ஒரே நேரத்தில் வந்த குறுஞ்செய்தி: சமூக இடைவெளியின்றி ரேஷன் கார்டு வாங்க குவிந்த மக்கள்

கோவையில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஒரே நேரத்தில் ரேஷன் கார்டு பெற்றுக்கொள்ள குறுஞ்செய்தி வந்ததால் மக்கள் அதிக அளவில் தாலுகா அலுவலகங்களில் குவிந்துள்ளனர்.

குடிமக்களின் முக்கிய ஆதாராமாக பயன்படும் ரேஷன் கார்டுகள் ஒவ்வொரு குடும்பத்திற்கு அவசியமான ஒன்றாக உள்ளது. இதில் நாள்தோறும் புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு பலரும் விண்ணப்பித்து வருகின்றனர். அனைவருக்கும் விண்ணப்பித்த 15 நாட்களில் ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த செயல்முறையும் தொடர்ந்து வருகிறது.

இதற்கிடையில் புதிய ரேஷன் அட்டைதாரர்கள் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொருட்களை பெற்றுக்கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய ரேஷன் கார்டு பதிவு செய்வதற்காக கோவையில் உள்ள தெற்கு, வடக்கு மத்திய தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பித்திருந்த மக்களுக்கு ஒரே நேரத்தில் உங்கள் ரேஷன் கார்டை பெற்றுக்கொள்ளலாம் என்ற குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் இன்று காலை முதல் தாலுகா அலுவலகங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளியின்றி மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ரேஷன் கார்டுகளை பெற்றுச் செல்கின்றனர்.

கோவையில் ஏற்கனவே கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இவ்வகை மக்கள் கூட்டங்களால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.