வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே முதல்வரின் லட்சியம்!

நா.கார்த்திக், பொறுப்பாளர், கோவை மாநகர் கிழக்கு மாவட்டம், திமுக.

ஆட்சி அதிகாரம் நூலிழையில் நழுவியபோதும் மக்களுக்கான பணிகளை தொடர்ந்து செவ்வென செய்வேன் என 35 வருட காலமாக ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கிறார் இவர். ஒரு அடிமட்ட தொண்டனாக இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தில் படிப்படியாக பல பொறுப்புகள் வகித்துள்ளார். உதவி என ஒலிக்கும் குரலுக்கு கரம் நீட்டுவது, இயற்கையின் மீது கொண்ட காதலால் கோவையை பசுமை நகரமாக மாற்ற வேண்டும் என்ற முனைப்பு, அரசின் திட்டங்களை ஏழை எளிய மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது என தன் பணிகளைத் தொய்வில்லாமல் செய்து வருகிறார் முன்னாள் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக்.

அவரிடம் ‘தி கோவை மெயில்’ நிகழ்த்திய பிரத்தியேக நேர்காணலின் போது பல விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

அரசியல் நடவடிக்கைகள்:

தமிழக முதலமைச்சர் தலைமையில் அரசின் சார்பில் அறிவிக்கப்படுகின்ற பல்வேறு திட்டங்களை கோவை மாநகர் கிழக்கு மாவட்டத்தில் செயல்படுத்துவதற்காக, அமைச்சர்கள் சொல்லும் அனைத்துப் பணிகளையும் செய்து வருகிறோம்.

கோவையில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவிக் கொண்டிருந்த சூழலில் இந்தப் பேரலையை கட்டுப்படுத்துவதற்காக வனத்துறை அமைச்சர் மற்றும் உணவுத்துறை அமைச்சரை கொரோனா நோயைக் கட்டுப்படுத்துகின்ற பொறுப்பாளர்களாக முதலமைச்சர் அறிவித்தார். அவர்களின் வழிகாட்டுதலில் கோவை மாநகர் கிழக்கு மாவட்டத்தில் அரசின் சார்பில் தடுப்பூசி போடுவது, கொரோனா நோயால் யாராவது பாதிக்கப்பட்டு இருந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு உதவுவது என பல்வேறு பணிகளைச் செய்து வருகிறோம்.

ஒரு மாத காலத்திற்குள்ளாக முதலமைச்சரின் வழிகாட்டுதலில் இந்நோய் கட்டுப்படுத்தப்பட்டது. அரசின் சார்பில் மக்கள் பயனடையும் வகையிலான திட்டங்களை பெற்றுத் தருகின்ற நடவடிக்கையில் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் என்ற முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றேன்.

மக்கள் பிரச்சனைக்கு முக்கியத்துவம்:

சிங்காநல்லூர் தொகுதியில் 2009ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் திமுக ஆட்சிக் காலத்தில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் அன்றைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் கலைஞர் அவர்களால் தொடங்கப்பட்டது. திமுகவின் திட்டம் என்ற காரணத்தினாலேயே கடந்த ஆட்சியின் போது அந்தத் திட்டம் புறக்கணிக்கப்பட்டது.

எந்த தெருவுக்குச் சென்றாலும் மக்கள் சொல்லுகின்ற ஒரே வேண்டுகோள் “சாக்கடை தேங்கி நிற்கிறது, அதை மாநகராட்சியிடம் சொல்லி சுத்தம் செய்து தர சொல்லுங்கள், கொசுவினால் மலேரியா டெங்கு போன்ற காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளது எனக் கூறுகிறார்கள்”. இதுபோன்ற பிரச்சனைகளை அரசிடம் எடுத்துச் செல்லக் கூடிய பணியில் ஈடுபட்டு இருக்கின்றேன்.

