அறிவெனும் உலகிற்கு வழிகாட்டி! 

இயல்பாகவே, எந்த ஒரு துறையிலும் இரண்டாவதாக கால்பதிப்பவர்களை வரலாறு தன் தோள்களில் ஏற்றி புகழ்பாடாது என்ற சிந்தனை நிலவிவரும்போது, இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியாக வலம் வந்த இவரின் பிறப்பையும் சாதனைகளையும் இன்றும் நினைத்து நாடே பெருமைப்படுகிறது. அவரே சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்.

நம் பாரதத் திருநாடு ஈன்றெடுத்த முத்துக்களின் நடுவே ரத்தினம் போல் இவரை அனைவரும் கொண்டாட முக்கியக் காரணம் ஒரு பேராசிரியராக கல்வித் துறையிலும் மாணவ சமுதாயத்தின் மீது இவர் ஏற்படுத்திய தாக்கமே.

அறிவு என்ற ஒளியை ஏற்றி, அறம் என்ற வழியைக் காட்டி, நம்மை வெற்றியாளர்களாக உருவாக்கி வரும் அத்தனை ஆசிரியர் பெருமக்களையும் நினைவு கூர்ந்து நன்றி சொல்ல இவரின் பிறந்த நாளான செப்டம்பர் 5 ம் தேதி ஆசிரியர் தினமாக அரசால் அறிவிக்கப்பட்டது.

இந்த தருணத்தில் நம் கோவை பகுதியின் புகழ்பெற்ற கல்வியாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் தங்கள் ஆசிரியர்கள் பற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்ய தகவல்கள்:

மாணவர்களின் வளர்ச்சியே எனக்கு பெருமை!

-நீ. குமார், துணை வேந்தர், தமிழ்நாடு வேளாண் பல்கலை

“நான் படித்த காலத்தில் 5 ம் வகுப்பில் இருந்துதான் ஆங்கிலம் கற்றுக் கொடுத்தார்கள். ஆங்கிலம் என்றால்  அனைவருக்கும் ஒருவித பயம் இருக்கும். அச்சமயத்தில் தனபால் என்ற ஆங்கில ஆசிரியர் ஆங்கிலத்தில் உள்ள அடிப்படை இலக்கணம் பற்றி புரிய வைத்தார். அவை இன்றும் நினைவில் உள்ளது”.

உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது பெரிய நாயகம் என்ற ஆசிரியர் மாநிலத்தில் அல்லது மாவட்டத்தில் முதலிடம் பெறவேண்டும் என அடிக்கடி என்னை ஊக்கப்படுத்துவார். அவர் அளித்த ஊக்கத்தின் காரணமாக நான் படித்த பள்ளியில் முதலிடம் பெற்றேன்.

வேளாண் பல்கலையில் தோட்டக்கலைத் துறையில் சேர்ந்தேன். கல்லூரியில் எனக்கு கற்பித்த ஆசிரியர்கள், அவர்களின் அனுபவங்களைக் கொண்டு பாடங்களை  நடத்தினர். தோட்டக்கலையை பாடமாக மட்டுமல்லாமல் நடைமுறை அனுபவங்களோடும் எளிதாக புரியும்படி கற்றுக் கொடுத்தனர். எனக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் அனைவருமே என் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக இருந்தனர்.

துணை வேந்தராக ஆளுநரிடம் பணிநியமன ஆணை பெற்ற உடன் பேராசிரியர் இருளப்பன், தம்புராஜ் ஆகியோர் நான் பதவியேற்கும் நாளில் என்னைச் சந்தித்து, பாராட்டி இருக்கையில் அமர வைத்தனர். எனது வாழ்வில் மறக்க முடியாத தருணம் அது.

தற்பொழுது கற்றல் முறையில் அதிக மாற்றம் வந்துள்ளது. அத்துடன் கூகுள் தேடல் கருவியை அதிகளவில் பயன்படுத்துகிறோம். அதை ஒரு கருவியாக மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். டிஜிட்டல் கற்பித்தல் முறைகள் இருந்தாலும் வகுப்பறையில் ஆசிரியர்கள் நேரடியாக கற்றுக் கொடுக்கும் போது தான், உள்வாங்கிக் கொள்வது எளிதாக இருக்கும்.

வாழ்வில் எவ்வளவு உயர்ந்த நிலைக்குச் சென்றாலும் அந்நிலைக்கு ஆசிரியர் தான் காரணம் என்ற எண்ணம் மாணவர்களிடம் இருக்கும் வேண்டும். என்னிடம் கல்வி கற்ற பல மாணவர்கள் இப்பொழுது பல கல்லூரிகளில் பேராசிரியர்களாக இருப்பது எனக்குப் பெருமையாக உள்ளது.

