சாலை விபத்து நடந்தவுடன் எவ்வாறு முதலுதவி அளிக்க வேண்டும்? – விழிப்புணர்வு

கடந்த 2019ம் ஆண்டில் உலகளவில் 199 நாடுகளில் நடந்த கணக்கெடுப்பின்படி சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் இந்தியா முதல் இடத்திலும், மற்ற இடங்களில் சைனா மற்றும் அமெரிக்கா உள்ளன.  மேலும், இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டில் 4,49,002 சாலை விபத்துகள் நடந்ததாகவும், அதில் 1,51,113 மக்கள் இறந்ததாகவும், 4,51,361 பேர் காயங்கள் அடைந்ததாகவும் இந்த கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

ஓவ்வொரு வருடமும் எலும்பு மற்றும் மூட்டு தினத்தை முன்னிட்டு ஆகஸ்டு 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை ஒரு வாரத்திற்கு மக்களுக்கு எலும்பு தேய்மானம் மற்றும் எலும்பை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வை இந்தியா முழுவதும் எலும்பியல் சங்கம் நடத்தி வருகிறது.

“தேசிய எலும்பு மற்றும் மூட்டு தினம்” 2012ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்டு மாதம் 4ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு 2012ம் ஆண்டில் தேசிய எலும்பியல் சங்கத்தின் அப்போதைய தலைவரான பேராசிரியர் டாக்டா எஸ். ராஜசேகரன் அதிக முயற்சி எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை எலும்பியல் சங்கம் வருகிற ஆகஸ்டு மாதம் 4ம் தேதி “எலும்பு மற்றும் மூட்டு தினம் 2021” முன்னிட்டு மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் சாலை விபத்து நடந்த உடன் எவ்வாறு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பவேண்டும் என்பது  குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.

இந்த வருட “எலும்பு மற்றும் மூட்டு தினம் 2021” குறித்து தமிழ் நாடு எலும்பியல் சங்க நிர்வாக  குழு உறுப்பினர்  டாக்டர்  சி. ரெக்ஸ், கோவை எலும்பியல் சங்க தலைவர் மற்றும் செயலர் டாக்டர் ஜி. பாலசுப்பிரமணியம், டாக்டர்  பி தனசேகர ராஜா கூறியதாவது:

2021ம் ஆண்டு எலும்பு மற்றும் மூட்டு தினத்தை “ தன்னைப் பாதுகாத்தல் மற்றும் இன்னொருவரை பாதுகாத்தல்” என்கிற தலைப்பில் கொண்டாடலாம் என்று தற்போதைய தேசிய எலும்பியல் சங்கத் தலைவர் டாக்டர்  பி. சிவசங்கர்  அறிவித்துள்ளார். பொது மக்களிடயே இந்த தலைப்பில் விழ்ப்புணர்வு ஏற்படுத்தப் பலவித நிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்துள்ளோம் என்றனர்.

இந்திய எலும்பியல் சங்கம் ஒரு லட்சம் மாணவர்கள், காவல்துறையினர் மற்றும் பொது மக்களுக்கு இந்த “எலும்பு மற்றும் மூட்டு வாரத்தில் சாலை விபத்து நடந்த உடன் எவ்வாறு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பவேண்டும் என்கிற பயிற்சி அளித்து அவர்களை உயிர் இழப்பை தடுப்பவர்களாக”   மாற்ற திட்டம் வகுத்துள்ளனர்.