முதல்வரின் கவனத்திற்கு

நாளுக்குநாள் தமிழகத்தில், குறிப்பாக கோவையில் கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாகி கொண்டிருக்கும் அதே தருணம் தமிழக அரசு வெளியிடும் உத்தரவுகள், அறிவிப்புகள், அரசாணைகள், கொரோனாவை கையாளும் முறை மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை கொண்டு வந்துள்ளது.

தளபதி தலைமையில் கொரோனவை விரட்டிவிடுவோம் என்ற ’பாசிட்டிவ்’ சிந்தனை ஒருபுறம் இருந்தாலும், ஊரடங்கினால் தவிர்க்க முடியாத சில சேதாரங்கள் ஆங்காங்கே நடந்துகொண்டு வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.  தொழில்துறை மற்றும் கல்வி துறை சங்கங்களிடம் பேசுகையில் இது நமக்கு தெரியவந்தது.

ஊரடங்கை பல தரப்பினரும் நிச்சயம் தேவையான ஒன்றுதான் என சொன்னாலும், மற்றொரு புறம் உள்ள சிக்கல்களை கேட்டு உங்கள் முன் வைக்கிறோம்.

 

கொரோனா தொற்றுக் காலத்தில் கல்லூரிகளின் குறைகளைத் தீர்க்க அரசு முன்வர வேண்டும்

– சி.ஏ.வாசுகி, பொதுச் செயலாளர், தனியார் கல்லூரிகள் நிர்வாகக் கூட்டமைப்பு

கொரோனா பெருந்தொற்று பல நாடுகளைச் சார்ந்த மக்களின் வாழ்க்கையையும், பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது. இதற்கு நம் இந்தியாவும் விதிவிலக்கல்ல. இருப்பினும் மத்திய, மாநில அரசுகளின் அயராத உழைப்பும் திட்டமிடலும் மிகப் பெரிய பாதிப்புக்கு ஆளாகாமல் காத்து வருகிறது.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனா பெருந்தொற்றால் பல்வேறு நிறுவனங்கள் இடர்பாடுகளைச் சந்தித்து வருகின்றன. கண்போல விளங்கும் எண்ணையும் எழுத்தையும் இளைய தலைமுறைக்குக் கற்பித்து வருகின்ற சுயநிதி உயர்கல்வி நிலையங்களும் இதில் அடங்கும். கொரோனா பெருந்தொற்றால் சுயநிதிக் கல்லூரி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள் பல சவால்களைச் சந்தித்து வருகின்றனர்.

தொடர்ந்து ஒரே மாதிரியாக இணையவழியில் கல்வி கற்பதாலும், நண்பர்களை விட்டுப் பிரிந்திருப்பதாலும், மாணவர்கள் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் நிலையில் உள்ளனர். எனவே, உயர்கல்வித்துறை மாணவர்களின் மனநலன், உடல்நலம் ஆகியவற்றிற்கு உதவும் இணையதள ஆலோசனைகளை வழங்க முயற்சி எடுக்க வேண்டும்.

இன்றைய சூழலில் பாடம் கற்றுக்கொள்வதென்பது இணையதள வசதி மற்றும் திறன்மிக்க கருவிகளை அடிப்படையாய்க் கொண்டுள்ளது. ஆயினும், கிராமப்புற மாணாக்கர்கள், மலைகளில் வாழ்கின்ற பழங்குடியின மாணாக்கர்கள் ஆகியோருக்கு இணைய வசதி பெறுவதில்  சிக்கல்கள் நிலவுகின்றன. இதனால் கற்றல், -கற்பித்தல் செயல்பாடுகளில் முழுமையற்றத் தன்மை ஏற்படுவதைக் கண்கூடாகக் காணமுடிகிறது. இதற்குத் தீர்வாக அரசு மையப்படுத்தப்பட்ட, அனைவராலும் அணுகக்கூடிய இலவச கற்றல், கற்பித்தல் தளங்களை உருவாக்கினால் அனைவராலும் தாங்கள் வைத்துள்ள சாதனங்கள் மூலம் எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும்.

மாணவ, மாணவியர் பலரும் கல்விக் கட்டணத்தைச் செலுத்தாததால் ஆசிரியர்களுக்கு மாதச் சம்பளம் வழங்குவது கல்லூரிகளுக்கு சவாலாக உள்ளது. இந்நிலையில் அரசின் ஒத்துழைப்புக் கிடைத்தால் சுயநிதிக் கல்லூரிகளுக்கு உதவியாக அமையும்.

