தட்டுப்பாடாகும் கொரோனா தடுப்பூசி….

கொரோனவிற்காக  செலுத்தப்படும் இரு தடுப்பூசிகளான கோவாக்ஸின் மற்றும் கோவிஷில்டு தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இந்த இரு தடுப்பூசிகளும்  ஜனவரி 16 லிருந்து மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டது. எனினும் இது அனைத்து தரப்பினருக்கும் இல்லாமல் குறிப்பிட்ட சில வயதினருக்கும்,  முன்கள பணியாளர்களுக்கு  மட்டுமே செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது. 45 வயதை கடந்த அனைவரும் தற்போது இந்த தடுப்பூசியினை செலுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

மக்கள் இத்தடுப்பூசிகளை போட்டுக் கொள்வதில் தயக்கம் கட்டிய நிலையில்  அரசியல் தலைவர்கள் மக்களுக்கு முன்னுதாரணமாக  விளங்கும் வகையில் தங்களுக்கு செலுத்திக் கொண்டனர்.  இந்திய தயாரிப்பான இவ்விரு தடுப்பூசிகளை   வெளிநாடுகளுக்கும்  மத்திய அரசு ஏற்றுமதி செய்கிறது.

இந்நிலையில் குறைந்திருந்த கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கூடத் துவங்கியுள்ளது. இதனால் மருத்துவமனைகளிலும் படுக்கை வசதி தட்டுப்பாடாகியுள்ளது.

தொற்று அதிகரித்துள்ள காரணத்தினால் மக்கள் தடுப்பூசி செலுத்த ஆர்வம் கட்டி வரும் நிலையில் இந்தியாவில் பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மும்பை, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், பீஹார், ஜார்கண்ட், ஒடிஷா மற்றும் சட்டிஸ்கர்  போன்ற மாநிலத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேலும் தமிழகத்திலும் விழுப்புரம், மதுரை, தருமபுரி, நாமக்கல், கோவை, ஊட்டி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டத்திலும் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனா தடுப்பூசி செலுத்த மருத்துவமனை செல்பவர்கள் திரும்பி வரும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

தடுப்பூசி தட்டுப்பாட்டினால் தமிழக அரசு, மத்திய அரசுக்கு 15 இலட்சம் கோவிஷில்ட் மற்றும் 5 இலட்சம் கோவாக்ஸின் தடுப்பூசி கோரி கடிதம் எழுதியுள்ளது.  தமிழகத்தில் தற்போது அடுத்த நான்கு  நாட்களுக்கு மட்டுமே   கொரோனா தடுப்பூசி  இருப்பில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாடுகளுக்கு அதிகளவில் தடுப்பூசி ஏற்றுமதி செய்வதால் தான் இந்தியாவில் தட்டுப்பாடு ஏற்படுகிறது என ஒரு சாரார் கூறுகின்றனர்.