எம்.ஜி.ஆருக்கு செல்லப்பிள்ளை, கருணாநிதிக்கு தளபதி!

எம்.ஜி.ஆரின் செல்லப்பிள்ளையாக இருந்து, கருணாநிதியின் தளபதியாக மாறியவர் தான் தமிழக சட்டப்பேரவையில் பொன்விழா கொண்டாடியுள்ள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன். திமுகவின் அடிமட்டத் தொண்டனாக இருந்து கிளைச்செயலர், மாவட்டச் செயலர், துணைப் பொதுச்செயலர், முதன்மைச் செயலர் வரை உயர்ந்து இப்போது உச்சபட்ச பதவியான பொதுச்செயலர் பதவியை அலங்கரித்து வருகிறார் துரைமுருகன்.

திராவிட இயக்க ஆளுமை, கருணாநிதியின் மனசாட்சி, எம்ஜிஆரின் அன்புக்கு பாத்திரமானவர் என பன்முக அடையாளங்களுடன் காணப்படும் துரைமுருகனின் உயர்வுக்குப்பின் மிகப்பெரிய உழைப்பு இருக்கிறது என்பது தான் மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை.

வழக்கறிஞர், அரசியல்வாதி, பேச்சாளர் எனப் பன்முகத் திறன் கொண்டவராக விளங்கும் துரைமுருகன், நான்காவது முறையாக தமிழக அமைச்சராகியிருக்கிறார். திமுகவின் பொதுச்செயலாளராகவும் இருக்கும் அவர், சட்டப்படிப்பு மற்றும் முதுகலைப் பட்டம் பயின்றவர். தொழில்முறையில் வழக்கறிஞரான துரைமுருகன், அமைச்சராகப் பதவி வகித்த துறைகளில் ஆழ்ந்த அறிவு உடையவர்.

இன்றைய திமுகவில்அதிக அனுபவமுள்ள மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகன், சட்டப்பேரவை உறுப்பினராகவும், நீண்டகால அனுபவம் உடையவர். வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்துள்ள காங்குப்பம் என்ற கிராமத்தில், 1.7.1938ல் பிறந்தவர் துரைமுருகன். தந்தை துரைசாமி, தாயார் தவசி அம்மாள். அரசியல் பின்னணியோ, பரம்பரைச் செல்வாக்கோ இல்லாத, பள்ளிப் படிப்பைக்கூட முடிக்க முடியாத அளவுக்கு இளமையில் வறுமை வாட்டிய குடும்பச்சூழலில் வளர்ந்தவர் துரைமுருகன்.

முருகன் என்ற தனது பெயரை, தந்தை பெயரையும் இணைத்து துரைமுருகன் என மாற்றிக்கொண்டார். தனது 16வது வயதில் பேரறிஞர் அண்ணாவின் பேச்சால் கவரப்பட்டு திமுக உறுப்பினரானார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இலக்கிய விழாவில் எம்ஜிஆர் சிறப்புவிருந்தினராகப் பங்கேற்ற போது, தனது பேச்சால் எம்ஜிஆர் மனதை கொள்ளை கொண்டார். பின்னர் எம்ஜிஆர், துரைமுருகனை நேரில் வரவழைத்து அவரது குடும்பப் பின்னணி குறித்து அறிந்து அவரது படிப்புச் செலவு முழுவதையும் ஏற்றுக்கொண்டார்.

மொழிப்போர் தளபதிகளில் ஒருவர் தான் துரைமுருகன். தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு எதிரான மொழிப்போரில் தளபதியாக இருந்தார். எல்.கணேசன், நாவலவன், விருதுநகர் சீனிவாசன், துரைமுருகன் என 4 பேர் கொண்ட இளம் மாணவர் தளபதிகள் மாநிலம் தழுவிய மொழிப்போருக்கான தீயை தங்களது பேச்சு மூலம் மூட்டினர்.