சமூக வளர்ச்சிக்கு ஆசிரியர்களே உறுதுணை!

-பி. காளிராஜ், துணைவேந்தர், பாரதியார் பல்கலை

ஒருவரின் பொருளாதாரம் ஏழ்மை நிலையில் இருந்தாலும் விடாமுயற்சி இருந்தால் நினைத்த இலக்கை எட்ட முடியும். எனக்கு கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி இளங்கலை, முதுகலை, பி.ஹெச்டி படிப்புகளைப் படித்து நல்ல மதிப்பெண்களைப் பெற்றேன். வாழ்க்கையில் எந்த ஒரு சிறிய வாய்ப்பு கிடைத்தாலும் அதைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது வாழ்க்கையில் நான் கற்ற பாடம்.

“நான் முதுகலை படிக்கும்போது சண்முக சுந்தரம் என்ற ஆசிரியர் கல்வியை மாணவர்களுக்கு நகைச்சுவையோடு கூறி புரிய வைப்பார். ஒரு முறை பாடம் நடத்தினாலும் மனதில் பதிந்து விடும்”. ஆசிரியர்கள் பாடத்தைப் புரிந்து கொண்டு பின் மாணவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

நான் கல்லூரி படிக்கும் போது பேராசிரியர்கள் தங்கமணி, ஆல்பர்ட் மோகன் தாஸ் ஆகியோர் நான் உயர்ந்த  நிலைக்கு வரவேண்டும் என என்னை ஊக்குவித்தனர். எந்த ஆசிரியரும் தன்னுடைய மாணவன் உயர்ந்த நிலைக்கு வரும்போது மிகவும் மகிழ்ச்சி அடைவார். இது ஆசிரியர்களுக்கே உண்டான குணம்.

கல்வி என்பது சமூகத்திற்கானது. கல்வியினால் ஏற்படும் வளர்ச்சியின் மூலம் தேவையான கண்டுபிடிப்புகளை உருவாக்கி மக்களிடம் சேர்க்க வேண்டும். கல்வியையும், அதன் வழியாக உருவாகும் விஞ்ஞான வளர்ச்சியையும் மாணவர்கள் மூலமாக சமுதாயத்திற்கு கொண்டு சேர்ப்பவர்கள் தான் ஆசிரியர்கள்.

நல்ல குணங்களை விதைப்பவர்கள்

–  டாக்டர் நல்ல ஜி. பழனிசாமி, தலைவர், கே.எம். சி.ஹெச்

கற்கும் காலத்தில் நல்ல ஆசான் கிடைத்தால் படிப்பையும் தாண்டி பல திறமைகளையும், குணங்களையும் வளர்த்துக் கொள்ளலாம்.  நான் பெருந்துறையில் அரசுப் பள்ளியில் பயின்ற போது எனக்கு அப்படி ஒரு நல்ல ஆசிரியர் கிடைத்தார். அவர் பெயர் ராமராஜு நாயுடு. என் பள்ளி காலத்தில் மறக்கமுடியாத ஆசிரியர் அவர்.

ஒழுக்கம், கடின உழைப்பு, நாணயம், படிப்பின் முக்கியத்துவம் மற்றும் காந்தியம் ஆகியவற்றை எனது மனதில் ஏற்றியவர் இந்த மாமனிதர் தான். அந்த காலத்து ஆசிரியர் என்றால் அவர்தான் உதாரணம்.

இதுபோல் பாடப் புத்தகத்தையும் தாண்டி மாணவச் செல்வங்களுக்கு இந்த காலத்து ஆசிரியர்கள், பேராசிரியர்கள் தொடர்ந்து நல்ல குணங்களைக் கற்றுக்கொடுத்து, அவர்களுக்கு நம்பிக்கை தரும் வழிகாட்டிகளாக இருக்க வேண்டும்.

இந்த நல்ல நாளில் அனைத்து ஆசிரியர்களுக்கும் என் ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

போற்றுதலுக்குரியவர்கள்!

