முதல் மாதத்தில் என்ன செய்தார் முதல்வர் ?

‘தடை தாண்டும் ஓட்டம்’ என்று ஒரு விளையாட்டுப் போட்டி உண்டு. ஆங்கிலத்தில் ’ஹர்டுள்ஸ்’ என்று சொல்லுவார்கள். ஓட்டத்தின் இடையே பல தடைகள் நிறுத்திவைக்க பட்டிருக்கும். உறுதி, வலிமை, யுக்தி, தன்னம்பிக்கை அனைத்தும் ஒருசேர இருந்தாலொழிய இதில் வெல்வது கடினம்.

தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்படிபட்ட சவால்கள் நிறைந்த ஓட்டத்தில் தான் துடிப்புடன் ஓடிக்கொண்டிருக்கிறார். கடைசியாக சட்டமன்றத்தில் துணை முதல்வராக பொறுப்பில் பார்த்த ஸ்டாலினுக்கும், தற்போது ’முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ ஆகிய நான் என கூறி முதல்வராக பதவியேற்று முதல் மாதத்தை நிறைவு செய்துள்ள ஸ்டாலினுக்கும் பல புதுமையான விஷயங்கள் உண்டு.

மாநில மக்களின் நன்மைக்காக பல நல்ல திட்டங்களை அறிவித்திருக்கிறார், கொரோனா கட்டுப்பாட்டில் மிக தீவிரமாக செயலாற்றி வருகிறார் என்பது மக்களின் கருத்து.

கோவைக்கு முதல்வர் இருமுறை ஆய்வு மேற்கொள்ள வந்தது, அதிகப்படியான தடுப்பூசியை சென்னைக்கு அடுத்தபடியாக கோவைக்கு தந்தது, இரு அமைச்சர்களை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் பொறுப்பாளர்களாக அறிவித்தது, சிறப்பு அதிகாரியை கொரோனா கட்டுபாட்டிற்காக இங்கே நியமனம் செய்தது, இது அனைத்திற்கும் மேலாக அவர் கொரோனா சிகிச்சை வார்டுக்குள் சென்றது எல்லாம் அவருக்கு கோவை மீது அக்கறை உள்ளது என்பதை தான் வெளிப்படுத்துகிறது.

இவற்றையும் தாண்டி பலர் பல கருத்துக்களை முதல்வரின் முதல் மாத நடவடிக்கை மீது கொண்டுள்ளனர் :

 

நலிவுற்ற மக்களுக்கு கூடுதலான உதவிகள் செய்ய வேண்டும்!

பி.ஆர்.நடராஜன், கோவை மக்களவை உறுப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

பெருந்தொற்று காலத்தில் முதலமைச்சராக பொறுப்பெடுத்துக் கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்துவது தான் முதல் கடமை என்று கூறியுள்ளார். ஆளுங்கட்சி, எதிர்கட்சி போன்ற பேதங்களுக்கு இடமில்லாமல் தமிழ்நாட்டை காப்பதை பிரதான நோக்கம் என்று அறிவித்ததோடு, சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவர்களையும் அழைத்து ஒன்றாக நின்று, கொரோனாவை முறியடித்து, தமிழ்நாட்டு மக்களை பாதுகாப்போம் என தெரிவித்துள்ளார்.

அரசியல் வேறுபாடுகள் இல்லாமல் கொரோனாவை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அத்தியாவசிய தொழில் தவிர பிற தொழில்கள் மூட வேண்டும் என்று, அனைத்து தரப்பின் ஓப்புதலோடு, முழு ஊரடங்கை அமல்படுத்தியதால் தொற்று குறைந்து வருகிறது. மிக வேகமாக என்றில்லா விட்டாலும்கூட குறைந்து வருவதை பார்க்க முடிகிறது.

