ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் ஒருங்கிணைப்பு விழா

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 30ம் ஆண்டு ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சித்ரா, எஸ்.என்.ஆர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசாமி பங்கேற்ற இவ்விழாவில் பிரிக்கால் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை துணை மேலாளர் கிருத்திகா செல்வராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

எஸ்.என்.ஆர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் பேசும்போது, கல்லூரிப்பருவ மகிழ்ச்சியில் உங்கள் குறிக்கோளை மறந்துவிடாதீர்கள். பெருந்தொற்றை எதிர்த்து உடல்நலத்துக்கும் கல்வியைத் தொடரவும் நாம் இடைவிடாது முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். தகவல்களைத் திரட்டுவது மட்டுமல்லாமல் சுய சிந்தனையும் செயல்திறனும் மிக்க சமூக அக்கறை கொண்ட பொறுப்புள்ள குடிமக்களாக நீங்கள் மாற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கல்லூரி முதல்வர் சித்ரா பேசுகையில், சிந்தனை, திறமை, அறிவு மூன்றையும் மேம்படுத்திக் கொள்வதை மாணவியர் முக்கியக் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும் என்றார். மேலும் கல்வி வளர்ச்சியோடு மாணவியரது பன்முகத் திறமைகள் மற்றும் ஆளுமை மேம்பாட்டில் கவனம் செலுத்தும் கல்லூரியின் செயல்பாடுகளைக் குறித்துக் கல்லூரி வாழ்வில் அடியெடுத்து வைக்கும் முதலாண்டு மாணவியருக்கு வழிகாட்டி உரையாற்றினார்.

தொடர்ந்து சிறப்பு விருந்தினர் கிருத்திகா செல்வராஜ் பேசும் போது, கல்வி மறுக்கப்பட்ட சூழலில் பிறந்தவர்கள் முத்துலட்சுமி ரெட்டி, மலாலா போன்றோர். தங்களுக்கான வாய்ப்புகளைத் தேடி அவர்கள் எடுத்த தொடர் முயற்சிகளின் பலன்தான் அவர்களின் வெற்றி. நீங்களும் உங்களுக்கான வெற்றிகளைத் தேடிப் பெற வேண்டும். கற்றலுக்கும் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் உதவும் இணைய தளங்கள், நூல்கள் சிலவற்றைக் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியைத் தொடர்ந்து முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் இணையவழியில் ஆரம்பமாகின.