“புதிர்” தந்த “குரங்கு பொம்மை”

சுவாரசியம் மிகுந்த திரைக்கதையை அதன் ரசனை மாறாமல் காட்சிப்படுத்தி மக்களுக்கு அத்திரைப்படத்தின் தாக்கத்தை உருவாக்குவது இயக்குநர்தான். ஒரு இயக்குநர் என்பவர் தன் துறை சார்ந்து மட்டும் அல்ல, தனக்கு ஒத்துழைப்பு கொடுக்கக்கூடிய அனைத்து துறை சார்ந்தும் தெரிந்து வைத்திருப்பவர். அவ்வாறு தன்னுடைய அனைத்துத் திறமைகளையும் ஒரு சிறந்த திரைப்படத்தின் மூலம் வெளிப்படுத்திய பல இயக்குநர் இமயங்கள் நம் திரையுலகில் ஏராளமானோர் இருக்கின்றனர். உதாரணமாக, இயக்குநர் ஸ்ரீதர், பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம் போன்றவர்கள் தனக்கென ஒரு முத்திரை பதித்தவர்கள்.

காலம் காலமாக தன்னுடைய திறமையை சினிமா துறையில் வெளிப்படுத்த வேண்டும் என்று இளம் தலைமுறையினர் பலர் சென்னையை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். அதில் சிலர் வாய்ப்புகள் கிடைத்தாலும், அதனை சரியாகப் பயன்படுத்திக்கொள்வதில்லை. பலருக்கு வாய்ப்பே கிடைப்பதில்லை. ஆனால், தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தி, இன்று தன் திறைமையால் தனக்கென ஒரு இடம்பிடித்த ‘குரங்கு பொம்மை’ இயக்குநர் நித்திலன், இந்த வார நமது சினி மெயில் ‘விஐபி’.

‘‘எனக்கு சின்ன வயதில் இருந்து சினிமா பார்ப்பது வழக்கம். ஆனால் சினிமா துறைக்கு சென்று இயக்குநர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருந்தது கிடையாது. என்னை நானே கேட்டுக் கொள்ளும் ஒரே கேள்வி, நம்மால் சினிமாவில் வெற்றி பெற முடியுமா என்றுதான். முடியும் என்ற எண்ணத்தைவிட, முடியாது என்ற எண்ணம் எனக்குள் பல முறை தோன்றியது. முதலில் படிப்பைக் கவனிப்போம் என்று நினைத்து படிக்க ஆரம்பித்தேன். பிளஸ் 2 முடித்த பிறகு சினிமா மீது உள்ள காதல் எனக்கு அதிகமாக ஆரம்பித்தது. உடனே சென்னை, தரமணியுள்ள திரைப்படக் கல்லூரியில் சேர வேண்டும் என்றுதான் சென்னைக்கு வந்தேன். ஆனால் அங்கு எனக்கு படிக்க இடம் கிடைக்கவில்லை.  பிறகு ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி (விஸ்காம்) படிப்பை முடித்துவிட்டு குறும்படம் எடுக்க ஆரம்பித்தேன். முதலில், என்னால் என்ன கதை சொல்ல முடியும் என்பதை தீர்மானித்துக் கொண்டேன். நாம் எழுதும் கதை பார்க்கும் மக்களை ஈர்க்குமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் மக்களின் வாழ்க்கையில் உள்ள யதார்த்தத்தை படம் ஆக்கினால் மக்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள் என்பதை நன்கு புரிந்து கொண்டேன். அதன் பிறகு “நாளைய இயக்குநர் சீசன் 3” இல் வாய்ப்பு கிடைத்தது. என் திறமையின்மேல் நான் கொண்ட நம்பிக்கையின் காரணமாக அதில் வெற்றி பெற்றேன். நான் இயக்கிய “புதிர்” என்ற குறும்படத்தைப் பார்த்த நடிகர் விதார்த் என்னை அழைத்துப் பேசினார். படம் ரொம்ப நன்றாக உள்ளது. உங்களிடம் சினிமாவுக்கான கதை இருந்தால் சொல்லுங்க கேட்போம் என்று கூறினார்.

உடனே குரங்கு பொம்மை கதையைக் கூறினேன். அது, அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. அவரே தயாரிப்பாளரிடம் சொல்லி இந்த படத்தை நாம பண்ணலாம்னு முடிவு செய்து விட்டார். அதற்கு பிறகு, யார் யார் எந்த எந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்வதற்கு பல யோசனைகள் என்னுள் தோன்றியது. அப்போதுதான் பாரதி ராஜா அவர்கள் நம் படத்தில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். குரங்கு பொம்மை படம் எடுப்பதற்கு முன்பிருந்தே எனக்கு இயக்குநர் பாரதிராஜா சார் பழக்கம். பல தருணங்களில் சினிமாவைப் பற்றி பேசியிருக்கிறோம். குரங்கு பொம்மை படப்பிடிப்புத் தளத்தில், தான் ஒரு பெரிய இயக்குநர் இமயம் என்று காண்பித்துக் கொள்ளாமல் நடித்தவர் பாரதிராஜா அவர்கள்.

சில சமயங்களில் அவரின் அனுபவங்களை படப்பிடிப்புத் தளத்தில் என்னிடம் பகிர்ந்து கொண்ட பொழுது, பல விஷயங்கள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. படம் வெளியாகி, விமர்சன ரீதியாக பல பாராட்டுகளைப் பெற்றது. தமிழ் சினிமாவில் பல நல்ல கதைகள் வர வேண்டும் என்பது எனது ஆசை. மக்களின் வாழ்க்கைத் தரத்தில் இருந்து கதை வரும் சமயத்தில் சினிமா மீது உள்ள எதார்த்தம் நமக்கு புரியவரும். அதற்காக வியாபார ரீதியாக இருக்கும் படங்கள் வரக் கூடாது என்று நான் சொல்லவில்லை. அதுவும் முக்கியம். கதையுள்ள படங்களும் முக்கியம் என்பதை நான் உணர்த்த விரும்புகிறேன்.

மிக விரைவில் என்னுடைய அடுத்த படத்தை பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்வேன். எந்த திரைப்படமாக இருந்தாலும் சரி, அதனைத் திரையரங்கிற்கு சென்று பாருங்கள். சினிமாவை நம்பி பல குடும்பங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றது என்பதை ஒரு போதும் மறந்து விடாதீர்கள்’’.

— பாண்டிய ராஜ்.