குடும்பங்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை

கொரோனா சவால்களைக் கடந்து சாதனை!

கொரோனாவின் மூன்றாம் அலை எப்போது வேண்டுமானாலும் இந்தியாவில் ஏற்படலாம், விழிப்புடன் இருக்கவேண்டும் என்று நம் அரசும், மருத்துவர்களும் சொல்லும் அதே நேரத்தில்தான் வளர்ச்சியின் உச்சத்தை எட்டிய அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் கனடா போன்ற நாடுகள் நான்காம் அலையைக் கட்டுப்படுத்த பல முயற்சிகளைச் செய்து கொண்டு இருக்கின்றனர்!

அனைத்து துறைகளிலும் இந்த 21ம் நூற்றாண்டில் ஏற்றத்தை மட்டுமே கண்ட மனித இனத்திற்கு இயற்கையோ, இறைவனோ அல்லது மனிதனாகவோ ஏற்படுத்திக் கொண்ட மிகப்பெரிய பின்னடைவாக கொரோனா இருந்தபோதிலும், தமிழகத்தில் சில மாதங்களாய் அரசு எடுத்துவரும் பெரும் முயற்சியும், அனுபவமிக்க சிறப்பு மருத்துவமனைகளின் சேவைகளும் நிலைமையை கிட்டத்தட்ட சமன்செய்து வருகிறது.

இருந்தபோதிலும், இந்த நோய்க்கிருமி மனிதர்களுக்கு தொடர்ந்து சவால்களை வீசிய வண்ணமே உள்ளது. சமீபத்தில் கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் வாழ்க்கையைப் புரட்டிப்போடும் அளவிற்கு கொரோனாவால் மிகப்பெரும் பாதிப்பு நேர்ந்தது.

அப்போது கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையின் மருத்துவர்கள் ஒரு பெரும் குழுவாய் இணைந்து, மிகுந்த சவால்களைக் கடந்து அதிநவீன சிகிச்சையை வழங்கி அவரின் உயிரை மீட்டு தந்துள்ளனர்.

சிகிச்சை வழங்கிய மருத்துவக் குழுவில் அங்கம் வகித்த தீவிர சிகிச்சைப் பிரிவின் தலைவர் டாக்டர் சத்யமூர்த்தி மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவின் மூத்த நிபுணர் டாக்டர் கார்த்திராஜ் நடராஜன் அந்த இளைஞருக்கு வழங்கிய சிகிச்சையைப் பற்றி கூறியது பின்வருமாறு:-

உடனடி கவனம்:

டாக்டர் சத்தியமூர்த்தி பேசும் போது: “மே மாதத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கோவையில் உச்சத்தில் இருந்தது. எங்கள் மருத்துவமனையிலேயே சுமார் 450 நபர்களுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை வழங்கியுள்ளோம். அந்த அளவிற்கு கொரோனாவின் தாக்கம் ஓங்கியிருந்தது” என்றார்.

“அந்த சமயத்தில் 35 வயதான கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மூன்று நாட்களாக மூச்சுத்திணறல், இருமல், காய்ச்சல் போன்றவை இருப்பதாக சொல்லி எங்களிடம் சிகிச்சைக்காக வந்தார். அவருக்கு கடந்த மூன்றாண்டுகளாக சர்க்கரை நோய் பாதிப்பும் இருந்தது.”

“உடம்பில் ஆக்சிஜன் அளவு குறைவாக அவருக்கு இருந்ததை அறிந்ததால் அதற்கான நடவடிக்கைகளை எடுத்து, இந்த கொரோனா காலத்தில் மருத்துவமனைக்கு சிகிச்சை எடுக்க வரும் வெளி நோயாளிகளை அனுமதிக்கும் தனி வார்டில் வைத்து உடனடியாக கவனிக்கத் தொடங்கினோம்.”

நுரையீரலில் பெரும் பாதிப்பு:

“எதனால் இவருக்கு இந்த குறைபாடு என்று நாங்கள் ஆராய முற்பட்டோம். மருத்துவமனைக்கு வந்த முதல் நாளிலேயே மூக்கு துவாரம் வழியாக சளி மாதிரியை எடுத்து அதன் மூலம் கொரோனா தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிய முயன்றோம்.

நுரையீரல் நிலையை துல்லியமாய் அறிய சி.டி. ஸ்கேன் செய்தபோது நுரையீரல் மிகுந்த பாதிப்பிற்குள்ளானதை தெரிந்து கொண்டோம். சளி மாதிரியின் ஆய்வு முடிவில் அவருக்கு கொரோனாதொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.”

