விதை முதல் பழம் வரை மருத்துவ குணம் மட்டுமே …

நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவை என்று சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக அனைத்து வகையிலும் ஒரு சிறப்பான மரமாக போற்றப்படுகிறது. நாவல்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.

அதே சமயம், நாவல் பழத்தை குழந்தைகள் உட்பட அனைத்து வயதினரும் அளவுடன் தான் பயன்படுத்த வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியை இப்போது நாம் நினைவில் கொள்ள வேண்டும். இதன் பழத்தையோ, பழச் சாற்றையோ சாப்பிடும் போது வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது. அதேபோல் நாவல் பழம் சாப்பிட்ட உடனே பால் அருந்தவும் கூடாது.

நாவல் பழம் அதிகம் விளையும் சமயங்களில் தினசரி இரண்டு அல்லது மூன்று பழங்களை உப்புச் சேர்த்து அல்லது தேன் சேர்த்து காலையில் சாப்பிடலாம். இப்படி தொடர்ந்து மூன்று மாதங்கள் வரை சாப்பிட்டால் மூல நோய் முற்றிலும் குணமாகும்.

அளவுடன் தினமும் எடுத்துக் கொண்டு வந்தால் உடலில் உள்ள பித்தம் மற்றும் உடற் சூட்டை தணிக்கும். நாவல் பழம் அதிக குளிர்ச்சி தன்மை கொண்டது. அதனால் இதை இரவு நேரத்தில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

சிலருக்கு அடிக்கடி சிறுநீர் வெளியேறும். அவர்கள் நாவல் பழத்தின் விதைகளை காய வைத்து இடித்து பொடியாக வைத்துக் கொண்ட தூளை தினமும் ஒரு கிராம் வீதம் காலை, மாலை தண்ணீருடன் கலந்து அருந்த வேண்டும். இவ்வாறு செய்தால் சிறுநீர் போக்கு குறையும்.

ஈறுகள் மற்றும் பற்களில் பிரச்சனை உள்ளவர்கள், நாவல் பழத்தினை உட்கொண்டால் நல்ல தீர்வு கிடைக்கும். அதிலும் நாவல் பழத்தின் இலையை பொடி செய்து, அதனைக் கொண்டு பற்களை துலக்கி வந்தால், ஈறுகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் இருக்கும்.

இதில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உங்கள் உடலில் இரத்த உற்பத்தியினை அதிகரிப்பதோடு இரத்த சோகை நோய் வராமல் காக்க உதவுகின்றது.

அதிக அளவு கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் உள்ளதால் உணவுகளில் உள்ள கால்சியம் சத்தினை உறிஞ்சுவதற்கு மெக்னீசியம் மிகவும் உதவியாக இருக்கும். எனவே எலும்புகளின் வலிமையினை அதிகரிக்க தினமும் நாவல் பழத்தினை உண்லாம். வாய் முதல் குடல் வரை உள்ள புண்களை குணப்படுத்துவதோடு பசியைத் தூண்ட உதவுகிறது.

நாவல் பழத்தை, கர்ப்பிணிப் பெண்கள் முதல் நான்கு மாதங்கள் வரைக்கும் தவிர்ப்பது சிறந்தது. நான்கு மாதத்திற்குப் பிறகு இப்பழத்தை நான்கு அல்லது ஐந்து என அளவுடன் உட்கொண்டு வருவது நன்மையை கொடுக்கும்.