தமிழக முதல்வருக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டை அனுப்பிய பா.ஜ.க தொண்டர்கள்

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை விதித்த தமிழக அரசை கண்டிக்கும் விதமாக கோவையில் பாஜக சார்பில் தமிழக முதலமைச்சருக்கு வாழ்த்து அட்டை அனுப்பும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டை அனுப்பும் போராட்டத்தை பாரதிய ஜனதா கட்சி நடத்தினர் .

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள தலைமை தபால் நிலையத்தில் பா.ஜ.க கலை மற்றும் கலாச்சார பிரிவினர் முதலமைச்சருக்கு இந்த வாழ்த்து அட்டையை அனுப்பினர்.

போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் முரளி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் பிரேம் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் 50 மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டனர்.