மொத்த இறப்பு வெறும் 4,856 தான் ! அதிரவைக்கும் சீனாவின் கொரோனா  நிலைமை

கொரோனா நோய் தொற்றின் துவக்கம் சீனா. டிசம்பர் 2019 துவங்கி ஓர் ஆண்டை கடந்து இன்னும் உலகை உலுக்கி வருகிறது இந்த கொரோனா வைரஸ்.

இந்தியாவில் பலநாட்களாக ஒரு லட்சம், ஒன்றரை லட்சம் என தினமும் புதிய கொரோனா நோயாளிகள் கண்டறியப்படும் நிலையில், இறப்புவிகிதமும் இங்கு மிக பெரிய அளவில் தான் உள்ளது  தற்போது.

ஆனால், சீனாவில் இதுவரை இறந்தவர்கள் எவ்வளவு தெரியுமா? வெறும் 4,856 பேர் தான். இந்தியாவில் இதுவரை 1,79,000 க்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இதுமட்டுமல்ல அந்நாட்டின் மொத்த பாதிப்படைந்தவர் எண்ணிக்கை வெறும் 90,510 பேர் தான், ஆனால் இந்தியாவிலோ 1,50,61,919 பேர் (19.4.2021 மதியம் 1.30 மணி அளவு வரை) ஒரு நாளைக்கு வெறும் 20  பேருக்குள்ள தான் அவர்களுடைய புதிய கொரோனா நோயாளிகள் உள்ளனர்.

இது எப்போது, எப்படி சாத்தியமானது ? :

2020-ல் உலக நாடுகள் கொரோனாவை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் இருந்த தருணத்தில் 2020 இறுதிக்கு முன்பே சீனா நல்ல நிலைமைக்கு திரும்ப ஆரம்பித்து விட்டது என்ற ஒன்றே நம்மை வியப்புக்குள் ஆழ்த்த போதுமானது !

பேரிடரை குறைக்க சீனா செயல் பட்ட வேகமே அவர்கள் வலுவாக இதை கடந்து வர உதவிசெய்துள்ளது என்கிறார் அமெரிக்காவின் மாயோ கிளினிக் கை  சேர்ந்த கிரிகோரி போலேண்ட்.

மற்ற நாடுகளுக்கு வைரஸ் பரவலைத் தடுக்க அதிக காலம் இருந்த போதிலும் அவர்கள் மெதுவாக தான் செயல்பட்டுள்ளனர். சீனாவோ பரவலைத் தடுக்க மிக வேகமாக செயல்பட்டுள்ளது.

வைரஸின் மையப்பகுதியான  வுஹான் 76 நாட்கள் மிகக் கடுமையான ஊரடங்கிற்குள் கொண்டுவரப்பட்டிருக்கின்றது. 14,000 சுகாதார சோதனைச் சாவடிகள் நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டது. ஆள் நடமாட்டம் என்பது குறைக்கப்பட்ட அதே தருணத்தில் ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு நபர் மட்டும் தான் காய்கறிகள் வாங்க வெளியே அனுமதிக்கப்பட்டனர்.

நோய்  தொற்று  வுஹானில்  அதிகரித்த ஒரு சிலவாரங்களிலே 9 மில்லியன் மக்கள் அங்கு சோதனை செய்யப்பட்டனர்.  இதை விட மிக பெரிய பலம் என்னவென்றால் அங்கு விதித்த கட்டுப்பாடுகளுக்கு மக்கள் முழு ஆதரவு வழங்கியதே !

சுய பாதுகாப்பு உபகரணங்களை  உலகிலேயே அதிகம் உற்பத்தி செய்யும் நாடக சீனா உள்ளதால்  தேவையான அனைத்து உபகரணங்களையும் அது தன்னிடம் கொண்டிருந்தது. அனைவரையும் கட்டாயம் முகக்கவசம், கையுறை  அணிய அந்நாடு உத்தரவிட்டது.

ட்ரான்ஸ் எனும் தானாக இயங்கும் வானூர்தியில் ஸ்பீக்கர் உதவியோடு முகக்கவசம் அணியாமல் வெளிவரும் மக்களிடம் எச்சரிக்கையையும்  தாக்கத்தையும்  ஏற்படுத்தியது.

பிப்ரவரி 2020 ல்  நோய்த்தொற்றுக்கென பல பிரத்யேக மருத்துவமனைகளை ஏற்படுத்தியது,  லேசான அறிகுறி உடைய நோயாளிகளை அப்போதே அவர்கள் மிகப்பெரிய விளையாட்டு மைதானங்களிலும் பொருட்காட்சி நடத்தும் பெரிய மையங்களிலும் தனிமைப் படுத்தினர்.

மார்ச் 2020க்குள் சீனாவின் பல இடங்களில் உள்ளூர் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்தது. வெளிநாட்டினரை தான் அவர்கள் அதிகமாக கவனிக்கவேண்டியது இருந்துள்ளது. அதற்குப்பின் படிப்படியாய் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. வேகத்தை வெளிப்படுத்தியதே அவர்கள் கொரோனா வெல்ல காரணமாய் இருந்திருக்கின்றது.