ஆரம்பத்தில் தடுப்பூசி போட தயக்கம் இருந்தாலும் இப்போது மக்கள் முன்வருவது வரவேற்கத்தக்கது. மத்திய அரசாங்கம் மாநில அரசுக்கு தேவையான தடுப்பூசிகளை உடனடியாக கொடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டிலே மிக அதிகமான தடுப்பூசி கடந்த வாரங்களிலே கோவையில் போடப்பட்டது. இருப்பினும் மாநில அரசாங்கம் இன்னும் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும்.

சமீப காலத்தில் ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறை அரசாங்கத்தின் முன் முயற்சியின் காரணமாக தவிர்க்கப்பட்டிருக்கிறது. முதல்வராக பொறுப்பெடுத்த பிறகு இரண்டு முறை மேற்கு மண்டலத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தது, கொரோனா தடுப்பு பணிகளை வேகப்படுத்தியுள்ளது. தடுப்பு நடவடிக்கைகளுக்காக சில பொறுப்பான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் நியமித்துள்ளார்.

பொதுமக்களுக்கு உதவும் வகையில், கலைஞர் பிறந்தநாளன்று 14 வகை மளிகைப் பொருட்களும், தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியில், 4000 ரூபாயில் மீதமுள்ள 2000 ரூபாய் அளிப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்கள். இன்னும் கூடுதலாக நலிவுற்ற மக்களுக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா என்பது குறித்து மாநில அரசும், மாநில நிதியமைச்சரும் யோசிக்க வேண்டும்.

 

கோவையின் மீது தனி கவனம் வேண்டும்!

வானதி சீனிவாசன், எம்.எல்., கோவை தெற்கு தொகுதி

முதல்வர் ஸ்டாலின் பதவி ஏற்ற காலம் கடுமையானதாகவும், சாவல்கள் நிறைந்ததாகவும் உள்ளது. அதுமட்டுமல்லாது இரண்டாம் அலை எதிர்பாராத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவை சிறப்பாக கையாண்ட தமிழகம் என்ற நிலை, தற்பொழுது இந்த இரண்டாம் அலையில் மாறியுள்ளது. பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகமாக உள்ளது.

மாநில அரசு இந்த சூழலில் தாமதமாக தனது பணியை துவங்கியுள்ளது. கோவையில் கொரோனாவின் பாதிப்பு உச்சம் தொட்ட பொழுதிலும், இதற்கு முன்பு செய்யப்பட்ட ஏற்பாடுகளில் பெரிய கவனம் செலுத்தவில்லை.

ஆரம்பகட்ட நோய் கண்டறிதல், தொற்று உறுதியானவர்கள் தனிமைப்படுத்தலில் அக்கறை இல்லை என்று தோன்றுகிறது. மற்றும் மத்திய அரசிடமிருந்து பெற்ற தடுப்பூசியை சரிவர பயன்படுத்தியிருந்தால் தடுப்பூசி பெறுவதில் முன்னிலையில் இருந்திருப்போம். இதிலும் தாமதமாக விழித்திருப்பதாக தோன்றுகிறது.

கோவைக்கு இரண்டு அமைச்சர்கள், தனி சிறப்பு அதிகாரி அமைத்திருக்கிறார்கள், மக்கள் பிரதிநிதியாக நாங்களும் எங்கள் கோரிக்கைகள் குறித்து நேரடியாக முதல்வரிடம் பேசியுள்ளோம்.

ஆனால், இவைகளெல்லாம் நடந்து கொண்டிருந்த வேளையில் கோவையில் கொரோனாவின் பாதிப்பு படிப்படியாக உயர்ந்துகொண்டே வருவதோடு, உயிரிழப்பும் உயர்கிறது. ஆனால் தடுப்பூசி போடப்படும் எண்ணிக்கை சொற்ப அளவிலேயே உள்ளது.

