என்ன கொடுமை சார் இது!

கோவிட் 19 பெருந்தொற்றின் இரண்டாம் அலையின் பாதிப்பு தமிழகத்தில் இன்னும் குறையவில்லை. குறிப்பாக கோவையில் குறையவே இல்லை என்பது போல முதலிடத்தில் உள்ளது. அரசும், மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களும் இன்னும் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். ஏற்கனவே ஊரடங்கு என்ற துன்பத்தில் சிக்கி, மக்கள் தவிக்கும் நிலை இன்னும் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இதை பல வகையிலும் ஆராய்ந்து பார்க்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உண்டு.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு காலரா, பிளேக் நோய்கள் வந்தபோது நாம் பல வகையிலும் பின்தங்கி இருந்தோம். அடிமை நாடு, அந்நிய ஆட்சி, மருத்துவ முன்னேற்றம் இல்லாதது, தகவல் தொடர்பு வசதி இன்மை, போக்குவரத்து வசதிகள் குறைவு, கல்வி இல்லாத நிலை என்று பல மைனஸ் இருந்தன. இன்று அதெல்லாம் பிளஸ் ஆக மாறிவிட்டது. சொல்லப் போனால் இந்த நோய் வந்த ஓராண்டுக்குள் தடுப்பூசி கூட கண்டுபிடித்து விட்டார்கள். உள்ளங்கையில் உலகம் என்று மனிதனுக்கு தலை கொள்ளாத பெருமை வேறு. இதற்கு இயற்கை அடித்த ஆப்பு போலத்தான் இந்த பெருந்தொற்று தெரிகிறது.

இப்போது உள்ள நிலைமைக்கு சில காரணங்கள் தெளிவாக தெரிகின்றன. முதலில் அரசு சொல்லிய தடுப்பு நடவடிக்கைகளை அனைவரும் பல்வேறு காரணங்களால் முழுமையாக கடைபிடிக்க முடியாமல் போனது ஏன் என்று சிந்திக்க வேண்டும். கடுமையாக பாதிக்கப்பட்ட ஏழைகளைத் தவிர மற்ற அனைவரும் ஒத்துழைப்பு தந்திருக்க வேண்டும். நாம் தரவில்லை என்பதே உண்மை. மனசாட்சிபடி ஒழுங்காக வாய், மூக்கு மூடும்படி மாஸ்க் அணிபவர்கள் எத்தனை பேர் என்று எண்ணிப்பார்க்க வேண்டும். அதைப் போலவே இது பேரிடர் காலம் என்ற அக்கறையும் பொறுப்பும் அனைவருக்கும் இருந்தால், பக்கத்தில் இருப்பவர் மேல் அக்கறை இருந்தால் பத்து நாட்கள் சமாளிக்க முடியாதா?

இது வெளியே என்றால் வீட்டுக்குள் நடப்பது அதைவிட கொடுமை. நம்முடைய பாட்டன் காலத்தில் இருந்து சாப்பிட்ட உணவு முறை காணாமல் போய் விட்டது. எதன் பின்னாலோ ஓடி, சமையல், சத்துணவு, உடல் நலம் எல்லாம் நம் சமூகத்துக்கு மறந்து விட்டது. புதிய நுகர்வோர் கலாச்சார முறைகள் நம் வாழ்வில் ஆக்கிரமித்து இருக்கின்றன. சமையல், சத்துணவு, உடல் நலம் எல்லாம் மறந்த சமூகத்துக்கு தொலைக்காட்சி தொடர்களிலும் செல்போன்களில் செலவழிக்க நேரம் கிடைக்கிறது. சம்பாதிக்க தெரியாவிட்டாலும் சரக்கடிக்க தெரிகிறது. ஆனால் நோய் தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க, உடல்நலனை பாதுகாக்க மட்டும் தெரிவதில்லை. என்ன கொடுமை இது?

நாம் அனைவரும் ஒத்துழைப்பு அளித்தால் தான் இந்த நோய் ஒழியும். இது ஒழிந்தால் தான் நாம் வெளியே நடமாட முடியும், பணிகளை செய்ய முடியும். அதற்கு நாம் தான் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். எத்தனையோ முன்களப் பணியாளர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து பணிபுரியும் போது, நமக்காக, நம் குடும்பத்துக்காக நம் உடல்நலனை பாதுகாக்கும் வகையில் வாழ்க்கை நடத்துவதே சிறப்பு. உடல்நலனை கெடுக்கும் மது உள்ளிட்ட அனைத்தையும் ஒதுக்குவோம். சத்தான உணவுகளை அதிகம் சாப்பிட முயற்சி செய்வோம். இந்த உடல் நம் பெற்றோர் நல்லமுறையில் தந்தது, அதை கெடுத்துக்கொண்டு நாட்டுக்கும் வீட்டுக்கும் பாரமாக மாறாமல் நல்ல ஒழுங்கு முறையில் வாழ்வு நடத்தும் வரை, எதையும் நாம் எதிர் கொள்ள முடியும்.

இது போன்ற பேரிடர் ஏற்படும் தருணங்களில் சில இழப்புகள் தவிர்க்க முடியாது என்றாலும் ஒரு அறிவார்ந்த சமூகம் சரியாக செயல்பட்டு இழப்புகளை குறைக்கும், எதிர்த்து போராடி பேரிடரை வெல்லும். நாம் அப்படிப்பட்டவர்கள் என்பதை செயலில் காட்டுவோம்!