சகோதரி நிவேதிதையின் 150 ரத யாத்திரை

நம் முன்னோர்கள் காலத்தில் பெண்கள் என்றாலே, அடுப்படி, கணவன், குழந்தை, குடும்பம் என்று தன்னுடைய வாழ்க்கையை தன் குடும்பத்திற்காக தியாகம் செய்து வந்தனர். மழைக்கு கூட பள்ளிக்கூடம் ஒதுங்காத நிலையில், அவற்றை உடைத்தெறிந்தார் அம்மையார் முத்துலக்ஷ்மி ரெட்டி. காலங்கள் மாற மாற பெண்களுக்கு சம உரிமை அளித்து வந்தனர்.

ஒரு பெண் படித்தால், அந்த குடும்பம் கல்வி பெற்றது போல. ஒரு குடும்பம் கல்வி ஆய்வு பெற்றிருந்தால் அந்த சமூகமே கல்வி அறிவு பெற்றது போல. எனவே ஒரு பெண் என்பவள் வெறும் குடும்பத்தலைவி மட்டும் அல்ல. பல திறமைகளை உள்ளடக்கிய ஒரு புரட்சி போராளி என்றே கூறலாம்.

அந்த வகையில், சுவாமி விவேகானந்தருக்கு உலகை அசைக்க வல்ல பெண் சிங்கமாக, மகாகவி பாரதியாருக்கு பெண் சமத்துவத்தை கற்று தரும் குருவாக, ஸ்ரீ அரவிந்தருக்கு விடுதலை வேட்கையை தூண்டிய அக்னிக் கொழுந்தாக விளங்கிய, நம் நாட்டின் சகோதரி நிவேதிதை தந்திர போராளிகளுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்ததோடு மட்டுமல்லாமல், பெண் கல்வி, இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.

சகோதரி நிவேதிதை, சுதந்திர போராளிகளுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்ததோடு மட்டுமல்லாமல், பெண் கல்வி மற்றும் இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.

சகோதரி நிவேதிதையின் 150 -வது பிறந்த ஆண்டினை கொண்டாடும் விதமாக 30 நாட்களுக்கு 27 மாவட்டங்களின் வழியாக சுமார் 3000 கிலோ மீட்டர் தொலைவை கடந்து 2 லட்சம் மாணவிகளிடம் சகோதரி நிவேதிதை ஆற்றிய பணிகளையும் அவரது பெருமைகளையும் கொண்டு சேர்க்கும் மாபெரும் ரத யாத்திரையானது தமிழகத்தில் நடைபெறவுள்ளது.

தமிழக மாணவிகளுக்கு சகோதரி நிவேதிதையின் சேவைகளையும், பண்புகளையும் கொண்டு சேர்ப்பதே, சகோதரி நிவேதிதை அவர்களுக்கு நாம் காட்டும் நன்றியாகும். தமிழகம் முழுவதும் ரத யாத்திரை செல்லும் மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள மாணவிகளுக்கு சகோதரி நிவேதிதை பற்றி தேர்ந்ததெடுக்கப்பட்ட தலைப்புகளின் கீழ் பேச்சு போட்டி நடைபெறவுள்ளது. கோவை இந்துஸ்தான் களை அறிவியல் கல்லூரியில், ஜனவரி 22,2018 தொடங்கி ,சென்னையில் பிப்ரவரி 22,2018 முடிவுபெறும்.

இந்த யாத்திரையின் தொடக்கவிழா யதீஸ்வரி ராமகிருஷ்ணா ப்ரியாம்பா தலைமையின்கீழும், விழாக்குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் வானதி சீனிவாசன், கொங்குநாடு கலைஅறிவியல் கல்லூரியின் செயலர் டாக்டர் சி.ஏ.வாசுகி மற்றும் மாநில பொருளாளர் பெரம்பலூர் இராமகிருஷ்ணா கல்விநிறுவனங்களின் தலைவர் டாக்டர் சிவ.சுப்பிரமணியன் ஆகியோரின் முன்னிலையில் நடைபெறவுள்ளது. இந்த மாபெரும் ரத யாத்திரையின் தொடக்க மற்றும் நிறைவு விழாவில் சுமார் 10,000 மாணவிகள் கலந்துகொள்ள இருகின்றனர்.

யாத்திரையின் நோக்கம்:

சகோதரி நிவேதிதை அவர்கள் தேசிய மற்றும் பெண்களின் வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகளை பற்றிய விழிப்புணர்வை இளைய சமுதாயத்திற்கு, குறிப்பாக பெண்களுக்கு ஏற்படுத்துவதற்காகவும்.

அவர்கள் தங்கள் வாழ்வில் சகோதரி நிவேதிதையின் பண்புகளான உத்வேகம், வலிமை, மென்மை ஆகியவற்றை கடைப்பிடித்து வெற்றியடைய வலியுறுத்துவதே இந்த யாத்திரையின் முக்கிய நோக்கமாகும். தமிழ்நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள மாணவிகளுக்கு சகோதரி நிவேதிதை பற்றியும் ,அவரின் போதனைகளையும் கொண்டுசேர்ப்பதாகும்.

இவர் ஆற்றிய சேவைகள்:

சகோதரி நிவேதிதை அவர்கள் தேசிய நலனுக்காக பலவிதமான நற்பணிகளை மேற்கொண்டார். பெண்கள் கல்வி மற்றும் பெண்களை மேம்படுத்துதல், இந்திய தேசியவாத உணர்வை வளர்ப்பது, சில கலை வடிவங்களை புத்துயிர் அளிப்பது, விஞ்ஞானத்தை ஊக்குவிப்பது, குடிமை நல்லொழுக்கங்களை பரப்புவது, தொற்றுநோய் மற்றும் பஞ்சத்தால் பாதிக்கபட்ட பகுதிகளில் மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டது என எண்ணிலடங்கா சேவை புரிந்தவர்.

நிவேதிதைக்கு சுவாமி விவேகானந்தர் எழுதிய கவிதை:

“தாயின் இதயமும் தலைவனின் உள்ளமும்
ஆய தென்றலின் அற்புத இனிமையும்
ஆரிய பீடத் தழகொளி விரிக்கும்
சீரிய எழிலும் திகழும் வலிமையும்
கனவிலும் முன்னோர் கண்டிரா வகையில்
உனதென ஆகி ஓங்குக மென்மேல்!
எதிர்காலத்தில் இந்திய மகனின்
சீர்சால் தலைவியாச் செவிலியாய்த் தோழியாய்
நேரும் ஒருமையில் நீயே ஆகுக!”

                                     – சுவாமி விவேகானந்தர்

சிறந்த சமூக சீர்திருத்தவாதி, வலிமையும் மேன்மையும் கலந்த கலவை, மனிதாபிமானத்திற்கு ஓர் முன்னோடியாக நிகழ்ந்த சகோதரி நிவேதிதையின் இந்த 150 ரத யாத்திரையில் பெண்கள் அனைவரும் கலந்து கொண்டு, அவரது நற்பண்புகளை பின்பற்றுவோம் என உறுதி ஏற்போம்.