வழிகாட்டு நெறிமுறைகளுடன் திறக்கப்பட்ட பள்ளி, கல்லூரிகள்

தமிழகத்தில் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் புதன்கிழமை தொடங்கிள்ளது. வாரத்தில் ஆறு நாட்களும் வகுப்புகளை நடத்தவும், ஒவ்வொரு வகுப்பறையிலும் 20 மாணவர்கள் மட்டும் தனிமனித இடைவெளியை பின்பற்றி அமர வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும், மாணவர்களுக்கு நாள்தோறும் உடல்வெப்ப நிலையை பரிசோதிக்க வேண்டும், பள்ளிகளில் போதிய இடவசதி இல்லாதபட்சத்தில் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையிலும், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் வகுப்புகள் நடத்தலாம் என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கோவையை பொறுத்தவரையில் இங்குள்ள அனைத்து பள்ளிகளிலும் இன்று முதல் வகுப்புகள் தொடங்கி உள்ளன. 80 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். இதேபோல கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன பள்ளி கல்லூரிகளில் உள்ள அனைத்து வகுப்புகளும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், பள்ளி, கல்லூரி வளாகத்திற்குள் நுழையும் மாணவர்களுக்கு உடல் வெப்ப நிலை அளவு சோதிக்கப்படுகிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர்களை பார்த்த மாணவர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.