இவர்களின் சுற்றுப்பயணத்துக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம் தனது மனைவியின் தங்கச் சங்கிலியை அடகு வைத்து வழங்கினார். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அச்சாணியாக இருந்தது தான் மொழிப் போராட்டம் என்பதை தமிழக அரசியல் வரலாறு உணர்த்துகிறது.

1971ல் மு.கருணாநிதி தலைமையில் திமுக பேரவைத் தேர்தலை சந்தித்த போது காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட துரைமுருகன், சுமார் 17,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தனது 33 வயதில் முதல்முறையாக பேரவைக்குத் தேர்வானார். அதே தேர்தலில் பரங்கிமலை தொகுதியில் இருந்து எம்ஜிஆர் தேர்வாகியிருந்தார்.

பின்னர் எம்ஜிஆர் – கருணாநிதி இடையே விரிசல் ஏற்பட்டு அதிமுக உருவானபோது எம்ஜிஆர் பக்கம் சாய்ந்து அதிமுகவில் துரைமுருகன் இணைவார் எனப் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், கட்சி, கொள்கை என்பது வேறு, தனிப்பட்ட நட்பு வேறு என்ற முடிவுக்கு வந்துவிட்டார். எம்ஜிஆர்,. துரைமுருகனையும் தன்னுடன் வருமாறு அழைத்தபோது, “நீங்கள் எனக்கு உதவி செய்திருக்கலாம். ஆனால், என்னுடைய தலைவர் கலைஞர்தான்” என்று துரைமுருகன் எம்.ஜி.ஆருடன் செல்ல மறுத்து கருணாநிதி பக்கம் உறுதியுடன் நின்றார். அதுமட்டுமல்லாமல் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில், அவருக்கு எதிராக சட்டசபை விவாதங்களில் அனல் கக்கியவர்.

கட்சியின் எம்.எல்.ஏ., திமுகவின் அதிகாரபூர்வ பேச்சாளராக வலம் வந்து கலக்கிக் கொண்டிருந்த துரைமுருகன், இந்திரா காந்தி காலத்தில் கொண்டுவரப்பட்ட காலத்தில் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது திமுகவினர் சிலர் மன்னிப்புக் கடிதம் கொடுத்து சிறையில் இருந்து வெளியேறினர்.

இதைக் கேள்விப்பட்டு வேலூர் சிறைக்கு வந்த துரைமுருகனின் தந்தை துரைசாமி, துரைமுருகனை அழைத்து, “கட்சிக்காக சிறைக்கு வந்திருக்கிறாய், எதையாவது எழுதிக் கொடுத்துவிட்டு வந்துவிடாதே. நேரு 12 ஆண்டுகளும், காமராஜர் 10 ஆண்டுகளும் சிறையில் இருந்துள்ளனர். அரசியலுக்கு வந்துவிட்டால் ஒரே கொள்கை ஒரே கட்சி என்று தான் இருக்க வேண்டும்“. ஓராண்டு சிறைவாசம் கழித்து வெளியேவந்த துரைமுருகன், வேலூர் மாவட்ட திமுகவின் முகமானார்.

தனது திருமண அழைப்பிற்கு எம்ஜிஆருக்கு நேரில் பத்திரிகை வழங்கியபோது, தங்கச் சங்கிலியை துரைமுருகனுக்கு வழங்கி தனது அன்பை பகிர்ந்துகொண்டார் எம்ஜிஆர். அடுத்த பேரவைத் தேர்தலில், காட்பாடியில் போட்டியிடாமல் ராணிப்பேட்டையில் அதிமுக ஆதரவு சுயேட்சை வேட்பாளர் கே.ஏ.வகாபை 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்த துரைமுருகன், தனது வழிகாட்டியான எம்ஜிஆர் அரசை எதிர்த்து பேரவையில் கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்தார்.

