இந்தியாவில் ஃபோர்டு கார் உற்பத்தி விரைவில் நிறுத்தம்

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி வாகன நிறுவனமான ஃபோர்டு (ford), இந்தியாவில் சென்னையிலும், குஜராத் மாநிலத்தின் சனந்த் நகரிலும் வாகன உற்பத்தி ஆலையை நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் ஃபோர்டு மோட்டார் நிறுவனங்களை மூட அந்நிறுவனம் முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபோர்டு நிறுவனம் நஷ்டத்தில் இயங்கிருவதாகவும் எனவே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இந்த முடிவை அமல்படுத்துவதற்கு ஓராண்டு காலமாகும் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இருப்பினும், இந்தியாவில் இறக்குமதியின் மூலம் கார்கள் விற்பனை செய்யப்படும் என செய்தி வெளியாகியுள்ளது. அந்தவகையில், காரை ஏற்கனவே வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவை அளிக்கப்படவுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவலை ஃபோர்டு நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.

ஃபோர்டு ஆலைகள் மூடப்படுவதால் சுமார் 4000 தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் எனக் கருதப்படுகிறது. ஃபோர்டு நிறுவனம் 90களின் இடைப்பகுதியிலிருந்து இந்தியாவில் வாகன உற்பத்தி ஆலையை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ஜெனரல் மோட்டாரஸ், ஹார்லி டேவிட்சன் ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் கார் உற்பத்தி ஆலைகளை மூடவுள்ளது.