கோவை நீதிமன்றத்தில் ஜூலை 4வரை நேரடி விசாரணை இல்லை

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் ஜூலை 4ம் தேதி வரை நேரடி விசாரணை கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், பெரும்பாலான மாவட்டங்களில், நீதிமன்ற விசாரணையில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. குறைந்த அளவில் வழக்குகளை நேரடி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும், 70 சதவிகித ஊழியர்கள் பணிக்கு வரவும், ஐகோர்ட் அனுமதியளித்துள்ளது.

ஆனால், மற்ற மாவட்டங்களை ஒப்பிடும் போது, கோவையில் தொற்று பாதிப்பு அதிகம் இருப்பதால், நீதிமன்ற விசாரணையில், ஜூலை 4ம் தேதி வரை பழைய நிலை தொடர உத்தரவிடப்பட்டுள்ளது. நேரடி விசாரணைக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆன்லைன் வாயிலாக தாக்கல் செய்யப்படும் ஜாமின் மனுக்கள் மீது உத்தரவு பிறப்பிக்கவும், முக்கிய வழக்கில் விருப்பத்தின் பேரில் காணொலி வாயிலாக இரு தரப்பு வக்கீல் ஆஜராகவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள, ‘டிராப் பாக்சில்’ போடப்படும் புதிய வழக்குகளை பைலிங் செய்து வழக்கு எண் கொடுக்க கோர்ட் ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.