கருணாநிதியின் தளபதிகளான துரைமுருகன், ரகுமான் கான், வில்லிவாக்கம் க.சுப்பு ஆகியோர் கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்து எம்ஜிஆருக்கு பேரவையில் சிம்மசொப்பனமாக விளங்கினர். ஒரு கட்டத்தில் எம்ஜிஆரே, துரைமுருகனை நேரில் அழைத்து என்னை பார்த்தவர்கள் எல்லாம் அமைச்சர்கள் ஆகிவிட்டனர், நீயும் வந்துவிடு, நீ கேட்கும் அமைச்சர் பதவியை தந்துவிடுகிறேன் என்றார். ஆனால், துரைமுருகனோ மறுத்துவிட்டார்.

இருப்பினும், துரைமுருகனின் அரசியல் சீற்றம் முடிவுக்கு வரவில்லை. பேரவைக்கு வெளியேயும் எம்ஜிஆர் அரசுக்கு எதிராக அது உருவெடுத்தது. திருச்செந்தூர் ஆலை அதிகாரி கொலை, வைரவேல் திருட்டு, பல்கேரியா பால்டிகா என்ற கப்பல் பேர சர்ச்சை, எரிசாராய சர்ச்சை என அடுத்தடுத்து எம்ஜிஆர் அரசுக்கு எதிராக கருணாநிதியின் தளபதிகளான ரகுமான்கான், துரைமுருகன், சுப்பு ஆகியோர் மேடைகளில் முழங்கத் தொடங்கினர்.

இடி என்னும் தலைப்பில் ரகுமான்கானும், மின்னல் என்னும் தலைப்பில் துரைமுருகனும், மழை என்னும் தலைப்பில் சுப்புவும் தமிழகம் முழுவதும் மேடை தோறும் எம்ஜிஆர் அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை வைத்தனர். அதிமுகவை உலுக்கும் கட்டுரைகளையும் துரைமுருகன் எழுதினார்.

எம்ஜிஆர் உடல் நலம் பாதிக்கப்பட்டபோது பேரவையில் அது குறித்து கரிசனமான கேள்விகளையும் எழுப்பினார். எம்ஜிஆர் மறைவுக்குப்பின் 1980ல் காட்பாடி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற துரைமுருகன் முதல் முறையாக அமைச்சர் ஆனார். தான் முதல் முறையாக வகித்த பொதுப்பணித்துறை அமைச்சர் பதவியை துரைமுருகனுக்கு வழங்கினார் கருணாநிதி.

அதுமுதல் எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக பதவியேற்றுக்கொள்வார் துரைமுருகன். திமுகவின் நிரந்தரப் பொதுப்பணித்துறை அமைச்சரானார். இப்போதும் நீர்ப்பாசனத்துறை அமைச்சராகவே தொடர்கிறார். அவரது பதவிக் காலத்தில் தான் திமுகவின் நீண்ட கால காவிரி பிரச்சனை விவகாரத்தில் காவிரி நடுவர் மன்றம் உருவானது.

தமிழகத்தில் உள்ள அணைகள் பற்றிய புள்ளிவிவரங்களை விரல் நுனியில் வைத்திருப்பவர் துரைமுருகன். அண்டை மாநில முதல்வர்களுடன் கருணாநிதி பேச்சுவார்த்தைக்குச் செல்லும்போது துல்லியமாகவும், அண்டை மாநில முதல்வர்களுடன் நாசுக்காக பேசி காரியத்தை முடிப்பதில் வல்லவர் துரைமுருகன். அதிக எண்ணிக்கையில் அணைகளையும் அவரது பதவிக் காலத்தில் கட்டியுள்ளார்.

தேர்தல் கூட்டணி, பேச்சுவார்த்தை, தொகுதி உடன்பாடு போன்றவற்றிலும் நுணுக்கமாக செயல்படுபவர் துரைமுருகன். சில நேரங்களில் அவரது அசட்டை பேச்சால் கூட்டணி கட்சியினர் கோபித்துக்கொள்வதும் உண்டு. திமுக மாநாடுகளில் உருக்கமாக பேசி தொண்டர்களின் மனதில் குடியேறிவிடுவதில் வல்லவர்.

