வளர்ச்சி பாதையில் தமிழகம்: முதல்வருக்கு நன்றி

வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் 3 வேளாண் மற்றும் குடியுரிமை திருத்த சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும் என சட்டசபையில்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தது மிகவும் வரவேற்கதக்கது என பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் கோவையில் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற கூட்ட தொடரில் உரையாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 வேளாண் மற்றும் குடியரிமை சட்டங்களை எதிர்வரும் பட்ஜெட் சட்டமன்ற கூட்ட தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என அறிவித்திருந்தார்.

இந்நிலையில் கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், மத்திய அரசு சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு எதிராக கொண்டுவந்த குடியுரிமை சட்டம் ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றுவோம் என்றும் விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவோம் என்று கூறியதை நன்றி கலந்த பாராட்டுதல்களுடன் வரவேற்பதாக கூறினார்.

அண்மையில் பிரதமரை சந்தித்து கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு வலியுறுத்திய தமிழக முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்ட அவர், பதவி ஏற்ற நாளிலிருந்து பல்வேறு திட்டங்களை அறிவித்து தமிழகத்தில் கொரோனவை கட்டுக்குள் கொண்டுவந்து மக்களை கொரோனாவில் இருந்து காத்து பொருளாதாரத்திலும் சமூக நீதியிலும் வளர்ச்சிப் பாதையில் அழைத்து கொண்டு சென்று கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றியினை கூறுவதாக அவர் தெரிவித்தார்.