பூச்சிமரத்தூர் சூழல் சுற்றுலா தங்கும் மையம் திறப்பு

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள பூச்சிமரத்தூர் சூழல் சுற்றுலா தங்கும் மையம் திங்கட்கிழமை முதல் மீண்டும் தொடங்குகிறது என்று வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்துக்குட்பட்ட பரளிக்காடு, பூச்சிமரத்தூர் சூழல் சுற்றுலா மையங்கள் உள்ளது. இது வனத் துறையினரால் பழங்குடியின மக்களை வைத்து பழங்குடியின மக்கள் நலனுக்காக நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பரளிக்காடு பூச்சிமரத்தூர் சூழல் சுற்றுலா மையங்கள் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டது. இந்த 2 சூழல் சுற்றுலா மையத்தை நம்பி அருகிலுள்ள பரளிக்காடு, பூச்சமரத்தூர், பில்லூர், நீராடி உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்களில் இருந்து பரிசல் ஓட்டிகள் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து வந்தது.

இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு கொரோனா பரவல் காரணமாக சூழல் சுற்றுலா மையங்கள் மூடப்பட்டது. சூழல் சுற்றுலா மையத்தில் காரமடை வனத்துறையினர் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பொது முடக்க காலத்தில் பல்வேறு புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

பணிகள் முடிவடைந்த நிலையில் முதல் கட்டமாக பூச்சிமரத்தூர் சூழல் சுற்றுலா தங்கும் மையம் வரும் திங்கட்கிழமை சுற்றுலா பயணிகளுக்காக திறக்க உள்ளதாக காரமடை வனச்சரகர் மனோகரன் தெரிவித்துள்ளார். இங்கு வருபவர்கள் coimbatoreewilderness.com என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும். அங்குள்ள 3 தங்கும் விடுதிகளில் தலா 4 பேர் என்ற கணக்கில் 12 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

வழக்கம் போல் இல்லாமல் தற்போது கொரோனா விதிமுறைகளை பின்பற்றி 50 சதவீத சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். மேலும் இரண்டு தவணை தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். கிருமிநாசினி கொண்டு வர வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். சுற்றுலா பயணிகள் வெப்ப நிலையைக் கண்டறிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மேற்கண்ட விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் அப்பொழுதுதான் சூழல் சுற்றுலா மையத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.