மீண்டும் இயல்பு நிலைமை திரும்பும்வரை கல்லூரிகள் செலுத்த வேண்டிய இ.எஸ்.ஐ, பி.எஃப் தொகையை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் அல்லது கால அவகாசம் வழங்கவேண்டும். அதேபோல், இந்த தருணத்தில் ஆசிரியர்கள் வாங்கும் கணினி அல்லது மடிக்கணினி, இணையதள திசைவி ஆகியவற்றிற்கு அரசு மானியம் வழங்கினால் உதவியாக இருக்கும். ஆசிரியர்களுக்கு இலவச இணையதள சேவையை அரசு வழங்கினால் அவர்களால் இன்னும் சிறப்பாகச் செயலாற்ற முடியும். ஊரடங்கு நிலவுவதாலும், இக்கட்டான காலமாக இருப்பதாலும் கல்விக் கட்டணத்தைப் பலரும் செலுத்தாமல் போனதாலும் பொருளாதார ரீதியாக சுயநிதிக் கல்லூரிகள் சிரமத்திற்குள்ளாகி உள்ளன. பேருந்து சேவை வழங்கி வந்த கல்லூரிகள் மார்ச் 2020 முதல் தற்போது வரை பேருந்துகளை நிறுத்தியே வைத்துள்ளன. இதைக் கருத்தில் கொண்டு சாலைவரி, வாகன தகுதிச் சான்றிதழ் கட்டணம் செலுத்துதல் ஆகிய நடைமுறைகளைச் சிறிது காலத்துக்குத் தள்ளிவைக்க போக்குவரத்துத்துறை அனுமதிக்க வேண்டும். மீண்டும் கல்லூரிகள் திறக்கப்படும் வரை மாநில அரசு மின்கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இத்தகைய உதவிகளை அரசாங்கம் செய்து கொடுத்தால் மாணவர்களின் தொடர் கற்றலும் ஆசிரியர்களின் பொருளாதாரச் சிக்கலும் குறைய வாய்ப்பு ஏற்படும். ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுக்கத் திணறும் சுயநிதிக் கல்லூரி நிர்வாகத்திற்கும் பெரும் நன்மை பயக்கும்.

 

பத்திரப் பதிவுக்கு சலுகை வேண்டும்

குகன் இளங்கோ, தலைவர், கிரெடாய்-கோவை

புதிதாக பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசிற்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பொது முடக்கத்தில் நாம் அனைவரும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனாவை வென்றிட முடியும்.

புதிய அரசு பொதுமக்களுக்குத் தேவையான பல உதவிகளை செய்து வருகிறது. கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம், ஆவின் பால் விலை குறைப்பு, மகளிருக்கான இலவச பேருந்து பயணம் போன்றவை மக்களுக்கான ஒரு நேரடி உதவியாக அமைந்துள்ளன.

கொரோனாவிற்காக அரசு கொண்டு வந்துள்ள கட்டுப்பாடுகள் தற்போதைய சூழலில் மிகவும் தேவைப்படும் ஒன்று. இந்த இக்கட்டான நிலையில் அனைவரும் உடல்நலத்தை பாதுகாப்பது மிக முக்கியம். மக்களின் நலனுக்காக அரசு நல்ல முயற்சிகளை எடுத்து வருவது பாராட்டுக்குரியது.

பொதுமுடக்கம் அமலில் இருந்தாலும் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி கொடுத்துள்ளார்கள். அதனால் கட்டுமான பணிகளை தொழிலாளர்களை வைத்து நாங்கள் செய்து வருகிறோம்.

கட்டுமான பணி செய்யும் சில புலம் பெயர் தொழிலாளர்கள்  சொந்த ஊர்  திரும்பி விட்டதால் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆனால் இது ஒரு தற்காலிகமான பிரச்சனை தான். பொதுமுடக்கம் முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பின் இது போன்ற பிரச்சனைகள் சரிசெய்யக் கூடியது தான்.

சிங்கிள் விண்டோ சிஸ்டம் முறைக்கு ஒப்புதல் அளித்தால் கட்டுமான பணிகள் விரைவில் முடிவதோடு  திட்டத்திற்கான ஒப்புதலையும்  30 நாளைக்குள் கொடுத்தால் எங்களுக்கு அது உதவியாக இருக்கும். இந்த கோரிக்கையை அரசாங்கம் செய்யும் என்று நம்புகிறோம்.