தடுப்பூசி ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் ஆக்சிஜன் படுக்கைகள் தட்டுப்பாடு நிலவி கொண்டிருக்கிறது. கோவை அரசு கலைக் கல்லூரியில் தனியாரின் சார்பில் 200 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கப்பட்டு அதனை சேப்பாக்கம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். ஆனால் ஒரு வார காலம் அது பயன்பாட்டிற்கு வரவில்லை.

அதேநேரத்தில் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை வசதி இல்லாமல் நோயாளிகள் அவதியுற்றனர். ஒரு சில தனியார் ஆக்சிஜன் ஆம்புலன்ஸ் இருந்தும் பலர் உயிரிழந்தனர். தனியார் அமைப்புகள் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தாலும், அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர ஏன் இந்த அரசு சுணக்கம் காட்டுகிறது.

கோவையில் காவல்துறை கட்டுப்பாடுகளை சரிவர அமல்படுத்துவது இல்லை, மாநகராட்சி நிர்வாகம் தூய்மை பணிகளில் கவனம் செலுத்துவதில்லை, மாவட்ட நிர்வாகத்திடம் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் ஏற்பாட்டில் வேகம் இல்லை. நோய் கண்டறிந்து தனிமைப்படுத்துதலிலும் தடுப்பூசி போடுவதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். தனிமைப்படுத்துதல் முகாமில் கடுமையான கட்டுபாடுகளை கொண்டுவாருங்கள். இவைகளை எல்லாம் மக்கள் பிரச்சனைகளாகவே சொல்கிறோம்.

இந்த மாதத்திற்கு 42 லட்சம் தடுப்பூசி மருந்தினை மத்திய அரசு கொடுத்துள்ளது. அதனை சரிவர அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். அதற்கு நாங்களும் உதவுகிறோம். இருப்பினும் மக்களிடம் தடுப்பூசி குறித்த ஆரம்பகட்ட பயம் உள்ளது. இதற்கு தற்பொழுதைய ஆளுங்கட்சிக்கும் ஒரு பங்கு உள்ளது. இதனை உடைக்க அவர்கள் முன்வர வேண்டும்.

கோவை மற்ற மாவட்டங்கள் போல் இல்லை. இங்கு அதிகபாதிப்பு உள்ளது. அதனால் அதிகப்படியான தனி கவனம் வேண்டும்.

 

முதல்வருக்கு 100/100

என்.ராம், இயக்குனர், தி இந்து குழுமம்

இந்த அரசு கொரோனாவை கட்டுப்படுத்துவதை பிரதானமாக கருதி, அந்த சவாலை சிறந்த முறையில் சந்தித்துவருகிறது. கோவிட் குறித்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஆலோசனை குழுவை அமைத்து, அனைத்து கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் பிரதிநிதித்துவம் தந்துள்ளது.

அனைவரும் சேர்ந்து எடுக்கும் முடிவிற்கு நல்ல பலன் கிடைக்கும். இதை மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது வேண்டுமென கேட்டதற்கு அதிமுக ஏற்றுக்கொள்ளவில்லை.

மேற்கு தமிழக பகுதிகளில் தொற்றின் தாக்கம் அதிகமான தருணத்தில் முதல்வர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு தீவிரத்தை கட்டுக்குள் கொண்டுவர முக்கியத்துவம் காட்டினார். ஏழை மக்கள் வாழ்வாதாரத்திற்கு உதவிடும் வகையில் ரூ.4000 வழங்கினார். அவசிய தேவைக்கு உதவும் வண்ணம் நிச்சயம் உள்ளது என்பது அவர் வழங்கும் நிதிக்கு கிடைக்கும் ஆதரவில் தெரிகிறது.

முதல்வர் நல்ல அதிகாரிகளை நியமனம் செய்துள்ளார். தனக்கு பிடித்தவர்களை பொறுப்பில் அமர்த்தவேண்டும் என்ற சிந்தனையில்லாமல் சிறப்பாக செயலாற்ற கூடியவர்கள் யார் என்று அறிந்து அவர்களுக்கு வாய்பளித்துள்ளார். சுகாதாரத் துறை செயலர் போன்ற திறமை மிக்க பழைய ஆட்சியில் இருந்த அதிகாரிகளும் இந்த அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ளனர்.

