கொங்குச்சீமை செங்காற்று – 15 ஒரு நாளைக்கு மூணு ரூபாய்…!

மண் மணம் வீசும் கிராமியத் தொடர்கதை…

– சூர்யகாந்தன்

 

ஒரு நாளைக்கு மூணு ரூபாய்…!
சுப்பையன், பட்டி போடுவதில் வயல்காரர்களிடத்தில் எதிர் பார்ப்போடு கேட்ட அளவு பணம் கிடைக்கவில்லை! விலைவாசி ஏற்றத்தையும், இந்தத் தொழிலில் உள்ள பல சிரமங்களையும் எடுத்துச் சொல்லி இவன் பேசிப் பார்த்தும் “மூணாம் வருசத்துக் கணக்குப்படியே போட்டுக் கொடுத்துடறோம்” என மசியாத ஆசாமிகளாய்த்தான் தென்பட்டனர்.

“கடைசிக்கு எச்சுமில்லெ! கம்மியுமில்லெ! நடுதமாகத்தா ஒத்துவருமாட்டத் தெரியுது,” என்று அவன் எண்ணியபடி ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். பையன்கள் கருவேல மரநிழலில் நின்றபடி வெள்ளாடுகளுக்குக் காய்களை உலுக்கிப் போட்டுக் கொண்டிருந்தனர்.

“ஆட்டுக்கு உருப்படி ஒண்ணுக்கு ஒரு நாளைக்கு மூணு ரூபாய் கணக்குப் போட்டுக் குடுத்துருங்க”. என்று இவன் கேட்டது ஒன்றும் அதிகமில்லை.

நூறு உருப்படிகளுக்கும் சேர்ந்து ஒரு மாதம் பட்டியடை த்தால் ஒன்பதாயிரம் ரூபாய் வரையிலும் கிடைக்கும்! இதில் வயல்காரர்களுக்கு அனுகூலம் நிறையவே உண்டு. சல்பேட் என்றும், யூரியா என்றும் விதவிதமாக உரங்களை மூட்டைக் கணக்கில் விலை கொடுத்து வாங்குவதில் இதைவிட தொகை கூடுதலாகுமே ஒழிய குறையாது. வேளாண்மையின் ஊட்டத்துக்கு இந்த இயற்கை உரத்தோடு அவை ஈடு கொடுக்காது. ஆனாலும், ‘ஆட்டுப்பட்டிக்கு மனசு வெச்சு குடுக்கிறதுன்னா ஆளு மாத்தி ஆளு தேம்பறாங்க..’ என்று இவனும் நிலவரத்தைக் கண்டுதான் சங்கடப்பட வேண்டியிருந்தது.

“ச்செரி. உருப்படிக்கு ரெண்டு ரூபாய்னு வாங்கிக்கப்பா நல்லபடியா கெடைபோட்டுக் குடுத்துரு.”

அவர்கள் ஒரு மனதாகச் சம்மதித்தனர்.

மாதக் கடைசியில் ஆறாயிரம் தான் கண்ட பலனாக இருக்கும். இதில் அரிசி, பருப்பென்று வாங்கும் சாப்பாட்டுச் செலவுக்கு பணம் கழிந்துவிடும். ஆள்காரப் பையன்களுக்கும் நாள்கூலி போட்டுக் கொடுக்க வேண்டும்.

பத்து உருப்படி வெள்ளாடுகளும் இந்தப் பட்டியில் இருந்த போதிலும் அதை ஏனோ கணக்கில் சேர்ப்பதில்லை. “ச்செரி. அதுக மேஞ்சவரையிலும்தா அதுக கண்ட பெரிய லாபம்னு எண்ணிக்க வேண்டியிருக்கு.”

வெய்யில் கண்களைக் கூசியது. மேற்கிலும் வடக்கிலும் தெரிந்த மலைத்தொடர்கள் நீல வண்ணத்தில் ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுபோல் தோணியது.

“வெள்ளாடுகளெ…இங்கியே வுட்டுப்போட்டுப் போங்க. நா இதுகளெ மேயச்சுக் கொண்டாந்து கட்டீர்றனே” என்றும் கண்ணாத்தா விருப்பப்பட்டு இவனிடம் கேட்டுப் பார்த்தாள்.

“…வெய்யில்லெ நீ எதுக்கு அதுகளெ ஓட்டிட்டுப் போய்ச் சீரழியிரே! வேண்டாம். அதுகளும் இந்தப் பட்டி ஆடுகளோடவே இருக்கட்டும். எங்களுக்கு எல்லாத்தையும் சேர்த்தி ஒண்ணா மேய்க்கிறது ஒரே வேலையாப் போகும். என்னமோ சொலவாந்தரம் சொன்னாப்ல “தலைக்கு வேற சீவக்காயா? தாடிக்கு வேற சீவக்காயா? எல்லாம் ஒண்ணாவே இருக்கட்டும்கிறாப்ல” என்று சொன்னது இப்போது ஞாபகத்துக்கு வந்தது. சிரித்துக் கொண்டான்.

“என்னுங்கண்ணா தன்னெப்போலச் சிரிச்சுக்கிறீங்க”

“அட ஒண்ணுமில்லே.”

“ஏனுங்கொ…! ராத்திரி வடவள்ளிக்கு சினிமாப் பாக்க போயிருந்தமல்லங்கொ. அதைய நாங்க பேசிட்டு இருந்தோம்ங்க…”

“எதையெ?”

