கோவை மாவட்டத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியின் கேட்டிரிங் சயின்ஸ் துறை முதலிடம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் கேட்டிரிங் சயின்ஸ் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மண்ட் துறை அவுட்லுக் – ஐகேர் 2021 நடத்திய இந்திய அளவிலான சிறந்த துறைகளுக்கானத் தரவரிசைப் பட்டியலில் 17-வது இடத்தையும், கோவை மாவட்ட அளவில் முதலிடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளது.

இக்கல்லூரியின் கேட்டிரிங் துறையானது தென்னிந்தியாவில் முதன்முதலில் துவங்கப்பட்ட துறை என்ற சிறப்பினைப் பெற்றதோடு பல்வேறு சாதனைகளைப் புரிந்து கடந்த 35 ஆண்டுளாக இயங்கி வரும் வேலைவாய்ப்பு நிறைந்த துறை என்பது குறிப்பிடத்தக்கது. அவுட்லுக் – ஐகேர் 2021 ஐந்து பிரத்யேக நிலைகளில் இத்தேர்வினைச் செய்துள்ளது.

அதாவது கல்வி மற்றும் ஆராய்ச்சியில் சிறப்பு நிலை, தொழில் இடைமுகம் மற்றும் வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள், நிர்வாகம் மற்றும் மாணவர் சேர்க்கை, பன்முகத்தன்மை மற்றும் வெளிப்பாடு என்ற நிலைகளில் தரவரிசை மேற்கொண்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரிக்கு மகுடத்தைச் சூட்டியுள்ளது.

மேலும், இக்கல்லூரியின் பிசிஏ துறையானது இந்திய அளவில் 25-வது இடத்தினையும், கோவை மாவட்ட அளவில் முதலிடத்தையும் பெற்று கணினி சார்ந்த துறைகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறது. அதனோடு முதுகலை சமூகப்பணித்துறை இந்திய அளவில் 27-வது இடத்தையும், அறிவியல் மற்றும் பிபிஏ துறை முறையே 41 மற்றும் 49-வது இடங்களையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவை மாவட்டத்தில் முதலிடம் பெற்றமைக்காகக் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் பி.எல்.சிவக்குமார், துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கும் எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டி.லஷ்மிநாராயணசுவாமி தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.