துவக்கத்திலேயே இதைவிட சிறப்பாக யாரும் செய்திருக்க முடியாது. நான் இவர்கள் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு 100 மதிப்பெண் தருவேன். களத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருக்கக்கூடும். அவற்றை அரசு கண்டறிந்து சரிசெய்யவேண்டும்.

இந்த அரசு வழங்கும் வளர்ச்சி என்பது அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும், அனைவருக்கமானதாக இருக்கவேண்டும். சமீப காலத்தில் சமத்துவமின்மை அதிகரித்துள்ளது, இதை பெரிதளவு குறைக்கவேண்டும். உள்கட்டமைப்புகளுக்கான திட்டங்கள், மேம்படுத்தல் ஆகியவற்றால் சுற்றுசூழல் பெரிதளவு பாதிப்பு அடையாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.

விவசாயத்தின் நலனுக்கும், நல்வளர்ச்சிக்கும் தேவையான திட்டங்களை இந்த அரசு வழங்க வேண்டும். இந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தின் வருமானத்தில் நாம் பெற்ற கடனுக்கான வட்டியை கட்டுவதில் பெரிய செலவு ஏற்பட்டுவருகிறது. இதை சரிசெய்து பொருளாதார நிலையை உயர்த்த வேண்டும். மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிச்சயம் இதற்கான நடவடிக்கைகளை எடுப்பார் என நம்புகின்றேன்.

மத்திய அரசுடன் எந்தெந்த விஷயங்களில் ஆதரவு வழங்குவது சரியோ அதை சிந்தித்து, அவற்றில் தங்கள் ஒத்துழைப்பை தரவேண்டும்.

 

ஒளிமயமான எதிர்காலம் துளிர் விடுவது தெரிகிறது

கு.ராமகிருஷ்ணன்,பொது செயலாளர், தந்தை பெரியார் திராவிட கழகம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி தொடக்கமே சிறப்பாக உள்ளது. ஒருமாத காலத்திலேயே ஓய்வின்றி தோய்வின்றி உழைக்கும் முதல்வரை நாம் பார்கிறோம். தமிழ்நாட்டில் மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு கசப்பான நிலையில் உள்ளதாக தான் இருந்தது. இவைகளை தாண்டி தமிழகத்தில் ஒரு ஒளிமயமான எதிர்காலம் துளிர் விடுவதை பார்க்க முடிகிறது.

இதில் ஒரு தடையாக கொரோனா இரண்டாம் அலை, தமிழகத்தில் பெரும் பாதிப்பை விளைவித்து வருகிறது. அதையும் சவாலாக எடுத்து கொண்டு முதல்வரும் அவரது சகாக்களான அமைச்சர் பெருமக்களும் அதிதீவிரமாக செயல்பட்டு கொண்டிருகின்றனர்.

ஊரடங்கில் விருப்பம் இல்லா விட்டாலும் அது தற்பொழுதைய நிலைக்கு நிச்சயம் தேவை என்று ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார். இந்த இக்கட்டான சூழ்நிலையை கருத்தில் கொண்டு தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல் கொரோனா நிவாரண நிதியாக 4 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக தெரிவித்து அதனை ஆட்சி அமைத்த உடனே செய்துள்ளார். சொன்னதை செய்வோம் என்று சொன்னதை ஒவ்வொன்றாக செய்து வருகின்றார்.

