ரவுண்ட் ராபின் கிரிக்கெட் போட்டிக்குத் தேர்வாகியுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மாணவிகள்

கோவை எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டி.லஷ்மிநாராயணசுவாமி அவர்களால் நடத்தப்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கிரிக்கெட் டிரஸ்ட் அகாடெமியைச் சேர்ந்த நான்கு பெண்கள், தமிழக அளவில் நடைபெறக்கூடிய 19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் ரவுண்ட் ராபின் கிரிக்கெட் போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர். ஜெயரூபா, யாழினி மருதாசலம், ருத்ரபிரியா, ஸ்வேதா ஆகிய நான்கு மாணவிகள் இந்த சிறப்பிடத்தைப் பெற்றுள்ளனர்.

தேர்வாகியுள்ளவர்களுள் யாழினி மருதாசலம் மற்றும் ஸ்வேதா ஆகிய இரு மாணவிகளும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியையும், மாணவி ஜெயரூபா ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரியையும், மாணவி ருத்ரபிரியா ஸ்ரீ ராமகிருஷ்ணா சிபிஎஸ்சி பள்ளியையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

மேலும், ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேசன் பள்ளியைச் சேர்ந்த மாணவி சந்தியா மற்றும் ஸ்ரீவர்ஷினிதேவி, ஸ்ரீதர்ஷினிதேவி ஆகியோர் மகளிர் மேம்பாட்டு குழு நடத்தும் கிரிக்கெட் பயிற்சி முகாமிற்குத் தேர்வாகியுள்ளனர். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், ரவுண்ட் ராபின் கிரிக்கெட் போட்டிக்கும், கிரிக்கெட் பயிற்சி முகாமிற்கும் சேர்த்து கோவை மாவட்டத்திலிருந்து மொத்தம் 10 மாணவிகளைத் தேர்வு செய்துள்ளது. இதில் 7 மாணவிகள் ஸ்ரீ ராமகிருஷ்ணா கிரிக்கெட் டிரஸ்ட் அகாடெமியைச் சார்ந்தவர்கள்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா அகாடெமியின் பயிற்சியாளர் குருசாமி இதுவரை தமிழகம் மற்றும் ஐபிஎல், டிஎன்பிஎல் அணிகளுக்குக் கோவையிலிருந்து தொடர்ந்து பல சிறந்த வீரர்களை உருவாக்கித் தந்து கொண்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வீராங்கனைகளை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டி. லஷ்மிநாராயணசுவாமி பாராட்டி வாழ்த்தினார். மேலும், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி குழுமங்களின் முதல்வர்களும், உடற்கல்வி இயக்குநர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.