18 வயதிற்கு மேற்பட்ட 2.45 கோடி பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்பதிவு

மே 1-ம் தேதி நாடுமுழுவதும் தொடங்க இருக்கும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி முகாமில் இதுவரை 2.45 கோடிபேர் முன்பதிவு செய்துள்ளனர் என்று மத்தியசுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவிவருகிறது, நாள்தோறும் 3 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து, மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. மேலும், மாநில அரசுகள் நேரடியாக மருந்து நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசியை கொள்முதல் செய்யவும் மத்திய அரசு அனுமதி அளித்தது.

மே 1-ம் தேதி தொடங்கும் 3-வது கட்டத் தடுப்பூசி முகாமுக்கு தகுதியானவர்கள் 28ம் தேதி முதல் கோவின், ஆரோக்கிய சேது செயலிகளில் முன்பதிவு செய்யலாம் என மத்திய அரசு தெரிவி்த்தது.முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்ததால், முதல் நாளான 28ம் தேதி ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் முன்பதிவு செய்ததால் சர்வர் முடங்கி, பின்னர்சரி செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களில் இதுவரை 2.45 கோடி பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இதில் கடந்த 28-ம் தேதி மட்டும் 1.37 கோடி பேரும், நேற்று 1.04 கோடி பேரும் பதிவு செய்துள்ளனர்.

நாட்டில் இதுவரை 15.22 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 93.86 லட்சம் சுகாதாரப்பணியாளர்கள் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர், 1.24 கோடி பேர் 2-வது டோஸ் செலுத்தியுள்ளனர்.