நிலம்  மற்றும் கட்டிடத்தை  பதிவு செய்வதற்கான பத்திரப் பதிவு தொகையை  மற்ற மாநிலங்களில் ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் தான் அதற்கான தொகை அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் அதிக நில பதிவுகள் நடப்பதால் பதிவு தொகையில் சலுகை மற்றும் பெண் நில உரிமையாளர்கள் பத்திரப் பதிவு செய்யும் கட்டணத்திலிருந்து 1% தள்ளுபடி அளித்தால் மிக உதவியாக அமையும்.

 

உள்ளூர் பொற்கொல்லர்களுக்கு உணவளிக்க வேண்டும்

முத்துவெங்கட்ராமன், தலைவர், கோவை மாவட்ட தங்க நகை உற்பத்தியாளர்கள் சங்கம்

கொரோனா தடுப்புப் பணிகளில் முதல்வர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மாவட்டங்களுக்கு அமைச்சர்களை பொறுப்பாளர்களாக நியமித்து, மாவட்ட ஆட்சியருடன், சுகாதார துறை செயலர், இயக்குனர்களுடன் கலந்து பேசி நல்ல முறையில் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

ஊரடங்கு காலத்தில் எங்கள் தங்க நகை துறையை அத்தியாவசியப் பொருட்கள் உற்பத்தி செய்யும் துறையாக கருதப்படவில்லை. அரசு அவ்வாறு முடிவெடுத்தது ஒருபுறம் இக்காலகட்டத்தில் சரியாக இருந்தாலும், இந்த தொழிலை வாழ்வாதாரமாக கொண்ட பலருக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும்.

தங்க நகை உற்பத்தியில் உள்ள பெரும்பாலானோர் தங்கள் முதலீட்டில் 40% வங்கியில் கடன்பெற்று தான், தங்கள் வியாபாரத்தை செய்துவருகின்றனர். நுகர்வோர் நகை வாங்கினால் தான் எங்களால்  வங்கிக்கு செலுத்தவேண்டிய கடன், கடைக்கு தரவேண்டிய வாடகை, தொழிலாளிகளுக்கு  தரவேண்டிய மாத சம்பளத்தை வழங்க முடியும்.

வியாபாரம் நிகழாத காலத்தில் வங்கிகள் வட்டி கேட்காமல் இருந்தால் எங்களுக்கு உதவியாக இருக்கும்.  இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர், நிலுவையில் உள்ள கடன்களை 12 ஆக பிரித்து தவணைகளாகவும்,  முன் பெற்ற கடனுக்கான வாதிகளையும்  ஒவ்வொரு மாதமும் கட்டிவிடுகிறோம். இதற்கு மத்திய அரசிடம் எங்களுக்காக மாநில அரசு பரிந்து பேசி உதவிட வேண்டும்.

சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அவசர கடன் வரி உத்தரவாத திட்டத்தின் மூலம் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதை வங்கிகள் லாப நோக்கமில்லாமல் ரிசர்வ் வங்கியின் ரெபோ ரேட் ஆனா 4.35 சதவீதத்திலேயே எங்களுக்கு வழங்கிட வேண்டும்.

இத்துடன், கோவையில் எங்கள் தொழிலில்  ஈடுபட்டுள்ள உள்நாட்டு பொற்கொல்லர்கள் பலரும் வெளிமாவட்டங்களில் இருந்து இங்கு வந்து பணிபுரிகிறார்கள்.  அவர்களுக்கு இந்த ஊரடங்கு காலத்தில் அரிசி,பருப்பு, எண்ணெய் ஆகிய பொருட்களை வழங்கவேண்டும். சென்றமுறை  வெளிமாநிலத்து பொற்கொல்லர்களுக்கு இவை கிடைத்தது, ஆனால் உள்ளூர் பொற்கொல்லர்களுக்கு கிடைக்கவில்லை.  அதனால் நாங்கள் தான் சங்கம் சார்பில் 14,000 நபர்களுக்கு ரூ. 50 லட்சத்தில் வழங்கினோம். இம்முறை எங்களால் அவ்வாறு உதவு முடியாத சூழலில் உள்ளோம். இவர்களுக்கு உணவுக்கான உதவியை அரசு செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

 

சமையல் தொழிலுக்கு அங்கீகாரம் வேண்டும்

மாதம்பட்டி நாகராஜ், மாநிலத் தலைவர்,

தமிழ்நாடு கேட்டரிங் அசோசியேஷன்

புதிய அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இயங்கும் அமைச்சர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான அரசாங்கம் இந்த காலகட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகளும் பாராட்டக்கூடியது.

