முதல்வருக்கு கோவையின் வேண்டுகோள்!

வளங்கள் பல நிறைந்த கோவை கடந்த 50ஆண்டுகளில் தன்னை மருத்துவம், கல்வி, தொழில் போன்ற துறைகளில் சிறப்பாக தரம் உயர்த்திக்கொண்டு, கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் இரண்டாம் தலைநகரம் என்ற வார்த்தைக்கு மிகப்பொருத்தமாக இருக்கக்கூடிய மாவட்டமாக உருவெடுத்துள்ளது. இந்த மாவட்டம் சர்வதேச தரத்திற்கு வளர அரசின் ஆதரவு, பொது நல திட்டங்கள் மற்றும் தொழில் வளர்ச்சி அதிகம் தேவை.

சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்று, ஆட்சியை துவங்கியிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசாங்கத்தின் சமீபத்திய அரசாணைகள் மக்களிடமும் தொழில்துறையினரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து, கோவையின் பல தொழில்துறை அமைப்பினர்களின் கருத்தையும் இந்த அரசாங்கத்திடமிருந்து இன்னும் எதிர் பார்க்கும் உதவிகள் பற்றியும் அவர்களிடையே நாம்

நிகழ்த்திய நேர்காணலின் தொகுப்பு:

தொழில்கள் வளர நல்ல வாய்ப்பு!

சி.பாலசுப்ரமணியன், தலைவர், இந்திய தொழில் வர்த்தக சபை – கோவை

முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு துவக்கத்திலேயே தொழில் வர்த்தகத்திற்கு முன்னுரிமை வழங்கியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. அவர் தேர்ந்தெடுத்துள்ள தலைமை செயலர், அரசின் முக்கிய செயலாளர்கள் நல்ல அனுபவம் மிக்கவர்களாகவும், திறமைசாலிகளாகவும் உள்ளனர். இந்த பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டுவர முதல்வருக்கு நல்ல குழு கிடைத்துள்ளது.

சமீபத்தில் அரசு தொழில்துறை வேண்டுகோள்களை பரிசீலனை செய்து வெளியிட்ட ஆணைகள் அனைத்தும் கோவை பகுதியில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வளர நல்ல சூழலை, சலுகைகளை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் இந்த கொரோனா பேரிடரை எதிர்கொள்ள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதிகளை வழங்க முன்வர வேண்டுகோள் விடுத்ததை நாங்கள் எங்கள் சங்கத்தினரிடம் எடுத்துக்கூறி, தாராளமாக மனம் உவந்து நிதிகளை வழங்க அறிவித்திருக்கிறோம். நிச்சயம் எங்கள் சபை உறுப்பினர்களின் பங்களிப்பு இதில் இருக்கும்.

இந்த நிதி மூலம் ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் சேமிப்பு நிலையங்கள் அமைக்க, ஆக்சிஜன் வசதிகளுடன்கூடிய படுக்கைகளை அமைக்க, ஆக்சிஜன் செரிவூட்டும் இயந்திரங்கள், ஆர்.டி.பி.சி.ஆர். கிட்டுகள், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் பிற மருத்துவக் கருவிகளை வாங்க மட்டுமே முழுமையாகப் பயன்படுத்தப்படும் எனவும், இந்த நிவாரண நிதியின் வரவு செலவு கணக்குகள் அனைத்தும் வெளிப்படையாக பொதுவெளியில் வெளியிடப்படும் என அவர் கூறியிருப்பது பாராட்டிற்குரியது.

நல்ல திட்டங்களை ஸ்டாலின் வைத்திருக்கிறார். இவை அனைத்தும் தமிழக வளர்ச்சிக்கு, குறிப்பாக தொழில்துறை வளர நிச்சயம் வழிவகுக்கும் என்று நம்பிக்கை கொள்கிறோம்.

 

முதலமைச்சரின் அறிவிப்புகள் வரவேற்புக்குரியது!

எம்.வி. ரமேஷ் பாபு, தலைவர், கொடிசியா

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் பதவியேற்ற இரண்டாவது நாளே தொழில் துறையினரிடம் கலந்தாலோசனை நடத்த சென்னைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இந்த கூட்டம் மே 9ம் தேதி தலைமை செயலகத்தில் நடந்தது.

நிகழ்ந்து கொண்டிருக்கும் பெருந்தொற்று காலத்தில் தொழில்துறை சந்திக்கும் சவால்கள் என்ன, தேவைகள் என்ன என கேட்டு அதற்கு உதவவே இந்த கூட்டம் நடைபெற்றது..