திமுக சார்பில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கோவையில் இல்லாத காரணத்தினால் தொழில் துறையின் முன்னேற்றம், அடிப்படைத் தேவை என பல்வேறு விஷயங்களுக்கு மக்கள் என்னை அணுகுகிறார்கள்.

மக்கள் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அவர்களின் கோரிக்கைகளை எல்லாம், என்னுடைய டைரியில் பதிவு செய்து வைத்துவிட்டு, அவர்களுடைய தொலைபேசி எண்களையும் குறித்து வைத்துக் கொள்வேன். பெற்ற கடிதங்களுடன், நானும் ஒரு கடிதத்தை எழுதி, அவர்கள் கொடுத்த கடிதத்தையும் இணைத்து முதல்வரின் தனிப் பிரிவிற்கு, அவற்றைக் கொண்டு சேர்த்திருக்கிறேன்.

தொய்வு இல்லா சமூக சேவை:

முதல்வர், வனத்துறை அமைச்சர் மற்றும் உணவுத்துறை அமைச்சர் அவர்களின் ஆலோசனைப் படி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், நாங்கள் கோவை மாவட்டத்தின் அனைத்துப் பகுதியிலும் பல லட்சம் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கக் கூடிய திட்டத்தை செயல்படுத்தி வருகின்றோம். அதை தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

மருத்துவ உதவிக்காக என்னை நேரடியாகச் சந்தித்து உதவிகளைக் கேட்கின்றார்கள். அந்த சமயத்தில், தனியார் மருத்துவமனையாக இருந்தால் சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் தலைமை மருத்துவரை தொடர்பு கொண்டு வேண்டிய உதவிகளை எங்களால் முடிந்த அளவிற்கு செய்து வருகின்றோம்.

சமீபத்தில் கூட சித்தாபுதூர் பகுதியில் 7 வயது பெண் குழந்தைக்கு பிறந்ததில் இருந்து கண் பார்வை இல்லாமல் இருந்தது. அந்த தகவல் எனக்கு மனுவாக வந்தபோது நான் உடனடியாக அரவிந்த் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவரை தொடர்புகொண்டு அந்தக் குழந்தைக்கு அறுவை சிகிச்சை மூலமாக பார்வை கிடைப்பதற்க்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டேன். அதற்கிணங்க உடனடியாக அந்தக் குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தார்.

பசுமை நகரமாக கோவை:

வாரத்தில் இரண்டு அல்லது மூன்று தினங்கள் கோவைக்கு வருகை புரியும் வனத்துறை அமைச்சரை அடிக்கடி சந்திக்கின்றேன். அப்படி வருகை புரியும்போது “மரங்களை அதிகமாக வளர்த்து கோவையை பசுமையான நகரமாக உருவாக்குவதற்கு உண்டான ஏற்பாடுகளை எல்லாம் செய்ய வேண்டும்” என அமைச்சர் வனத்துறை அலுவலர்களுக்கு கூறியுள்ளார்.

உலக தமிழ் செம்மொழி மாநாட்டின் பொழுது அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பூங்காக்கள் பல கோடி மதிப்பில் கோவையில் கட்டப்பட்டது. அந்த பூங்காக்கள் எல்லாம் பழுதடைந்து மக்கள் அதைப் பயன்படுத்த முடியாத அளவிற்கும் உள்ளது. சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் வண்ணம், கோவையை பசுமையான நகரமாக உருவாக்கும் பொருட்டு, பராமரிக்கப்படாமல் இருக்கக் கூடிய பூங்காக்களை பராமரிப்பதற்கான பணிகளை செய்து வருகிறோம்.