இவரது செயல் வாக்களித்தவர் களுக்கு மகிழ்ச்சி அளிப்பதை விட வாக்களிக்காதவர்களுக்கும் நாம் ஏன் இவருக்கு வாக்களிக்கவில்லை என்ற வருத்தத்தை ஏற்படுத்தும் அளவிற்கு என் செயல் இருக்கும் என்று அவர் கூறியதை போல் செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

அர்ச்சகர்களுக்கு கொரோனா காலத்தில் உதவி தொகையாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது, இது எல்லோருக்குமான அரசு, மக்கள் அரசு என்பதை உறுதிப்படுத்தி வருகிறது. மேலும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதையும் நிறைவேற்றுவார். அதுமட்டுமின்றி மாநில அரசின் உரிமைகளை மீட்க வேண்டும். இவைகளை முதல்வர் ஸ்டாலின் செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 தமிழர்கள் விடுதலையையும், பெரியாரின் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று தனது இறுதி காலத்தில் போராடிய போராட்டம் வெற்றி பெரும் நிலையை முதல்வர் உருவாக்கியுள்ளார்.

தமிழ்நாடு மற்ற மாநிலங்களுடன் அல்லாமல், உலக நாடுகளுடன் ஒப்பிடும் வகையில் வளர்ச்சியை பெரும். அதற்கான அடித்தளமாக இந்த 5 ஆண்டுகள் அமையும்.

 

அரசு நிர்வாகம் வேகமாக இயங்குகிறது

நாஞ்சில் சம்பத், திராவிட இயக்க பேச்சாளர்.

முதலமைச்சர் அரியாசனத்தில் அமர்ந்து, ஒரு மாதம் முடிவதற்குள் ஸ்டாலின் அவர்கள், செய்த செயல்கள் அனைத்தும் போற்றக் கூடியதாக இருப்பதோடு இமை மூடாமல் இயங்கி வருகிறார்.

கொரோனாவினுடைய தீவிரத்தை கட்டுப்படுத்துவதற்கு முதலமைச்சராக பொறுப்பேற்ற உடனேயே பெருந்தொற்றின் இரண்டாவது அலையை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்தாலும், அதை சமாளிக்க துணிச்சலான நடவடிக்கை எடுத்தார்.

மேற்கு வங்காளம், மராட்டியம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆக்சிஜனை வரவழைத்து, எடுத்த முயற்சி தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் அவருக்கு நன்மதிப்பை பெற்று தந்துள்ளது. செங்கல்பட்டில் உள்ள ஆலையில் தடுப்பூசியை தயாரிப்பதற்கு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று குரல் கொடுத்து, மத்திய அரசிடம் ஆலையை குத்தகைக்கு விடுமாறும் கேட்டுள்ளார். கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4000 தருவதாக கூறியதை போல, முதல் கையெழுத்திலேயே நடைமுறைக்கும் கொண்டு வந்தார்.

இந்த ஒரு மாதத்தில் தமிழ்நாட்டின் அரசு நிர்வாகம் வேகமாக இயங்குகிறது. தலைமை செயலராக வெ. இறையன்புவை நியமித்தது, தமிழ்நாடு ஒரு நல்ல திசையை நோக்கி பயணிக்கும் என்பதை அவரின் நியமனம் மூலம் நமக்கு காட்டுகிறது.

இனி அவர் கையில் எடுக்க வேண்டிய பிரச்சனை புதிய கல்விக் கொள்கை, அதனை ஏற்க முடியாது என அறிவித்ததோடு மட்டுமல்லமால், அது சம்பந்தமாக கூட்டப்பட்ட மாநில கல்வி அமைச்சர்களின் கூட்டத்தை தமிழ்நாட்டின் பள்ளி கல்வி அமைச்சர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிராகரித்தது ஒரு துணிச்சலான நடவடிக்கை.

தமிழ் மொழி சார்ந்து, கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், தமிழ்நாட்டில் கல்வியை சீர்திருத்த வேண்டிய ஒரு பெரிய வரலாற்று கடமை முதல்வருக்கு உள்ளது.