“அந்தப் படத்துல வர்ற தமாசைப் பத்தி நாங்க பேசிட்டிருந்ததைக் கேட்டுத்தா நீங்க சிரிக்கறீங்கன்னு நெனைச்சோம்ங்க! நீங்களும் எங்ககூட வந்திருக்கலாமுங்க அண்ணா!”

“ஆடுகளெப் பட்டி அடச்சுட்டு நா அங்கெ வர முடியுமா? அப்பிடியெல்லாம் வரப்படாது. ஒரு நாளைப் போலவே இருக்காதுடா..! ஆராச்சும் ஒருத்தர் கருக்கடையா இருந்தாகோணும்.”

“இந்தப் பக்கத்து வயல்கள்லெ காட்டுப் பூனைகளும் கூட இருக்கும்னீங்களே! நம்ம நாய்க இருக்குறப்ப அதுக இங்கெ எட்டிப் பாக்குமுங்கறீங்களா…?”

“இதுவெரைக்கும் அப்பிடி ஒன்ணையுங்காணோம்! மலைப்பக்கம்னா நரிக தொல்லை குடுக்கும். இங்கெ அதுகளெயும் காணமே..”

சற்றுத் தூரத்தில் இருந்த குளத்தை நோக்கி கொக்குகள் கூட்டமாகப் பறந்து சென்றன. நெல் வயல்களும், கரும்பு வயல்களும் தவிர தென்னந்தோப்புகளும், கமுக மரத்தோப்புகளும் சொற்பமாக இருந்தன. வேடபட்டி வாய்க்காலில் சமீபத்தில் பெய்த மழைக்குச் செந்தண்ணீர் வந்து கொண்டி ருந்தது.

ஒவ்வொரு நாள் காலையிலும் பட்டியைத் திறந்து சத்தமிட்டு ஆடுகளை எழுப்பி நிற்க வைக்க வேண்டும். கூட்டத்திலிருக்கும் குட்டி ஆடுகளை மற்ற ஆடுகள், நெருக்கி விடாமல் அவற்றைத் தனியாகப் பிரித்து தாய் ஆடுகளிடத்தில் சேர்க்க வேண்டும். ரொம்ப இளங்குட்டிகளாக இருப்பதைக் கொடாப்பைத் திறந்து ஆட்டிடத்தில் கூட்டிச் சென்று பாலூட்ட வைக்க வேண்டும். ஆடுகளில் ஏதாவது நலங்குன்றி சுணங்கிப் போயிருக்கிறதா என காதுகளைப் பிடித்துப் பார்த்தும், அடிவயிற்றைத் தட்டிப் பார்த்தும் கவனிக்க வேண்டும்.

ராத்திரிக்கு வந்து கிடைபோடும் இடத்திற்குப் பட்டிப் படல்களைத் தூக்கிச் சென்று தயார் செய்து வைக்க வேண்டும். முன்னைய இரவு கிடைபோட்ட இடத்தில் பதவிக் கிடக்கும் புழுக்கைகளையும், மூத்திர ஈரத்தையும் உத்தேசமாகக் கொண்டு மேய்ச்சலின் போது ஆடுகளின் பேரில் அக்கறை காட்டியாக வேண்டும்.

புழுக்கைகள் ஈரப்பதத்தோடு புளியங்கொட்டைகள் போலிருந்தால் ஜீணரத்தில் பிசக்கில்லையென அறிகுறி..! பீச்சி அடித்து நாற்றத்தோடு சாணப்பதத்தில் புழுக்கைகள் கிடந்தால் அந்த ஆட்டுக்கு வயிற்றுப் போக்கோ, கடுப்போ பிடித்திருப்பதாகத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப மூலிகைத் தழைகளைப் பிழிந்து அதைக் குடிக்க வைத்து நலப்படுத்த வேண்டியதிருக்கும்.

எங்கு சுற்றினாலும் அத்தனை ஆடுகளின் மீதும் கவனம் குவிந்திருக்க வேண்டும். ஆள்காரப் பையன்களுக்கு ஆடுகளை மேய்க்க மட்டுந்தான் தெரிந்திருக்கும். மற்றவற்றில் அனுபவம் போதாது.

இருபது பெட்டை ஆடுகளுக்கு, ஒரு கிடாய் வீதம் பட்டியில் இருந்தன. ஐந்து, ஆறு கிடாய்கள் திண்டி குறையாமல் பட்டியில் இருந்ததால் அளவாய்ப் போயிற்று. அவற்றின் எண்ணிக்கையை ஒரு அறுதிக்குள் வைத்திருப்பது தான் ஏற்றது. அதிகம் ஆகிவிட்டால் பெட்டை ஆடுகளுக்குத் தொந்தரவு! சரிவர மேய்வதற்க்குக் கிடாய்கள் விடாது. அது மட்டுமல்லாமல் அதுகளே கூட ஒன்றோடொன்று சண்டை போட்டுக் கொண்டு இம்சைகள் பண்ணும்..”

இவற்றையெல்லாம் ஒரு, கால்நடை மருத்துவனுக்குரிய அனுபவத்தோடு கையாள்வதில் சுப்பையன் வெகு சமர்த்தனாக இருப்பதை அவனது பெற்றோர்கள் ‘கல்லாமல் பாகம்படும் குலத்தொழிலாக’ எண்ணிக் கொண்டிருந்தனர். கண்ணாத்தாள் தனது கணவனின், குழந்தை உள்ளத்தை நினைத்து அவ்வப்போது நெகிழ்வதும், வாரிசாக வயிற்றில் வளர்ந்து கொண்டிருக்கும் பிள்ளையை நினைத்து மகிழ்வதுமாக இருந்தாள்….!

(தொடரும்)