‘மொபைல்  படங்களை பிரிண்ட் போடுங்கள்’

சினிமா ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து திரையில் தோன்றும் நட்சத்திரங்களை மட்டும் நாம் ரசித்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால், அவர்களை அழகாகக் காட்டும் புகைப்படக் கலைஞனை நாம் யோசித்துப் பார்த்தது கிடையாது. இயற்கை அழகையும், மனிதன் முகத்தில் இருக்கும் அழகையும் நமக்கு மிக அழகாகக் காட்டக்கூடியவர் புகைப்படக் கலைஞர். இத்துறையில், புகழ்பெற்று விளங்கும் ஸ்டில்ஸ் ரவி, ‘இன்னும் நான் கத்துப்பிள்ளை’ என்று கூறுகிறார். அவர் நம்முடன் பகிர்ந்து கொண்ட சில விஷயங்களை இங்கே காண்போம்.

‘சினிமா மீது எனக்கு சிறு வயதில் இருந்து சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. என் இளமைக் காலத்தில் சினிமாவுக்கு வரக் கூடாது என்ற எண்ணத்தில்தான் இருந்தேன். எனது அப்பா சிறந்த புகைப்படக் கலைஞர். அவருக்கு உதவியாக இருந்து கொண்டு, கேமராவில் உள்ள வித்தைகளைக் கற்றுக்கொண்டேன். பிறகு, பத்திரிகைத் துறையில் நுழைந்து சினிமா பிரபலங்களைப் புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் எடுக்கும் புகைப்படத்தைப் பார்த்த பிரபலங்கள் என்னைப் பாராட்டியதுடன், தொடர்ந்து என்னை அழைத்து புகைப்படம் எடுக்கச் சொல்வார்கள். அப்படியே படிப்படியாக சினிமா உலகில் நுழைந்து விட்டேன்.

நான் முதன்முதலாகப் பணியாற்றிய படம் ‘பைரவி’. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம். எனக்கு சினிமா மீது ஆர்வம் வருவதற்குக் காரணமாக இருந்தவர் என் குருநாதர் கே.பாலச்சந்தர்.

அவர் இயக்கும் படத்தில் கதாப்பாத்திரங்களைப் புதுமையாகக் காட்டக்கூடியவர். அவருடைய ‘அச்சமில்லை அச்சமில்லை’ படத்தில் நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்போதும் நான் ஒரு இடத்தில் உட்கார்ந்து இருக்க மாட்டேன். சுற்றி இருக்கும் இயற்கை அழகை ரசிப்பது வழக்கம். அந்தப் படத்தில் நடித்துக்கொண்டு இருந்த சரிதாவை வைத்து வயல்வெளி பின்னணியில் ஒரு புகைப்படம் எடுத்தேன். அந்தப்  புகைப்படம் பிரிண்ட் போட்டு ஆல்பமாக வைத்திருந்தோம். தினமும் ஷூட்டிங் முடிந்தவுடன் இரவு 11 மணி அளவில் இயக்குநர் கே. பாலச்சந்தர், ஆல்பத்தில் இருக்கும் புகைப்படங்களைப் பார்ப்பார். அன்று நான் நடிகை சரிதாவை வைத்து எடுத்த புகைப்படத்தைப் பார்த்த அவர், என்னை போனில் அழைத்துப் பேசினார். புகைப்படத்தைப் பார்த்தேன் ரவி.ஸ்டில்ஸ் ரவி என்றால் ரவிதான் என்று சொல்லி என்னைப் பாராட்டினார்.

