பேரூர் பெரியகுளத்தில் மியாவாக்கி முறையில் 2 ஆயிரம் மரக்கன்றுகள்

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டனுக்கு மத்திய ஜல் சக்தி அமைச்சகம் வாட்டர் வாரியர் எனும் விருது வழங்கியது. இந்த விருதுடன், விருது தொகையாக 2 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. விருது தொகையுடன் தன்னார்வ அமைப்புகளின் உதவியோடு, பேரூர் பெரியகுளக்கரையில் மரக்கன்று நடவு செய்ய திட்டமிடப்பட்டது.

மேலும், அமைப்பின் 200வது வாரக் களப்பணியும் நடந்ததையடுத்து, அதில் 200 வகையான மரக்கன்றுகள் வைத்து, மியாவாக்கி முறையில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. இதற்கு வாட்டர் வாரியர் அடர் வனப்பூங்கா என பெயரிடப்பட்டுள்ளது.

குளங்களில் இருந்து எடுக்கப்பட்ட 25 லோடு ஆகாயத்தாமரை கழிவுகளை உரமாக கொட்டப்பட்டு, மூன்று பக்கங்களுக்கு வேலியிட்டு செடிகளுக்கு சொட்டு நீர் பாசன வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 6.5 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 200 வகையான மரக்கன்றுகள் தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து நாட்டு வகை மரங்கள் சேகரிக்கப்பட்டு எடுத்து வரப்பட்டன.

தன்னார்வலர்கள், விரைவு அதிரடிப் படையினர், மற்றும் என்சிசி மாணவர்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளியுடன் மரக்கன்றுகள் நட்டனர்.