முதலமைச்சர், கூட்டத்தில் பங்குபெற்ற அனைவருக்கும் தங்கள் துறையில் உள்ள சவால்களை தெரிவிக்க வாய்ப்பளித்தார். கொடிசியா சார்பில் நான் பல கோரிக்கைகளை முன் வைத்தேன். குறிப்பாக தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டுக் கழகம் மூலம் பொருளாதார உதவிகள் வழங்கிடவும், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் உதவி பெறும்போது செலுத்தவேண்டிய முத்திரைத்தாள் பதிவுக்கட்டணம் செலுத்துவதிலிருந்து நிகழும் சூழலை கருத்தில் கொண்டு விலக்கு தர கேட்டிருந்தோம். வேண்டுகோள்களை நிச்சயம் பரிசீலனை செய்வதாக முதலமைச்சர் கூறியிருந்தார். அவர் கூறியது போல் செவ்வாய் கிழமை தொழில்துறையினர் கேட்டுக்கொண்ட பலவற்றை சாதகமாக இந்த அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக ரூ.168 கோடி முதலீட்டு மானியம் தகுதியான அனைத்து சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்க, முத்திரைத்தாள் பதிவுக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்க முதல்வர் அறிவித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. இதற்காக கொடிசியா சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த சமயத்தில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் மனநிலையை பற்றி தெரிவிக்கவும் கடமைப்பட்டுள்ளேன். தொழில்துறை வளர்ச்சியில் அவர்களின் பங்கு முக்கியமானது. கொரோனாவால், இங்கும் அவர்கள் சொந்த ஊர்களிலும் ஏற்படும் மரண செய்திகள் கேட்டு பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பதட்டமான நிலையில் உள்ளனர். சிலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல துவங்கியுள்ளனர். இவர்கள் பணிபுரியும் நிறுவனங்களில் இவர்களுக்கு தேவையான உணவு, தங்க இடம் வழங்கியும் அவர்கள் ஒருவகையான அச்சத்தில் உள்ளனர்.

தமிழக அரசிடமிருந்து, ”புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயப்படவோ, தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லவோ தேவையில்லை, பாதுகாப்பாக தான் இருக்கிறார்கள்” என ஒரு அறிவிப்பு வந்தால், நிச்சயம் அது தொழில் துறையினருக்கு உதவியாக இருக்கும். முதலமைச்சர் வெளியிட் டுள்ள அறிவிப்புகள் வரவேற்புக்குரியது. அவர் தலைமையிலான அரசாங்கம் வரும் 5 ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட கொடிசியா சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

 

தொழிற்பேட்டை பெரிதும் தேவை

கே.வி.கார்த்திக், தலைவர், சீமா

திராவிட முன்னேற்ற கழகத்தின் அரசாங்கம் பதவியேற்ற முதல் நாளிலிருந்தே மிகவும் துடிப்புடன் செயல்பட்டு வருகிறது. நாங்கள் இதை வரவேற்கிறோம். சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்காக இந்த அரசு தன் துவக்கத்திலேயே பல நல்ல முடிவுகளை அறிவித்துள்ளது.

நாங்கள் நெடுநாட்களாய் எதிர்பார்ததையும், வலியுறுத்தியதையும், அண்மையில் கேட்டுக்கொண்டதையும் பரிசீலனை செய்து நிதியுதவி, முத்திரை தாள் கட்டணத்திலிருந்து தற்காலிக விலக்கு மற்றும் பலவற்றை தமிழக அரசு வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கைகளை பாராட்டுகிறோம்.

கொரோனா தொற்று தீவிரமாகி உள்ள நிலையில், மாவட்ட ரீதியாக அமைச்சர்களை மேற்பார்வையிட, களப்பணி செய்ய நியமனம் செய்த முதல்வருக்கு நன்றியை தெரிவிக்கின்றோம்.

ஒரு காலத்தில் இந்தியாவின் 90% பம்ப் தேவைகளை நம் கோவை தான் வழங்கி வந்தது. இந்த நாட்டில் உருவாக்கப்பட்ட முதல் எலக்ட்ரானிக் பம்ப் மற்றும் மோட்டார் இங்குதான் உருவாக்கப்பட்டது. இன்றும் கூட நாட்டின் 55% பம்ப் தேவைகளை கோவை தான் பூர்த்தி செய்கிறது. இப்படி பட்ட சிறப்புகளை உடைய கோவையில் பம்ப்செட், மோட்டார் உற்பத்திக்கு தனி தொழிற்பேட்டை கிடையாது.

இந்த பிரத்தியேக தொழிற்பேட்டையை அமைத்துத் தந்தால் நாங்கள் இப்போது உருவாக்கும் விவசாய மற்றும் வீட்டு தேவைக்கான பம்ப்செட், மோட்டார்களை தாண்டி உலகளாவிய தேவைகள் என கருதப்படும் ரசாயன மற்றும் தொழில்துறைக்கு தேவையான அதிக திறன் கொண்ட பம்ப்செட்களை இங்கு தயாரிக்க வாய்ப்பு அதிகரிக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

அத்துடன், அரசு வரும் காலங்களில் தொழில்துறை அமைப்பினருடன் கலந்தாலோசனை செய்து, தொழில் வளர்ச்சிக்கான கொள்கை முடிவுகளை எடுக்குமாயின், 2 முதல் 3 ஆண்டுகளில் தமிழ்நாடு நாட்டின் முதன்மை மாநிலமாக உயரும். எங்கள் பம்ப், மோட்டார் துறை நிச்சயம் செழிக்கும்.

 

செமி கண்டக்டர் துறையில் தமிழகம் வளர வேண்டும்!