-சரஸ்வதி கண்ணையன், நிர்வாக அறங்காவலர், இந்துஸ்தான் கல்வி நிறுவனங்கள்  

                                      ஐந்து விரல்களும் வெவ்வேறு அளவில் இருந்தாலும், அவை எப்படி தனித்தன்மை கொண்டவையோ அதே போல் ஒவ்வொரு மாணவனும் தனித்தன்மை கொண்டவன் தான் என்பதை முன்னரே உணர்ந்து, அவர்கள் அனைவரின் அறிவிற்கு எட்டும்படி கல்வி செல்வத்தைச் சமமாய் வழங்குபவர்கள் ஆசிரியர்கள். மாணவர்களின்  முன்னேற்றத்திற்கு அடித்தளமிட்டு வரும் அத்தனை ஆசிரியர்களும் உலக மக்கள் அனைவரின் போற்றுதலுக்குரியவர்கள்.

குருவடி சரணம்!

-எம்.கிருஷ்ணன், நிர்வாக இயக்குனர், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்

‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்’ என்ற வரிக்கேற்ப  நம் பிஞ்சுக் கைகளைப் பற்றி தமிழ் அகரம் தொடங்கி  ஆங்கில எழுத்துக்கள் அனைத்தையும்  நமக்கு அறிவித்து, இந்த உலகை அறிய நமக்கு உதவியவர்கள் ஆசிரியர்களே.

இந்த உலகில் நடைபெறும் அனைத்தையும் அறிந்துகொள்ள தேவை மொழியறிவு. அதனை நம்முள் விதையாக விதைத்து நம்மை மலர வைத்த அந்த கரங்களுக்கு  நமது மனமார்ந்த  நன்றிகளை இந்நாளில் தெரிவிப்போம்.

அன்பையும், மரியாதையும் அர்ப்பணமாக்குவோம்!

டாக்டர் ஜே.எஸ்.புவனேஸ்வரன், இயக்குனர், பி.எஸ்.ஜி. மருத்துவமனை

குரு என்பவர் நம் வாழ்க்கையில் ஞானம் என்ற வெளிச்சத்தைக் கொண்டு வருபவர். எங்கு வெளிச்சம் உள்ளதோ அங்கு இருள் இருப்பதில்லை.

அப்படிப்பட்ட ஒரு பேராசிரியராக திகழ்ந்தவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். அவர் கல்வியறிவும்  மெய்யறிவையும் மிகுதியாய் கொண்ட  ஒரு தலைசிறந்த கல்வியாளர். இந்த நாளில் என்னுடைய ஆசிரியர்களை நினைவு கூறும் போது நான் நிஜமாகவே ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு மாணவனாக இருந்துள்ளேன் என்று உணர்கிறேன்.

நான் இன்றும் என்னுடைய கல்லூரி ஆசிரியர்கள், பள்ளி ஆசிரியர்களுடன்  வாட்ஸாப்  மற்றும் இதர சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்பில் உள்ளேன். அதே சமயம் என் உயர் நிலைப் பள்ளி ஆசிரியர்களின் உடல்நிலை குறித்த பிரச்சனைகளுக்கு உதவும் வகையில் இன்று நான் இருப்பதை ஒரு பாக்கியமாய் பார்க்கிறேன்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்று ஸ்லோகம் உணர்த்துவதைப் போல், ஒருவர் வாழ்வில் பெற்றோர் எவ்வளவு முக்கியமோ அதேபோல் ஆசிரியர்களும் முக்கியமானவர்கள். என்னுடைய ஆசிரியர்களை நான் மீண்டும் சேவிக்க இறைவன் எனக்கு வழங்கிய வாய்ப்பை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.

நமக்கு நல்லவற்றை கற்றுக்கொடுத்த ஆசிரியர்களுக்கு மரியாதையையும், அன்பையும் இந்நாளில் அர்ப்பணமாக்குவோம்.

கற்பிப்போம், முன்னேற்றுவோம்!

–  மணிமேகலை மோகன், நிறுவனர் & நிர்வாக அறங்காவலர், எஸ்.எஸ்.வி.எம் கல்வி  நிறுவனங்கள்

கல்வித்துறையில் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பங்கீடு அளப்பரியது. அவர் சிறந்த பேராசிரியராகவும், தத்துவ ஞானியாகவும், நாட்டின் ஆளுமைகளில் முக்கியமானவராக விளங்கினார். அவருக்கு இந்த ஆசிரியர்கள் தினத்தில் நம் மனமார்ந்த நன்றிகளைச் செலுத்துவோம்.

கல்வியாளராக நானும், ஆசிரியர்களாக நீங்களும் மாணவமணிகளுக்கு கல்விச் சேவை செய்வதையே தலையாயக்  கடமையாக கொண்டுள்ளோம்.  இதனை ஒரு கணம் நினைத்து பெருமைப்படுவோம், ஒன்றிணைந்து, தரமான கல்வியினை தொடர்ந்து வழங்குவதன் மூலம் நம் நாட்டை அனைவருக்குமான நந்தவனம் போல் ஆக்குவோம்.

