பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒருவர் பக்க விளைவால் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு எதிராக பைசர் தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்கா நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த தடுப்பூசி பெரும்பாலான நாடுகளில் செலுத்தப்பட்டு வருகிறது. உலகளவில் பைசர் தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது எனக் கருதப்படுகிறது. இந்த தடுப்பூசியால் பக்க விளைவு மிகமிகக்குறைவு என்பதால் வளர்ந்த நாடுகள், தங்களுடைய நாட்டு மக்களுக்கு பைசர் தடுப்பூசியை கொள்முதல் செய்து செலுத்தி வருகின்றன.

இந்நிலையில் நியூசிலாந்திலும் பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில் பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்ட பெண் ஒருவர் உடல்நலம் குன்றி திடீரென உயிரிழந்துள்ளார். இதுகுறித்து நியூசிலாந்தின் கொரோனா தடுப்பூசி கண்காணிப்பு வாரியம் விசாரணை மேற்கொண்டது. அப்போது அந்த பெண் இதயத் தசைகள் வீக்கம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக கருதுவதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதயத் தசைகள் வீக்கத்தால் ரத்த ஓட்டம் மற்றும் இதயத் துடிப்பில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

இதன்மூலம் பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர் பக்க விளைவு காரணமாக முதன்முறையாக உயிரிழந்துள்ளார் என நியூசிலாந்து சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் அந்த பெண்ணின் வயதை குறிப்பிடவில்லை.