“கொரோனாவை பொறுத்தவரை சாதாரணக் காய்ச்சல் போலவே தான் முதலில் தென்படும். நுரையீரல் எப்போது பாதிப்படைகிறதோ அப்போது தான் அதன் தாக்கம் பெரிதாக வெளிப்படும்.

பாதிப்பு நுரையீரலில் மிகுதியடைந்தும் காலம் தாழ்ந்து வரும் நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நிலைக்குச் செல்ல வேண்டியுள்ளது.”

பல துறை நிபுணர்களின் கூட்டுமுயற்சி:

“தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு சுவாசம் சம்பந்தமான இன்னல்கள் அதிகரித்த வண்ணம் இருந்தது. உடம்பிற்கு போதுமான ஆக்சிஜன் செல்லாமற் போனால் அது வேறு பிரச்சனைகளை உண்டாக்கும் என்பதால் நிலைமையை சரி செய்ய வழக்கமான முறையை விட ஒரு பல்துறை நிபுணர் குழுவின் ஒருங்கிணைந்த சிகிச்சை முறை அவசியம் என தீர்மானிக்கப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.”

“தீவிர சிகிச்சைப் பிரிவில் வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் வழங்கப்பட்ட போதும் இவருடைய நுரையீரல்களின் இயல்பான செயல்பாடுகள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்ததால், நுரையீரல் செய்யக்கூடிய பணிகளைச் சிறப்பாக செய்யக்கூடிய எக்மோ எனும் நவீன கருவியைக் கொண்டு கிட்டத்தட்ட 2 வாரங்களாக இவருக்கு செயற்கை நுரையீரல் மூலம் உடம்பினுள் ஆக்சிஜன் செலுத்தி வந்தோம். மருத்துவ உதவி மூலம் அவருடைய நுரையீரல் சரியாகும் வரை அந்த 2 வாரமும் அவருக்கு இந்த கருவிதான் நுரையீரலாக இருந்தது.”

2 மாத போராட்டம்:

டாக்டர் கார்த்திராஜ் நடராஜ் பேசுகையில்: “சொல்வதற்கு எளிதாக இருந்தாலும், இந்த நபரின் உயிரை மீட்பதில் பெரும் சவால்கள் அடங்கியிருந்தது” என்றார்.

“இந்த எக்மோ எனும் அதிநவீன கருவி நுரையீரல் அல்லது இதயம் பெரிதும் பாதிப்படைந்தவர்களின் உறுப்பிற்கு மாற்றாக செயல்பட உபயோகிக்கப்படும். இது நுரையீரல் போல் ரத்தத்தை தனக்குள் எடுத்து, அதை சுத்தப்படுத்தி அதாவது ஆக்சிஜனை ரத்தத்திற்குள் அனுப்பி அதை இதயத்திற்குள் செலுத்தும், அதன் பின்னர் அந்த ரத்தம் மீண்டும் உடல் உறுப்புகளுக்குள் செல்லும். இதைச் செய்ய உயர் தர சிறப்பு கருவிகளும் அனுபவமிக்க நிபுணர்களும் கட்டாயம் தேவை.”

“எங்கள் மருத்துவமனையின் கார்டியோதொரஸிக் எனும் இருதய அறுவை சிகிச்சை குழுவினர் இதை வழங்க பேருதவியாக இருந்தனர். நுரையீரல் மருத்துவர் குழுவும் எங்களுக்கு பக்கபலமாக இருந்தனர். இப்படி செயற்கையாக ஒருவருக்கு நுரையீரலின் செயல்பாட்டை அமைத்துத்தரும் அதிநவீன வசதி எங்கள் மருத்துவமனையில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.”

“எங்களுடைய அனுபவமிக்க நிபுணர் குழு மிகச்சிறப்பாக இந்த சவாலை எதிர்கொண்டனர். இவருடைய நிலைக்கு 24 மணி நேரமும் மருத்துவக் கண்காணிப்பு அவசியம். ஒவ்வொரு நிமிடமும் இதயத் துடிப்பை கவனித்திட வேண்டும்.”

“திடீரென ரத்த அழுத்தம் குறையலாம், எக்மோ கருவியில் ஏதேனும் சிறு மாற்றம் ஏற்பட்டாலும் அது சிகிச்சை வழங்குதலை பாதித்துவிடும், எனவே அதற்கான பிரத்தியேக கவனிப்பும் அவசியம்.”

