொந்தளித்ததும் இல்லை.

உலகெங்கும் உள்ள நாடுகள் இதுகுறித்து தொடர்ந்து மாநாடுகள் நடத்தி, தீர்மானங்கள் நிறைவேற்றி வருகின்றன. சுற்றுச்சூழல் குறித்த பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. சூழலியல் அறிஞர்களும், ஆர்வலர்களும் கடுமையாக போராடி வருகின்றனர் என்றாலும் வளர்ச்சியின் பெயரால் நடைபெறும் பல்வேறு நடவடிக்கைகள், இயற்கைக்கு எதிரானதாக சுற்றுச் சூழலுக்கு பாதகமாகத் தான் இருக்கின்றன. உலகெங்கும் நாகரீகத்தின் மையமாக இருந்த நதிகள் இன்று கழிவுநீரைச் சுமந்து செல்லும் ஒடைகளாக பல இடங்களில் காட்சி தருகின்றன. இன்னொருபுறம் குடிக்க நீரின்றி மக்கள் கூட்டம் அலைகிறது. வழக்கம் போல தண்ணீரை விற்று காசாக்குவதும் நடைபெறுகிறது. இந்த நிலையில் திரும்பிய பக்கம் எல்லாம் சூழல் சீரழிவு என்று கூறாமல், நம்மால் முடிந்ததைச் செய்யும் மக்கள் கூட்டமும் இருக்கிறது.

தனிநபராக நாமும், அமைப்புகளாக நிறுவனங்கள் தொடங்கி, அரசாங்கம் வரை இந்த சுற்றுச் சூழலை பாதுகாக்க என்ன செய்ய முடியும், தற்போதைய சூழலியல் சிக்கல்கள் என்ன அவற்றை சீர்செய்வது எப்படி என்று அலசுவதே இந்த தொடரின் நோக்கம்.

ஒரு காலத்தில் இலவசமாக, இயல்பாக கிடைத்து வந்த குடிநீர் இன்று விலையுள்ள பொருளாகி உள்ளது. அதை அனைத்து மக்களுக்கும் அடிப்படை உரிமையாக வழங்கி வந்த அரசின் பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி, உள்ளாட்சி போன்ற அமைப்புகள் இன்று தனது கடமையைச் செய்ய முடியாமல் சிக்கித் திணறி வருகின்றன.

கோவை போன்ற இடங்களில் ஒருபடி மேலே போய் அடிப்படைத் தேவையான குடிநீர் வழங்கல் ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்திருப்பதாக செய்திகள் வருகின்றன. நகர அமைப்பு என்பது பல இடங்களில் நரக அமைப்பாக மாறிவருகிறது. குடிநீர் வழங்குதல் தொடங்கி கழிவுநீர் வெளியேற்றம் வரை பல சுற்றுச்சூழல் சிக்கல்கள் இருக்கின்றன. அதிலிருந்து வெளியேற முடியாமல் உள்ளாட்சி அமைப்புகள் விழிபிதுங்கி நிற்கின்றன.

இது நாள் வரை இருந்து வந்த, நமது இயற்கை சார்ந்த பண்பாட்டு வாழ்க்கை முறை மாறி நுகர்வோர் கலாச்சாரமாக வளர்ந்து இன்று கடன் வாங்கியாவது பொருள் குவிக்கும் சமூகமாக வளர்ந்து நிற்கிறோம். கழிப்பிட வசதியை விட கலர் டிவி வாங்குவது நோக்கமாக இருக்கிறது. இயற்கையை ஒட்டி அனுசரித்து வாழ்வதே உண்மையான வாழ்க்கை முறையாகும். அதனை எதிர்த்து வாழ முற்படுவது நடைமுறையில் சாத்தியமே இல்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்த பூமி நமது முன்னோர் நமக்கு நல்ல முறையில் வாழ்வதற்காக கொடுத்தது. அதனை அப்படியே, பாதுகாப்பாக அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டியது நமது கடமையாகும்.