கோவையில் வார் ரூம் தொடங்கப்படவுள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியம்

கோவையில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறியதாவது:

தமிழகத்தில் நோய்த்தொற்று அதிவேகமாக பரவி வருவதாகவும் தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்துள்ளது என தெரிவித்தார். கோவை, சேலம், மதுரை, திருச்சி உள்ளிட்ட மாநகர்களில் சென்னையில் இருப்பது போன்று வார் ரூம் தொடங்கப்படவுள்ளது என்று முதலமைச்சர் எங்களிடம் அறிவித்துள்ளார் என்றும் கூறினார்.

மேலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சைக்கு கட்டணம் வசூலிப்பதில் தனியார் மருத்துவமனைகள் மனசாட்சியோடு மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் ரெம்டெசிவிர் மருந்துகள் அரசுக்கு குறைவாகவே வருகிறது என்றும் அதிகமான மருத்துவமனைகளும் அந்த மருந்தை பரிந்துரை செய்வதால் மக்கள் மருந்து விறனையாகும் மையங்களில் குவிந்து வருகின்றனர் என்றும்  தெரிவித்தார்.

18 வயது முதல் 45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு  தடுப்பூசி போடுவதற்கு 45 கோடி மதிப்பீல் 15 லட்சம்  தடுப்பூசிகள் வந்துள்ளது என்றும் தெரிவித்தார். கோவையில் படுக்கை வசதிகளைக் அதிகரித்து சித்தா ,ஆயுர்வேதம், ஹோமியோபதி உள்ளிட்ட  சிகிச்சைகள் வழங்க ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது என்றும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுபாடு இல்லாமல் கிடைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கோவை பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கோவை மாவட்ட ஆட்சித்தலைவர், கோவை அரசு மருத்துவமனை முதல்வர், கோவை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் இக்கூட்டத்தில் கோவை மாவட்ட அதிமுக கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் கோவை மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த 13 அம்ச கோரிக்கை அடங்கிய மனு, மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 8 அம்ச கோரிக்கை அடங்கிய மனு அமைச்சரிடம் வழங்கப்பட்டது.