அவர் பாராட்டு என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது. இப்போது இருக்கும் செல்போன் காலம் அப்பொழுது கிடையாது. லேண்ட் லைனில் இருந்து என்னை அழைத்தார். அதுவெல்லாம் என்றைக்கும் மறக்க முடியாத அனுபவங்கள். ரஜினி, கமல் நடித்த அபூர்வ ராகங்கள் படம் இந்தியில் எடுக்க முடிவு செய்து முதல் கட்டப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. அப்பொழுது அந்தப் படத்துக்கு என்னை போட்டோகிராபராக ஒப்பந்தம் செய்தார்கள். ஆனால், அந்தப் படத்தின் தயாரிப்பாளர் வேறு ஒரு போட்டோ கிராபரை ஒப்பந்தம் செய்திருந்தார். இதை அறிந்த பாலச்சந்தர், ஸ்டில்ஸ் ரவி இல்லை என்றால் படப்பிடிப்பு நடக்காது என்று கூறினார். இப்படியாக எனக்கு அந்தப் படத்தில் பணியாற்ற வாய்ப்பு அளித்தவர்.

பல வருடங்கள் ஓடிவிட்டன. அப்பொழுது இருந்த சினிமா காலம் இப்பொழுது கிடையாது. பல மாற்றங்கள், பல தொழில்நுட்ப வளர்ச்சிகள். அந்தக் காலத்தில் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் நட்சத்திரங்கள் நெருங்கிப் பழகுவதற்கு படப்பிடிப்புத்தளம் உதவியாக இருந்தது. ஆனால் இப்பொழுது அப்படி கிடையாது. கேரவேன் கலாச்சாரம் சினிமா உலகில் வந்துவிட்டது. அதைப்போல் இப்பொழுது இருக்கும் உலகம் டிஜிட்டல் உலகம். ஒவ்வொருவரது கைகளிலும் கேமரா மொபைல் இருக்கின்றது. அதை வைத்து அவரவர்களுக்குப் பிடித்த விஷயத்தை புகைப்படமாக எடுத்துக் கொள்கிறார்கள். அந்த இடத்தில் மனிதனுக்குள் இருக்கும் கலைநுட்பம் வெளிப்படுகின்றது.

அதை நம்மைச் சுற்றி இருப்பவர்கள் மதிக்க வேண்டும், போற்ற வேண்டும் என்பது எனது கருத்து. சினிமாவில் வெற்றி பெற்ற அனைவரும் தன்னுடைய தனித்திறமை என்ன என்று புரிந்து கொண்டு உழைத்தார்கள். அதன்படி வெற்றியும் பெற்றார்கள். உழைப்பில் கிடைக்கும் வெற்றி என்றைக்கும் புதுமை வாய்ந்தது. அதை உணர்ந்து பார்க்கும்பொழுது, அதில் கிடைக்கும் சந்தோசம் தனிதான்.

ஒருநாள் நான் துபாயில் இருந்த பொழுது, அங்கு அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. என்னிடம் பலர் ‘தல’யை வைத்து புகைப்படம் எடுங்க என்று சொல்லியிருக்கிறார்கள். உடனே நான் அங்கு சென்று, ‘உங்களை வைத்து ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும்’ என்று கேட்டேன். எந்த மறுப்பும் தெரிவிக்காமல் உடனே ஓகே சொல்லி விட்டார். அந்தப் புகைப்படம் சமீபத்தில் பத்திரிகை ஒன்றில் வெளியானது.  சிறப்பாக இருந்ததாக அனைவரும் பாராட்டினர்.

மொபைலில் நீங்கள் விரும்பி எடுக்கும் புகைப்படத்தை உங்கள் ‘போன் மெமரி கார்டில்’ வைத்துக் கொள்வதைவிட, உடனே பிரிண்ட் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். வருடங்கள் கடந்த பிறகு அந்தப் புகைப்படத்தின் உண்மையான அழகு உங்களுக்குத் தெரியவரும். ஆர்வம், கடமை, உண்மையான உழைப்பு, நேர்மை ஆகிய இவை அனைத்தும் உங்கள் மனதில் வைத்துக் கொண்டு உங்கள் பணிகளை வெற்றிப் பணிகளாக்க வேண்டும்.

– பாண்டியராஜ்.