உடல் எடையை குறைக்க… க்ரீன் டீ? பிளாக் காபி?

உடல் எடை பிரச்சனை என்பது பலருக்கு உள்ள பொதுவான பிரச்சனையாகும். உடல் எடையை குறைக்க பலரும் பல வித முயற்சிகளை கையாண்டு வருகின்றனர். அப்படி எடையை குறைக்க மக்கள் பின்பற்றும் உணவு மற்றும் பான வகைகளில் கிரீன் டீ மற்றும் பிளாக் காபி ஆகியவையும் ஒன்று. இவை இரண்டும் மிகச்சிறந்த பானங்களாக கருதப்படுகின்றன. பால் சேர்க்கப்படும் தேநீர் மற்றும் காபிக்கு மாற்றாக ஆரோக்கியமான பானமாக கருதப்படுகின்றன. கிரீன் டீ மற்றும் பிளாக் டீ என இரண்டிலுமே குறைவான கலோரிகளும் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களும் உள்ளன.

க்ரீன் டீ? பிளாக் காபி?

உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்களுக்கு, பிளாக் காபி மற்றும் கிரீன் டீ ஆகிய இரண்டு பானங்களுமே பயனுள்ளதாக இருக்கும் என்பதை பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. ஆனால் முழு ஆரோக்கியம் குறித்து பேசினால், பிளாக் காபியை விட கிரீன் டீ தான் அதிக நன்மை அளிக்கின்றது என நிபுணர்கள் கருதுகிறார்கள். இதில் ஆண்டிஆக்ஸிடண்டுகள் நிறைந்துள்ளன.

இது தவிர, ஆரோக்கியமான உணவை உட்கொள்வதும், உடல் எடையை குறைக்க தவறாமல் உடற்பயிற்சி செய்வதும் அவசியமாகும். கிரீன் டீ (Green Tea) அல்லது பிளாக் காபியை குடித்தால் மட்டும் நீங்கள் எடையை குறைத்து விட முடியாது. உடல் எடையை குறைக்க உங்கள் வாழ்க்கை முறையில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.

கிரீன் டீ

கிரீன் டீயில் காஃபின் மற்றும் கேடசின் எனப்படும் ஒரு வகை ஃபிளாவனாய்டு உள்ளது. கேடசின் உண்மையில் ஒரு வகை ஆண்டிஆக்சிடெண்ட் ஆகும். கிரீன் டீ பாதுகாப்பானது மற்றும் ஆரோக்கியமானது என்பது உண்மைதான், ஆனால் தினமும் 2 முதல் 3 கோப்பைகளுக்கு மேல் அருந்தக்கூடாது. ஒரு நாளில் காஃபின் அதிகமாக உட்கொள்வது தூக்க பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது, இதய பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

பிளாக் காபி

பெரும்பாலான மக்கள் விரும்பும் மற்றொரு பிரபலமான பானம் காபி. குறிப்பாக மக்கள் எடை குறைக்க முயற்சிக்கும்போது, பிளாக் காபியையும் அதிகம் அருந்துகிறார்கள். இது விழிப்புணர்வை அதிகரிப்பதோடு டைப் 2 நீரிழிவு நோயின் (Type 2 Diabetes) அபாயத்தைக் குறைக்கிறது.

பிளாக் காபி பொதுவாக உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களின் தேர்வாக இருக்கிறது. இதையும் அதிகப்படியாக உட்கொண்டால் அது சில எதிர்மறையான உடல்நல பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடும்.

எது சிறந்தது?

உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் போது இரண்டு பானங்களும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை நிரூபிக்கும் விதமாக பல சான்றுகள் உள்ளன. இவை அதிக வித்தியாசத்தை ஏற்படுத்தாது. ஆனால் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, பிளாக் காபியை விட கிரீன் டீ அதிக நன்மை பயக்கும். இது ஆக்ஸிஜனேற்றிகளால் நிறைந்துள்ளதோடு ஏராளமான சுகாதார நன்மைகளைக் கொண்டுள்ளது.