ஜெயக்குமார் ராம்தாஸ், தலைவர், கோஇந்தியா

தற்போது உள்ள கால சூழ்நிலையில் தொழில்கள் நசிவடையாமல் இருக்கவேண்டும். இதை கருத்தில் கொண்டு முதல்வர் அறிவித்துள்ள நிதி உதவிகள், நீட்டித்துள்ள கால அவகாசங்கள், வழங்கியுள்ள தற்காலிக விலக்குகள் அனைத்தும் தொழில் துறைக்கு ஊக்கத்தை அளிக்கும் ஒன்றாக இருக்கும்.

இப்போது நிலவும் பகுதிநேர முறையான ஊரடங்கிற்கு பதிலாக முழுநேர ஊரடங்கை ஒரு வாரத்திற்கு அறிவித்துவிட்டு, அதன் பின் மீண்டும் முழுமையாக தொழிற்சாலைகள் இயங்க அரசு அறிவித்தால் அது இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறோம். ஏனென்றால் தொழிலாளர்களுக்கு முழுமையாக வேலை கிடைப்பதில்லை. இது அவர்களுக்கு ஒரு இன்னலாக இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இங்குள்ள தொழிற்சாலைகளில் அரசு காட்டியுள்ள பாதுகாப்பு வழிமுறைகள் முழுமையாக பின்பற்றபடுகிறது. எனவே தொழிற்சாலைகளால் கொரோனா பரவியது இல்லை, அப்படிபட்ட சூழலும் நேராது என நம்புகின்றோம். அதே தருணம், மாநில அரசாங்கத்தின் எஸ்.ஜி.எஸ்.டி யில் ஒரு சதவீதத்தை தற்போது குறைத்து கொண்டால், சிறுதொழில்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

தமிழகத்தில் செமி கண்டக்டர் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் வளர வேண்டும். இந்த பொருளின் தேவை வாகன உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அதிகம் உள்ளது. நாம் சீனாவையே இதற்காக நம்பி இருக்கிறோம். நம் மாநிலத்தில் வாகன உற்பத்தி உள்ளது, அதற்கேற்ப செமி கண்டக்டர் உற்பத்தி பூங்கா இங்கு அரசு உதவியுடன் அமைந்தால், இந்தியா விற்கே தமிழகம் இவற்றை வழங்க கூடிய முன்னோடி மாநிலமாக திகழும். நம் அரசிடம் இதை வேண்டுகோளாக முன் வைக்கிறேன்.

 

இரும்பு, சிமெண்ட் விலையை குறைக்க வேண்டும்!

வி.பழனிசாமி, தலைவர், சிபாகா

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகளின் ஆலோசனைகளை கேட்டு அதில் இருந்து தெளிவான முடிவு எடுக்கும் அவரின் அணுகுமுறையும் மற்றும் மக்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து செயலாற்றுவதும் வரவேற்கத்தக்கதாக உள்ளது.

கொரோனாவால் மக்கள் பாதிப்படைந்து இருப்பதை உணர்ந்து, அவர்களுக்கு நிதியுதவி செய்யும் எண்ணத்தில் அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.4000 உதவி தொகையை அறிவித்து அதில் முதல் தவணையாக ரூ.2000 வழங்குவதற்கான நடவடிக்கை எடுத்திருப்பது இந்த கால கட்டத்தில் மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். அரசு பேருந்துகளில், சாதாரண நகர பேருந்துகளில் ‘மகளிர் பயணம் செய்ய இலவசம்’ என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்க செயலாக உள்ளது.

எங்கள் துறையை பொறுத்தவரை கட்டிடப் பொருள் விலையில் இரும்பு மற்றும் சிமெண்ட் அதிக விலையில் உள்ளது. ஒரு வருட காலமாக அதிகமான விலையேற்றத்தில் இருப்பதால் கட்டுமான தொழில் பாதிப்படைகிறது. இதனை முறையான விலையாக மாற்றினால் உதவியாக அமையும்.

சமீப காலமாக கோவையில் செங்கல் உற்பத்தி தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டு தேக்கமடைந்து உள்ளது. இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டிடத்திற்கான வரைவிட அனுமதியை நாங்கள் சென்னைக்கு சென்று தான் பெற வேண்டியுள்ளது. இந்த அனுமதியை கோவையிலே கிடைக்குமாறு செய்தால் காலதாமதமின்றி கட்டிடத்தை கட்டுவதற்கு ஏதுவாக இருக்கும்.

கோவைக்கென திருத்தி அமைக்கப்பட்ட மாஸ்டர் பிளான் 12 வருடகாலமாக செயல்படாமல் இருக்கிறது. அதை மீண்டும் செயல்படுத்தினால் கோவையின் வளர்ச்சி மேலும் ஓங்கி நிற்கும்.

கட்டிடத் தொழிலுக்கு என்று ஒரு தனி அமைச்சகம் ஏற்படுத்தி அத்துறை சார்ந்த பல விசயங்களை கலந்தாலோசித்து அதில் உள்ள குறையை களைந்து நிவர்த்தி செய்தால் இந்த தொழிலின் வளர்ச்சிக்கு உதவியாக அமையும்.