என்.ஜி.பி – கே.எம்.சி.எச் சார்பில் இலவச தடுப்பூசி முகாம்

டாக்டர் என்.ஜி.பி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் நாட்டு நலப்பணி திட்டம் (NSS), கே.எம்.சி.எச் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்து செவ்வாய்க்கிழமையன்று (24.8.2021) என்.ஜி.பி கல்லூரியில் “இலவச தடுப்பூசி முகாம்” ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் டாக்டர் என்.ஜி.பி கல்லூரியின் முதல்வர் எஸ்.யு.பிரபா கூட்டத்தில் வரவேற்புரையாற்றினார்.

கே.எம்.சி.எச் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் என்.ஜி.பி கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட குழுவினர் இணைந்து நடத்திய இம்முகாமில் 1000த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

வைரஸ் தொற்று வேகமாக பரவுவது குறித்தும், அதற்க்கு எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த தடுப்பூசி முகாம் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கே.எம்.சி.எச் மருத்துவமனையின் மருத்துவகுழு பேசுகையில், “நீங்கள் கொரோனாவை தோற்கடிக்க விரும்பினால், உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் தடுப்பூசி போடுவது அவசியம், கொரோனாவை எதிர்த்துப் போராட இந்த தடுப்பூசி உங்கள் பாதுகாப்பு கவசமாகும். மேலும், தடுப்பூசிகளைப் பெறுவதன் மூலமும் கூட்டு நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்வதன் மூலமும், எதிர்காலத்தில் வரும் கொரோனா அபாயத்திலிருந்து சமூகத்தை நம்மால் காப்பாற்ற முடியும்” என்று பொதுமக்களுக்கு விளக்கினார்கள். இது தவிர, தடுப்பூசி போட்ட பிறகும் முகமூடி அணிவது, கைகளை சுத்தம் செய்வது போன்ற பழக்கங்கள் மிகவும் முக்கியம் என்றும் எடுத்துரைத்தனர்.

இறுதியில், கல்லூரியின் முதல்வர் முகாமின் வெற்றிகரமான அமைப்பிற்காக நாட்டு நலப்பணித்துறை மற்றும் மருத்துவ குழுவினரை வாழ்த்தினார்.