“செவிலியர்கள், சுவாசக் கருவிகளுக்கான தொழில்நுட்ப நிபுணர் குழு, பராமரிப்பு ஊழியர்கள் ஆகியோரின் பங்களிப்பு இவரை மீட்டுகொண்டுவர அதிகம் தேவைப் பட்டது. இந்த அதிநவீன கருவியும், சிறந்த மருத்துவக் கட்டமைப்பும், நிபுணத்துவமும் இல்லையென்றால் இந்த இன்னலில் இருந்து இவரைக் காப்பாற்றியிருக்க முடியாது. அவருடைய நுரையீரலின் நிலை நல்ல முறையில் முன்னேற்றமடைந்து 2 மாத காலம் படுக்கையில் இருந்ததால் சிகிச்சைக்குப் பின் பிஸியோதெரபிஸ்ட் குழுவினரின் மூலம் அவருக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டது. இப்போது அவர் இயல்பு நிலைக்கு திரும்பி வீட்டிற்கு சென்றுள்ளார்.”

நம்பிக்கைக்கு கிடைத்த பரிசு:

“இந்த நோயாளி எங்கள் மருத்துவமனைக்கு மே மாதம் வந்தார். 2 மாதம் சிகிச்சை நடைபெற்றது, அதில் ஒன்றரை மாதம் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தும், 18 நாட்கள் எக்மோ கருவியின் உதவியோடும் சிகிச்சைப் பெறவேண்டிய நிலை இருந்தது.”

“இந்த சிகிச்சைப் பற்றி நாங்கள் அவரின் குடும்பத்தினரிடம் எடுத்துக் கூறியபோது, அவர்கள் அதைப் புரிந்துகொண்டனர். எங்கள் மருத்துவமனை மீது நம்பிக்கை வைத்து அவர்கள் எங்களுக்கு முழு ஒத்துழைப்பையும் 2 மாத காலமும் வழங்கினர். இந்த நம்பிக்கை எங்களுக்கு பெரிதும் ஊக்கமாக இருந்தது.”

மக்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம்:

“இவருக்கு உடலில் சர்க்கரை நோய் இருந்தது. இப்படி சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற இன்னல்களில் இருப்பவர்கள் எங்கு சென்றாலும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். நீங்கள் ஆரோக்கியமாக உணர்கிறீர்கள் என்றோ, அல்லது நான் இளைஞன் எனக்கு கொரோனா தொற்று நேராது என்ற சிந்தை கொண்டவராக இருந்தால் அதை அறவே மாற்றுங்கள். வயது வரம்பைத் தாண்டி தான் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.”

“புகை மற்றும் மது பழக்கம் உடையவர்கள் அவற்றைத் தவிர்ப்பது நல்லது ஏனென்றால் வேறு எந்த உடல் நல குறைபாடு இருந்தாலும் இந்த வைரஸ் எளிதில் நம் உடலை இன்னமும் பாழாக்கிவிடும். எனவே உடல்நலன் மீது அக்கறை கொள்ளுங்கள். தடுப்பூசியை இதுவரை போடவில்லை என்றால் மருத்துவரை அணுகி உடனே போட்டுக் கொள்ளுங்கள்.”

காலம் தாழ்த்தாதீர்! :

“நிறைவாக டாக்டர் சத்தியமூர்த்தி பேசுகையில், காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகுவது தான் நமக்கும், நம்மைச் சுற்றியுள்ளோருக்கும் நல்லது. சுயமாக மருந்து எடுத்துக் கொள்ளாமல் தகுந்த நேரத்தில் மருத்துவரை அணுகினால் கொரோனாவால் நுரையீரல் பாதிப்பு பெரிதாக ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம், தீவிர சிகிச்சை சென்று சிகிச்சை எடுக்கும் நிலை வராது, எளிதில் குணமடையும் வாய்ப்பும் அதிகம்.”

இரண்டாவது வாழ்க்கை கிடைத்தது!

மருத்துவர்களின் சிறந்த சிகிச்சை முறையினால் இப்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளேன்.

குப்புசாமி நாயுடு மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவருமே சிறந்த முறையில் கவனித்தார்கள். அவர்கள் அளித்த தனிப்பட்ட கவனிப்பு முறையால் தான் இதிலிருந்து மீண்டு வர முடிந்தது.

ஒரு நோயாளிக்குத் தேவையான அனைத்து வசதிகளும் இந்த மருத்துவமனையில் இருந்தது. மேலும், மருத்துவர்களை எந்நேரமும் எங்களால் சுலபமாக அணுக முடிந்தது. இவர்களின் மேம்பட்ட சிகிச்சை முறையினால் எனக்கு இரண்டாவது வாழ்க்கை கிடைத்துள்ளது என்றே கூறலாம்.