இத்தனை காலமாய் நீங்கள் அர்ப்பணிப்போடு செய்த அறப்பணிக்கும், இந்த பேரிடர் காலத்திலும் தங்குதடையின்றி அனைவருக்கும் இணையவழியில் கல்வி சென்று சேர நீங்கள் எடுத்துவரும் முயற்சிக்கும் என் சிரம் தாழ்ந்த வாழ்த்துகள்.

ஆசிரியர்கள் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

நந்தகோபால், செயலர், ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி

ஆசிரியர் பணி என்பது மிகவும் மேன்மையான பணி. இந்தப் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசான்களும்  மாணவர்களின் வளர்ச்சி ஒன்றைத் தவிர வேறு எதையும் எதிர்பார்ப்பது இல்லை. மாணவர்களுக்கான நல்ல பாதையை அமைத்துத் தந்து அவர்களின் வெற்றியைக் கொண்டாடக்கூடிய, பெருமைப்படக்கூடிய  குணம் ஆசிரியர்களுக்கு அதிகம் உண்டு.

ஆனால் இன்றைய காலத்தில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையேயான பந்தத்தில் சிறு மாற்றங்கள் நேர்ந்துள்ளது கவனிக்கப்படவேண்டிய ஒன்று. அந்த காலத்தில் ஆசிரியர்கள் தான் அறிவிற்கு  ஆதாரமாய், மூலமாய் விளங்கினர். அவர்கள் சொல்வதே மாணவர்களுக்கு பாடம். ஆனால் இன்றோ மாணவர்கள் தங்களுக்கு தேவையான பாட அறிவைப் பெற பல வழிகள் உள்ளன.

இன்றைய காலத்தில் ஆசிரியர்களாய் உள்ளவர்கள் மாணவர்களின் மேல் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவது ஒரு பெரிய சவாலாக உள்ளது. அவர்கள் பல இடையூறுகளை சந்திக்க வேண்டியுள்ளது. மாணவர்கள் தங்கள் ஆசிரியரை வெறும் அறிவுசார்ந்த செய்திகளை வழங்குபவராக பார்க்காமல், தன்னுடைய குணத்தையும், பல திறன்களையும் மேம்படுத்த உதவும் வழிகாட்டியாக இருக்கவேண்டும் என்ற எதிர்பார்க்கின்றனர். இந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வண்ணம் ஆசிரியர்கள் இருக்க வேண்டியுள்ளது.

மாணவனின் வழிகாட்டியே ஆசிரியர்!

 –.எம். நடராஜன், முதன்மை செயலர், கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி  

ஆசிரியர் என்பவர் மாணவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்பவராக இருக்க வேண்டும். மாணவர்கள், ஆசிரியரை அணுகும் போது எவ்விதத் தயக்கமும், பயமும் இல்லாமல் பேசக்கூடிய வாய்ப்பை ஆசிரியர்கள் ஏற்படுத்தித் தரவேண்டும்.

“நான் பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரியில் படித்தபோது எனக்கு பேராசிரியராக இருந்த சுப்பையன் அவர்களின் வழிகாட்டுதலால் தொடர்ந்து அங்கேயே என் முதுகலை மற்றும் பி.ஹெச்டி படிப்பைத் தொடர்ந்தேன். கண்டிப்புடன் நடந்து கொண்டாலும் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டவர்”.

முந்தைய கால கட்டங்களில் ஒரு குறிப்பிட்ட விஷயங்களைப் பற்றிய தகவல் கிடைப்பது கடினம். ஆனால் இப்போது அனைத்து தகவலும் எளிதில் கிடைத்து விடுகிறது. மாணவர்களைப் படைப்பாற்றல் மிக்கவர்களாக உருவாக்க வேண்டும் என எண்ணுகிறோம். டிஜிட்டல் உலகத்தில் நிறைய மாற்றங்கள் வந்துள்ளதோடு கற்பித்தல் முறையிலும் அதிக மாற்றங்கள் வந்துள்ளன. வரக்கூடிய காலங்களில் ஆசிரியர்கள் புது விஷயங்களை தெரிந்து வைத்திருப்பதோடு, அடுத்த நிலைக்குத் தன்னை எவ்வாறு மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் அறிந்திருக்க வேண்டும். அந்த வகையில் ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு எதிர்காலத்தில் உள்ளது.