சிறந்த மக்கள் திட்டங்கள்:

முதல்வராக பொறுப்பினை ஏற்ற உடனேயே பல்வேறு திட்டங்களை மக்களுக்கு வழங்கி இருக்கிறார். அதில் எனக்கு மிகவும் பிடித்த திட்டமாக இருந்தது, பேருந்தில் மகளிருக்கு இலவச பயண திட்டம். இதனால் ஏழைப் பெண்களின் வருமானத்தில் கிடைக்கக் கூடிய ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்கள் இந்த பயணத்திற்கு என செலுத்த வேண்டியதில்லை. இதன் மூலம் திராவிட முன்னேற்றக் கழகம் பெரும் செல்வாக்கை மக்களிடையே பெற்றுள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் அரசு மருத்துவமனையில் மட்டுமல்ல, தனியார் மருத்துவமனை களிலும் அனைவரும் சிகிச்சை பெறலாம் என்ற திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளார்.

சமீபத்தில் கூட தமிழ்நாட்டின் பட்டி தொட்டி முழுவதும் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழகத்தில் இதுவரை எந்த ஒரு ஆட்சியாளரும் கொண்டு வராத இத்திட்டம் மூலமாக இன்றைக்கு லட்சக்கணக்கான மக்கள் நேரடியாக பயனடைத்து வருகிறார்கள்.

கோவை மக்களின் ஆதரவு:

தமிழக முதலமைச்சருக்கும், திமுகவிற்கும் மிகப்பெரிய அளவில் ஆதரவு பெருகியுள்ளது. அரசாங்கத்தின் திட்டத்தில் அரசியல் சாயம் பூசாமல், முழுமையாக மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற முனைப்போடு தமிழக முதல்வர் செயலாற்றி வருகிறார்.

கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 4000 ரூபாய் வழங்குகின்ற போதும், 14 வகையான உணவுப் பொருள் வழங்கக் கூடிய நேரத்திலும் எந்த விதமான அரசியல் சாயமும் இன்றி, நடுநிலையாக, நியாயமான முறையில், எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் செயல் திட்டங்களை செய்து வருகிறார். முதல்வரின் இப்போக்கு மக்களுக்கு பிடித்து வருகிறது.

அமைச்சர்களின் வருகை:

இதுவரை 10 க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் கோவைக்கு வருகை தந்துள்ளார்கள். நகர்ப்புற உள்ளாட்சித்துறை அமைச்சர் நேரு வருகை தந்த போது, மக்களுக்கு எம்மாதிரியான அடிப்படை வசதிகள் தேவைப்படுகிறது, என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் உள்ளது என்பதை எல்லாம் ஆய்வு செய்து மக்களுக்கு உடனடியாக கிடைப்பதற்கான நடவடிக்கை எடுத்துள்ளார்.

அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை என நேரடியாக சென்று மக்களை எவ்வாறு பாதுகாப்பது, தேவையான அளவிற்கு தடுப்பூசி கிடைக்கிறதா அதற்கு என்ன வழிவகை செய்ய வேண்டும் என அவருடைய துறையிலே பல நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்.

அதே போல தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் கோவையில் தகவல் தொழில் நுட்பத்தில், எந்தளவு எதிர்காலத்தில் வளர்ச்சியை கொண்டு வரமுடியும் என்கின்ற ஆலோசனைகளை நடத்தியுள்ளார்.

பெருந்தொழில்கள் சம்பந்தப்பட்ட தொழில் முனைவோரையும், சிறு, குறு, நடுத்தர தொழில்கள் செய்யக் கூடிய தொழில் முனைவோரையும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி கோவையில் தொழில் வளர்ச்சி பெறுவதற்கு எம்மாதிரியான திட்டங்களைக் கொண்டு வரவேண்டும், அவர்களுக்கு என்ன தேவைப்படுகிறது என்பதை கேட்டறிந்துள்ளார் தொழில் துறை அமைச்சர்.

கோவையில் 10 ஆண்டு காலத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட மேம்பாலப் பணிகளையும், தடைபட்டுள்ள மேம்பாலப் பணிகளை துரிதப்படுத்துவதற்கும் பொதுப் பணித்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்து இருக்கிறார். மேலும், மேற்கு புறவழிச் சாலைத்திட்டத்தை கோவைக்கு கொண்டுவர ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.

