“வெற்றியும் தோல்வியும் வாழ்வின் ஓர் அங்கம்”

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் ஹாக்கி அரையிறுதி போட்டியில் இந்திய அணி பெல்ஜியத்திடம் தோல்வியை தழுவியது. டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில், இன்று (ஆகஸ்ட் 3) நடைபெற்ற ஆண்கள் ஹாக்கி அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி பெல்ஜியத்தை எதிர்கொண்டது. இதில், இந்திய அணி 2-5 என்ற கோல் கணக்கில் போராடி தோற்றது. முதல் கால்பகுதியில் 2-1 என முன்னிலை வகித்தாலும், 2வது மற்றும் 4வது கால்பகுதியில் பெல்ஜியம் அணி அபாரமாக ஆடி மேலும் 4 கோல்கள் அடித்து வெற்றிப்பெற்றது. இந்திய அணி, அடுத்ததாக வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் விளையாட உள்ளது.

இந்நிலையில், இந்த போட்டி குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் வெற்றிகளும் தோல்விகளும் வாழ்வின் ஓர் அங்கம். டோக்கியோ ஒலிம்பிக்கில் நம்முடைய ஆண்கள் ஹாக்கி அணி வீரர்கள் சிறந்த விளையாட்டை வழங்கினர். அடுத்த போட்டியில் சிறப்புடன் விளையாட வாழ்த்துகள். வருங்காலங்களிலும் சிறந்த முறையில் செயல்பட எனது வாழ்த்துகள். நமது விளையாட்டு வீரர்களால் நாடு பெருமை கொள்கிறது என பதிவிட்டிருந்தார்.