நான் நினைப்பது நடப்பதில்லையே…?!

கேள்வி: எனக்கு வாழ்க்கையே பெரும் போராட்டமாக இருக்கிறது. பல நேரங்களில் நான் நினைப்பது எதுவும் நடப்பதில்லை, அதனால் வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாம் என்னும் எண்ணம் என் மனதில் மிகவும் ஆழமாகத் தோன்றுகிறது. நான் என்ன செய்வது?

சத்குரு:

நினைப்பது போல நடப்பதில்லையா?

‘வாழ்க்கையை’ எப்படி நடத்துவது என்றுதான் பார்க்கிறீர்கள்; ‘உயிரை’ எப்படி நடத்திக் கொள்வது என்று நீங்கள் பார்க்கவில்லை. உலகத்தை எப்படி வழி நடத்துவது என்றுதான் பார்க்கிறீர்கள். நீங்கள் நினைப்பது போலவே ஏன் உலகம் நடக்க வேண்டும்? நான் நினைப்பது போல இந்த உலகம் நடக்கவில்லை என்பது ஒன்றுதான் இப்போது உங்களுக்கு பிரச்சனையாக இருக்கிறது.

நமது உயிரை சுகமாக வைத்துக் கொள்வதுதான் நமது வாழ்க்கையாக இருக்கவேண்டும். சுற்றியிருக்கிற உலகை ஏதோ நமக்குத் தெரிந்தவரையில் நடத்திக் கொள்ளலாம். அப்படியில்லாமல் நான் நினைப்பது போலவே மற்ற அனைவரும் நடந்துகொள்ள வேண்டும் என்று முயற்சி செய்தீர்கள் என்றால் உங்களுக்கு துன்பம்தான் வரும். துன்பத்தைத் தவிர வேறு எதுவும் வரமுடியாது.

அயர்ன்பாக்ஸ் டெலிபோன் ஆன கதை!

ஒருமுறை சங்கரன்பிள்ளை ஒரு அவசர சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருந்தார். அவருடைய காது கன்னம் எல்லாமே சுட்டிருந்தது. என்ன நடந்தது என்று டாக்டர் பதற்றத்துடன் கேட்க, சங்கரன்பிள்ளை சொன்னார், “துணி அயர்ன் செய்து கொண்டிருந்தபோது, போன் ரிங் அடித்தது, அதுதான்”. “அது சரி, இன்னொரு பக்கமும் காது, கன்னம் எல்லாம் சுடப்பட்டிருக்கே?” என்று டாக்டர் மீண்டும் கேட்க, பிள்ளை சொன்னார், “டாக்டரை போனில் கூப்பிட முயற்சி செய்தேன்”. இப்படி எது வந்தாலும் ஒன்றை இரண்டாக செய்து கொள்ளாதீர்கள்.

சில மாதங்கள் முன்பு, ஈஷா மையத்தில் ஒரு யோகா வகுப்பு நடந்தது. வகுப்பு ஆரம்பிக்கும் முன், அனைவரையும் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள சொன்னேன். அப்போது ஒரு பெண்மணி, “நான் 5 முறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன்” என்று ஆரம்பித்தார். உடனே நான், “அம்மா, அதோடு நிறுத்திக் கொள்ளுங்கள், 5 தடவை பண்ணியும் உயிர் போகலைன்னா, நீங்க எதற்கும் பிரயோஜனம் இல்லை என்று தானே அர்த்தம்? வாழறதுக்கு திறமை இல்லையென்றால், சாகறதுக்கும் திறமை இல்லை என்றுதானே ஆகிவிட்டது? சாவது அவ்வளவு கடினமா? தேவையில்லாததை எல்லாம் மனதில் சேர்த்துக் கொண்டே போகாதீர்கள், அம்மா” என்று நிறுத்திவிட்டேன். (அனைவரும் சிரிக்கிறார்கள்)

ஆனந்தமாக வாழுங்கள்!

மனதிற்கு, உடலுக்கு, உயிருக்கு வாழவேண்டும் என்று ஆசையா? போகவேண்டும் என்று ஆசையா? உலகமே உங்கள் சொல்படி நடக்க வேண்டும் என நினைக்கிறீர்கள், அதனால்தான் போக வேண்டும் என்னும் ஆசை உங்களுக்கு வருகிறது. உங்கள் எண்ணங்களை மற்றவர் மீது தொடர்ந்து திணிக்க முயற்சித்தீர்கள் என்றால், மற்றவர்களுக்கும் நீங்கள் போனால் பரவாயில்லை என்னும் ஆசை ஆழமாக வந்துவிடும்.

எனவே உங்கள் மனதை ஏதேதோ எண்ணங்களால் அசிங்கப்படுத்திக் கொள்ள வேண்டாம். இறப்பு எப்படியும் வரும். பாதிப்போடு வாழ்ந்தீர்கள் என்றால் 50 வருடங்கள் வாழ்ந்தாலும் ஏதோ 1000 வருடங்கள் வாழ்வது போலிருக்கும். ஆனந்தமாக வாழ்ந்தால் இறப்பு வரும்போது மிக சீக்கிரமாக வந்தது போலிருக்கும். ஆனந்தமாக இருக்கும் மனிதர்களுக்கு என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்குள் வாழ்க்கை முடிந்துவிடும்.