 

தகவல்கள் விரைவில் சென்று சேரவேண்டும்

டாக்டர் ஆர்.மகேந்திரன், தொழிலதிபர் & அரசியல்வாதி

இந்த சவாலான இரண்டாம் அலை பெருந்தொற்று காலத்தில் பதவியேற்றுள்ள முதல்வர் ஸ்டாலினின் ஆரம்பம் சிறப்பாக உள்ளது.

அரசு நிர்வாகத்தில், முக்கிய பொறுப்புகளில் திறமையான அதிகாரிகளை அமர்த்தியுள்ளது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மருத்துவ தேவைகளான தடுப்பூசிகள், படுக்கைகள், ஆக்சிஜன் போன்றவை கிடைக்க அதிக முயற்சிகள் எடுத்து வருகிறார். இந்த ஒரு மாத ஆட்சி இது போலவே தொடர்ந்து 5 வருடங்களுக்கும் இருக்க வேண்டும் என்ற ஆசையும், எதிர்பார்ப்பும் மக்களிடம் உள்ளது.

பதவி ஏற்றவுடனே ஆவின் பால் விலையை குறைத்து, பால் வாங்குபவர்களுக்கும், விற்பவர்களுக்கும் நஷ்டம் ஏற்படாதபடி நடவடிக்கை எடுத்தது மக்களுக்கு மிகவும் பயனளிக்க கூடிய ஒன்று.

கொரோனா சிகிச்சை பணியில் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் நிவாரண உதவி தொகை வழங்கப்படும் என அறிவித்ததும் வரவேற்கத்தக்கது.

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை சந்தித்தது முன்கள பணியாளர்களுக்கு ஒரு உற்சாகத்தை அளிப்பதோடு, ஒரு முதல்வர் அந்த உடையை அணிந்து வந்து விசாரிக்கும் போது அது அனைவருக்குமே ஆறுதலாக இருக்கும். தைரியமாக உள்ளே சென்றது அவர் தைரியத்தை காட்டுகிறது.

கொரோனா தொடர்பான தகவல்களை மக்களிடம் மிக எளிமையாகவும், விரைவாகவும் கொண்டு சேர்க்க வேண்டும்.

படுக்கை வசதி அல்லது ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் இந்த தொற்று காலத்தில் எங்கு உள்ளது என மக்கள் அறிந்து கொள்வது அவசியமான ஒன்று. இதனை, படித்தவர்கள் எளிதாக இணையதளத்தில் தேடி படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனைகள் எங்கு உள்ளது என அறிந்து விடுவார்கள்.

ஆனால் கிராமப்புறத்தில் உள்ள பாமர மக்கள் அனைவருக்கும் இது சாத்தியமில்லை. அவர்களால் இணையதளத்தில் இது போன்ற அவசர தகவல்களை தேட முடியாது. அவர்களுக்கு வசதியாக இருக்கும்படி குறிப்பிட்ட ஒரு அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டால், அருகில் எந்த மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை வசதி அல்லது ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கை உள்ளது போன்ற தகவல்களை அளித்தால் அவர்கள் சிகிச்சை மையங்களை தேடி அலைய வேண்டிய நிலை ஏற்படாது. இது போன்ற சேவையை ஏற்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

எளிதில் அணுகக்கூடிய முதல்வர்

கார்த்திகேய சிவசேனாபதி,மாநிலச் செயலாளர், திமுக சுற்றுச்சூழல் அணி

முதல்வராக அதிகாரபூர்வமாக பதவியேற்பதற்கு முன்னே சுகாதாரத் துறை செயலர் மற்றும் அதிகாரிகளை அழைத்து கொரோனா தொடர்பான ஆலோசனைகளை கேட்டறிந்தார். தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக உலகளாவிய டெண்டர் எடுக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார்.

பிபிஇ கிட் அணிந்து சென்று கொரோனா நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்த முதல் முதல்வர் இவர் தான். தினமும் அவர் செல்லும் இடங்களில் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் இருந்ததில்லை. அவர்களின் கேள்விக்கும் பதில் அளிக்காமல் சென்றதில்லை.