கேட்டரிங் தொழிலை பொறுத்தவரை அரசு ஊரடங்கு அறிவித்ததிலிருந்து சமையல் தொழிலாளர்களின் தொழில் முடங்கி வேலை இல்லாமல் உள்ளது. சமையல் தொழில் சார்ந்த அனைவரும் ஒரு வாட்டமான சூழ்நிலையில் இருக்கிறார்கள். கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதால் சுபநிகழ்ச்சிகள் நடத்தக்கூடிய சூழலும் மற்றும் எந்தவிதமான ஒரு நிகழ்வும் நடைபெறாத நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு வருமானம் இல்லாமல் உள்ளது. எல்லாத் தொழிலுக்கும்  அங்கீகாரம் உள்ளதைப் போல சமையல் தொழிலுக்கான அங்கீகாரத்தினை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.

தமிழக அரசின் முழுக்கவனமும் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வரும் இவ்வேளையில் எங்களது கோரிக்கைகளை தற்போதைய சூழலில் முன் வைப்பதற்கு சங்கடமாக இருந்தாலும், எங்களை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் இருக்கிறார்கள். திருமணம் சார்ந்த தொழிலில் ஈடுபடுவோர் மட்டும் தமிழ்நாடு முழுவதும் 50 லட்சம் பேர் உள்ளனர். அவர்கள் அனைவருமே இந்த சூழலில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா நிவாரண நிதியாக  நியாய விலைக்கடையில் முதல் தவணையாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. ஆனால் எங்கள் தொழில் சார்ந்த பலரிடம் ரேஷன் கார்டு இல்லை. இதனால் எங்களுக்கான நிவாரணத்தொகை வழங்கினால் அது உதவியாக இருக்கும்.

சமையல் தொழிலாளர்களுக்கென நலவாரியம் உள்ளது. இந்த வாரியத்திற்கு அதிகாரியை நியமித்து, இதற்கு மீண்டும் உயிர் கொடுத்து சமையல் தொழிலில் இருக்கும் அனைவரையும் இதில் இணைக்க வேண்டும். இதன் மூலமாக இந்த தொழிலில் இருப்பவர்களுக்கு உதவி செய்தால்  மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

 

மின்கட்டணம், வங்கி கடன் செலுத்த அவகாசம் வேண்டும்

எஸ்.ஜெகதீஷ் சந்திரன், துணைத்தலைவர்,

தென்னிந்திய சிறு நூற்பாலை சங்கம் (சிஸ்பா) கூட்டமைப்பு

தமிழக முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் மு.க. ஸ்டாலினுக்கு எங்கள் சங்கம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழகத்தில் கோவிட் இரண்டாம் அலை பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

டெக்ஸ்டைல் மில்கள் தொடர்ந்து நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்திருந்தாலும் பெருகி வரும் கொரோனா தொற்று காரணமாக அனைத்து மில்களையும் ஒரு வார காலம் நிறுத்தி வைப்பதற்கான வேண்டுகோள் விடுத்திருந்தோம். இதன்படி மில்கள் அனைத்தும் ஒரு  வார காலத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில் இரண்டு முக்கிய பிரச்சனைகள் எங்களுக்கு உள்ளது. ஒன்று, அத்தியாவசிய பிரச்சனையாக மின் கட்டணம் உள்ளது. வீடு மற்றும் குறுகிய தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணம் செலுத்த குறிப்பிட்ட கால அவகாசமாக இந்த மாதம் 30 ம் தேதி வரை கட்டணம் செலுத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் தொழிற்சாலைகளுக்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் வழங்கப்படவில்லை. எனவே, தொழிற்சாலைகளுக்கும் கால அவகாசம் வழங்க வேண்டும்.

எங்களது இரண்டாவது கோரிக்கை, சென்ற பொதுமுடக்கத்தில் வங்கிகளிடம் இருந்து பெற்ற கடன்தொகையை  திரும்ப செலுத்துவதற்கான காலம் இப்போது வந்து விட்டது.

ஆனால் இப்பொழுதும் கொரோனா தொற்று அதிகரித்து பொது முடக்கம் அமலில் இருப்பதால் கடன் தொகையை வங்கிகளுக்கு திரும்ப செலுத்த வேண்டிய காலஅவகாசத்தை  நீட்டிக்க வேண்டி தமிழக முதல்வர் அவர்கள் பிரதமர் மோடி, நிதியமைச்சர் மற்றும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்.