பேரவையில் இவரின் சில பேச்சுக்கள் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப்பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவி வகித்தபோது ஓபிஎஸ் ஆட்சி 5 ஆண்டுகள் நிலைக்க திமுக துணை நிற்கும் என பேசியதால், திமுகவுடன் ஓபிஎஸ் நெருக்கமாக இருப்பதாக குற்றஞ்சாட்டி அவரது பதவியை சசிகலா பறித்தார். பாஜக ஒன்றும் தீண்டத்தகாத கட்சி அல்ல என்ற அவரசு பேச்சும் தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

காட்பாடி தொகுதியில் 1971ல் முதல்முறையாக போட்டியிட்டு வென்ற துரைமுருகன், 1977, 1980 ம் ஆண்டுகளில், ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர் மீண்டும் 1984, 1989, 1991, 1996, 2001, 2006, 2011, 2016 மற்றும் தற்போது 2021ம் ஆண்டுகளில் இந்தத் தொகுதியில் போட்டியிட்ட அவர், 1984 மற்றும் 1991 ல் நடைபெற்ற தேர்தல்களில் மட்டும் தோல்வியடைந்தார்.

மேடைப்பேச்சுகளில் இவருக்கு சிரிக்கவைக்கவும் தெரியும், அழ வைக்கவும் தெரியும். அடுத்தவரை நையாண்டி பண்ணுவதில் அலாதியான கற்பனைத் திறனும் உண்டு துரைமுருகனுக்கு. இவரது நகைச்சுவையான கருத்துகள், சைகைகள், முகபாவனைகள் போன்றவை, அனல்பறக்கும் விவாதங்களில் கூட சட்டசபையைக் கலகலப்பாக மாற்றிவிடும். நகைச்சுவையான இவரது கமென்ட்டுக்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவே சில சமயங்களில் குலுங்கி குலுங்கி சிரித்ததும் உண்டு.

நீண்ட காலம் திமுக மாணவர் அணியில் அங்கம் வகித்தவர், பின்னர் தலைமைக் கழக முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர் என உயர்ந்து, தற்போது பொதுச்செயலாளர் எனக் கட்சியின் உயரிய பொறுப்பையும் வகிக்கிறார். தற்போது அவருக்கு நீர்வளத்துறை அமைச்சர் பதவியும் கிடைத்துள்ளது. சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத் திட்டம், மாநில சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவைத் தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டுகள், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் ஆகிய துறைகள் இவரது கட்டுப்பாட்டில் வருகின்றன.

அனைத்துக் கட்சியினருடனும் நல்ல நட்பைப் பேனக்கூடியவர். திமுகவில் இருந்தாலும் கடவுள் பக்தி கொண்டவர். தொடர்ந்து இவரது கட்சி விசுவாசம் காரணமாக பொதுச்செயலர் பதவி வரை உயர்ந்து வந்துள்ளார். முதல்முறையாக திமுக – பாமக கூட்டணி உருவாக 1999 மக்களவைத் தேர்தலில் முக்கிய பங்கு வகித்தார். இவரது மகன் கதிர் ஆனந்தை வேலூர் மக்களவைத் தொகுதியில் வெற்றிபெறச் செய்ய வைத்ததன் மூலம் வேலூர் பகுதியில் துரைமுருகனுக்கு தான் அதிக செல்வாக்கு என்பதை நிரூபித்து காட்டியுள்ளார். கடந்த பேரவைத் தேர்தலில் தனது உடல் நலக்குறைவால் சரியாக பிரசாரம் செய்ய முடியாமல் போனதால் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் துரைமுருகன்.

இப்போது கட்சி, ஆட்சியில் இரண்டாம் இடம் வகிப்பதன் மூலம் மாநிலத்தில் முக்கிய அரசியல்வாதியாக உருவெடுத்துள்ளார் துரைமுருகன். கருணாநிதியுடன் திரையரங்குகள், கடற்கரை என சுற்றித்திரிந்து கருணாநிதியின் மனதை கொள்ளையடித்த துரைமுருகன், இப்போது முதல்வர் ஸ்டானிலுக்கு கலங்கரைவிளக்கமாக திகழ்கிறார்.