மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக நில உரிமை இல்லாத இடங்களில் உள்ள கோவில்களை மாற்றி வைப்பது காலங்காலமாய் நடைபெற்றுவரும் ஒன்று. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு.

இரு தினங்களாக ஈரோடு, திருப்பூர், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் வரும் கோவில்களை ஆய்வு மேற்கொண்டு வரும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று கோவையில் உள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக சாமி தரிசனம் செய்து விட்டு அங்குள்ள அதிகாரிகளுடன், அங்கு நடைபெற்று வரும் கட்டுமான பணிகளையும் நடைபெற இருக்கின்ற பணிகளையும் குறித்து கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்கக் கூடிய கோவில்களில் ஆய்வு மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலிலும் ஆய்வு மேற்கொண்டுள்ளாதாக தெரிவித்தார். தற்போது நடைபெற்று வரும் ஆய்வில் குடமுழுக்கு குறித்தும், ஆக்கிரமிப்புகள் குறித்தும் கோவில் இடங்களில் உள்ள கடை வாடகை குறித்தும் அர்ச்சகர்கள் கோவிலில் ஊழியர்களிடம் பிரச்சனைகளை கேட்டறிந்து வருவதாக தெரிவித்தார். மருதமலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு போடப்பட்ட மாஸ்டர் பிளானில் பக்தர்கள் போதிய அளவு பயன்பெறும் வகையில் அது இல்லாததால் புதிய மாஸ்டர் பிளான் போட கருத்துரு அனுப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும் கடந்த காலங்களில் போடப்பட்ட தானியங்கி டெண்டரை உடனடியாக முடிக்க முதல்வர் அறிவுறுத்தி உள்ளார் என்றும் வாகனங்கள் நிறுத்தும் இடங்களை அதிகரிக்கவும் இக்கோவிலில் யாக சாலையை நல்முறையில் அமைத்து தருமாறும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். சுவாமிக்கு அருகாமையிலேயே மடபள்ளி அமைத்திட உத்தரவிட்டிருக்கின்றொம் என கூறினார். மேலும் கோவிலை சுற்றிலும் பூக்கள் நிறைந்த செடிகளை வைக்கவும் கூறி இருப்பதாக தெரிவித்தார். தமிழகத்தில் 46/3 கீழ் வருகிற 539 கோவில்கள் இந்து சமய அறநிலைத்துறையால் அடையாளம் காணப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர் அனைத்து கோவில்களிலும் பக்தர்களின் அனைத்து வசதிகளும் பெருகுகின்ற அளவிற்கு தரம் உயர்த்திட முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார். கோவில் யானைகள் இருக்கின்ற இடத்திலேயே புத்துணர்வு பெறுவதற்காக குளியல் தொட்டிகள் சத்தான உணவுகள் போன்றவற்றை வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். முத்து பணியினை பொருத்த அளவில் சுமார் மூன்றரை கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடு போடப்பட்டது. கடந்த ஆண்டு போடப்பட்ட செண்டர்களில் அது சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வரவில்லை என்பதால் புதிய டெண்டர் போடுவதற்கு இந்து சமய அறநிலை துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அனுவாவி கோவிலுக்கு ரோப்கார் போட வேண்டும் என்ற கோரிக்கை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும். கோவில் ஆக்கிரமிப்புகள் குறித்து வருங்காலங்களில் நான் பேச வேண்டும் என்றால் குறைந்தது நான்கு மணி நேரமாவது தேவைப்படும் அந்த அளவிற்கு ஆக்கிரமிப்புகள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

திருக்கோவில்களில் காலியாக உள்ள காலிபணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கும் முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். தனியாருக்கு சொந்தமான இடங்களில் திருக்கோவில்கள் இருந்தால் அதனை யாரும் அப்புறப்படுத்த மாட்டார்கள் என்று தெரிவித்த அமைச்சர் வளர்ச்சி திட்ட பணிகள் என்று வரும்பொழுது நில உரிமை இல்லாத இடங்களில் கோவில்கள் இருந்தால் அதனை மாற்றி அமைப்பது வழக்கம். கோவையில் முத்தண்ணன் குளம் பகுதியில் அகற்றப்பட்டு கோவில்களுக்கு உடனடியாக மாற்று இடம் அமைத்து அங்கு திருக்கோவில்கள் எழுப்பப்படும் என்று தெரிவித்தார்.