இங்கு வருகை தந்துள்ள அனைத்து அமைச்சர்களும் அவரவர் துறைகளில் மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகின்றனர். இதுவரை கோவையின் வரலாற்றில் இவ்வளவு குறுகிய காலத்தில், இத்தனை அமைச்சர்கள் தங்களுடைய துறை சார்ந்த ஆய்வுகளை நடத்தி மக்கள் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட்டது இல்லை.

திமுகவின் சட்டமன்ற உறுப்பினராக இங்கு யாரும் தேர்வு செய்யப்படவில்லை என்றாலும் கோவையின் வளர்ச்சிக்காக தமிழக முதல்வர், தமிழகத்தில் இருக்கக் கூடிய அனைத்து அமைச்சர்களையும் இங்கு அனுப்பி, மக்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறார்.

வாக்குறுதியில் மாற்றமில்லை:

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஏற்கனவே தெரிவித்துள்ளார். கலைஞரின் மகனான அவர், எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அதை சரி செய்ய வேண்டும் என முடிவு செய்து விட்டால் அதனை நிச்சயம் சரி செய்து விடுவார். தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நீட்டில் விலக்கு பெற்றுக்கொடுப்பேன் எனக் கூறியுள்ளார். இதனைப் பெறும்வரை அவர் ஓயமாட்டார்.

வருமான வரித்துறையின் சோதனையை பழிவாங்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சியினர் கூறுவது முழுக்க முழுக்க தவறு. முதல்வர் ஏற்கனவே தேர்தலின் போது, ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருந்தார். பல்வேறு ஆவணங்களின் ஆதாரத்தின் அடிப்படையிலே சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மக்களின் ஆசி எங்களுக்கே:

தமிழக மக்களின் ஆசியும், ஆதரவும் யாத்திரை சென்றால் கிடைக்காது. தமிழக மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், உட்கட்டமைப்பு பணிகள், மக்களுக்குத் தேவையான வளர்ச்சிப் பணிகள், மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பது, தொழில் துறையில் முன்னேற்றம் காண்பது, தமிழகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவது, நீட் போன்ற தேர்வுகளை ரத்து செய்வது என பல துறைகளில் எந்த அரசு, மக்களுக்காக செயல்படுகிறதோ, அவர்களைத் தான் மக்கள் வரவேற்பார்கள். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்துத் துறைகளிலும் முன்னோடியாக செயல் பட்டுக் கொண்டிருக்கிறார்.

மக்களிடமும் நேரடியாக தொடர்பு கொண்டு, அவர்களின் உணர்வுகளை புரிந்து, அதற்கு மதிப்பளித்து, மக்கள் எந்த ஒரு கருத்தினைச் சொன்னாலும் செவிமடுத்து கேட்டு செயல்படுகின்ற முதலமைச்சராக செயல்படுகிறார்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் கூறிய கருத்துகள், அவர்கள் விட்டு சென்ற இலட்சியங்கள், கொள்கைகள் இவைகளை உணர்ந்து சிறப்பான முறையில் செயல்பட்டு மக்களிடம் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.

இந்தியாவிற்கே ஒரு மகத்தான தலைவராக, தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்லாது, உலகமே வியந்து பாராட்டும் அளவிற்கு அவரது செயல்பாடுகள் உள்ளன. அதன் காரணமாகவே, இமயம் போல மக்கள் மத்தியிலே உயர்ந்து நிற்கிறார். எங்களைப் போன்ற திமுகவின் நிர்வாகிகள், தொண்டர்கள் அவரின் வழியில் பயணித்து மக்கள் பணியாற்றி வருகிறோம்.

கோவையில் இனி எந்தத் தேர்தல் நடைபெற்றாலும், திமுக மக்கள் மத்தியில் மகத்தான ஆதரவையும், வெற்றியையும் பெறும் வகையில் எங்களின் தலைவர் தலைமையில் பணியாற்றுவோம்.