ஊரடங்கில் வெளியில் வரும் மக்களை, காவலர்கள் மிகவும் கண்ணியமாக நடத்துகிறார்கள். எந்த இடத்திலும் மிரட்டுவது, அடிப்பது, திட்டுவது போன்றவற்றில் ஈடுபடாமல், அவர்களிடம் அதற்கான காரணத்தை கேட்டு அனுப்பி வைக்கிறார்கள். இது போன்ற செயல் உள்துறையை பார்க்கக்கூடிய முதல்வரிடமிருந்து தான் வந்திருக்கும்.

எதிர்கட்சிகளையும் ஒன்றிணைத்து செல்வது, அம்மா உணவகத்தின் பெயரை மாற்றாமல் அதனை நடத்தி வருவது, உணவகத்தின் பெயர் மாற்றி அரசியல் செய்வது போன்ற எதையும் கண்டு கொள்ளாமல் அவரது கடமையை சரிவர செய்து வருகிறார். அரசாங்கம் மக்களுக்கானது என்பதை புரிந்து கொண்டு செயல்படுகிறார்.

முதல்வர் ஸ்டாலினை போன்ற பிரதமர் நம் நாட்டிற்கு வேண்டும். திராவிட அமைப்பிலான வளர்ச்சியை 50 ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் கண்டுள்ளோம். அவர் பிரதமர் ஆனால் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வளர்ச்சி இருக்கும்.

இவ்வளவு எளிதாக அணுகக்கூடிய வகையில் ஒரு முதல்வர் இருப்பதற்கு தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள்.

தமிழ்நாடு ஒரு நீர்பற்றாக்குறையான மாநிலம் அதனால், மழைநீர் சேகரிப்பில் நிறைய செயல்கள் செய்ய வேண்டியுள்ளது. கிராம புறத்திலும், நகர்புறத்தில் உள்ள வீடுகள், தொழிற்சாலைகளிலும் மழைநீர் சேமிப்பு குட்டைகளை உருவாக்கி, அதனை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்.

சுற்றுச்சூழலை, வளர்ச்சி என்ற பெயரில் எக்காரணத்தை கொண்டும் அழிக்க கூடாது. ஒரு வளர்ச்சியடைந்த சமுதாயம் தான் சுற்றுச்சூழலை பற்றி கவலைப்படும். இதனை பாதுகாத்து கொள்ளக்கூடிய அரசாங்கத்தை தான் நாம் காணபோகிறோம்.

 

.பி.யில் நடக்கிறது, தமிழ்நாட்டில் நடக்காதா?

காயத்ரி ரகுராம் (மக்களில் ஒருவராக மட்டும்)

ஊடகங்கள் என்றுமே திமுக வின் நண்பர்களாக தான் இருந்து வருகின்றன. தற்போது முதல்வரோ அல்லது சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினோ எது செய்தாலும் அது விளம்பரத்திற்காகத் தான் செய்கின்றனர், ஊடகங்கள் அதை பெரிதுபடுத்தி காட்டுகின்றன.

உண்மையான கள நிலவரத்தையும் கொஞ்சம் காட்டுங்கள் என்று மக்களில் ஒருவராக கேட்டுக்கொள்கிறேன். இந்த பேரிடர் காலத்தில் ஏழை மக்களுக்கு ரூ.4000 இரு தவணைகளாய் வழங்குவது சரி, ஆனால் இன்று அவர்கள் வழங்கும் நிவாரணத்திற்கும் அதிகமாகத்தான் சாதாரண ஏழைகளுக்கு செலவு இந்த கால சூழ்நிலையில் உள்ளது.

சென்ற ஆட்சியில் வீடு வீடாக சென்று, வீடுகளில் வசிப்போரிடம் காய்ச்சல், தலைவலி என கொரோனாவின் தாக்கம் உள்ளதா என கேட்டறிந்தனர். இன்று உள்ள அரசு, வழங்கும் நிவாரண தொகையை கூட மக்கள் நியாய விலை கடைகளுக்கு சென்று தானே பெறுகின்றனர். மதுரையில் நியாய விலை கடை ஒன்றில் ரூ.2000 தருகிறார்கள் என பெரும் கூட்டமே கூடியது, எனக்கு வந்த செய்தி.

ஏன் அதை வீட்டிற்கு வந்து தரக்கூடாது அல்லது வங்கி கணக்கில் செலுத்திடக் கூடாது? ஏன் வீடு வீடாக சென்று கொரோனா தொற்று குறித்த ஆய்வினை செய்ய இந்த அரசு முன் வரவில்லை?

20 கோடி பேர் கொண்ட உத்தர பிரதேசத்தில் கதவுபடிக்கு சென்று தான் கோவிட் சோதனை செய்து, அதன் தாக்கத்தை குறைத்து வருகின்றனர். இப்படிபட்ட முயற்சியை தமிழகம் எடுக்க வேண்டும். சென்ற முறை தடுப்பூசி இல்லாமல் இந்த பெருந்தொற்றை நம்மால் சமாளிக்க முடிந்தது, இம்முறை ஏன் முடியவில்லை?

 

கோவையின் குரலுக்கு வேண்டும் முக்கியத்துவம்

நடராஜன், கௌரவ செயலாளர், இந்திய தொழில் வர்த்தக சபை, கோவை

மாநிலத்தின் எல்லா பகுதிகளிலும் விரைந்து கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை எடுத்து வருவது பாராட்டுக்குரியது. இரண்டாம் அலையின் தாக்கம் அதிகமாக உள்ளதால் கட்டுப்படுத்துவதில் சில இடர்கள் உள்ளது.

மேற்கு பகுதிகளான கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற இடங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த பகுதிகளில் கொரோனாவை கட்டுப்படுத்த இன்னும் சில நடவடிக்கைகள் வேண்டும்.

தொழில் துறையினர் ஒரு மிகப்பெரிய சவாலான கால கட்டத்தை எதிர் நோக்கி இருக்கிறோம். கோவையில் அதிகப்படியான சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளதால், இங்கு ஒதுக்கக்கூடிய பட்ஜெட்டிலிலும், அதை ஒட்டி வரக்கூடிய அறிவிப்புகளிலும் தொழில் துறைக்கு சாதகமான அம்சங்கள் இருக்க வேண்டும். இந்த இக்கட்டான காலத்தில் பொதுமக்களுக்கான நிவாரண தொகையை நியாய விலை கடைகளில் கொடுத்து வருவது அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவியாக அமையும்.

தமிழக அரசு, 18 லிருந்து 44 வயதுடையவர்களுக்கு அதிகளவிலான தடுப்பூசி செலுத்தி வருவதும், தொழிலாளர்களின் நலன் கருதி அவர்களுக்கும் தடுப்பூசி முகாம் அமைத்து செலுத்தி வருவது சிறந்த செயல். மக்கள் தொகை அதிகளவில் இருந்தாலும் தடுப்பூசிகளை செலுத்துவதற்கான முன்னெடுப்புகளை எடுத்துள்ளது பாராட்டத்தக்கது.

அரசு நிர்வாகத்தில் திறன் மிக்க அதிகாரிகளை நியமித்துள்ளதோடு, ஊழலற்ற நிர்வாகத்தை கட்டமைப்பில் கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும்.

தொழில்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து கோரிக்கைகளையும், குறைகளையும் கேட்க வேண்டும் என அரசாங்கத்திடம் எதிர் பார்க்கிறோம். கோவையின் குரலுக்கு கூடுதல் முக்கியத்துவம் வேண்டும்.