மக்கள் மனதில் யார்?

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ் நமக்கு பல உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் சுதந்திரமாக எங்கும் போகலாம், வரலாம், பேசலாம், தேங்கா, மாங்கா, பட்டாணி, சுண்டல் என்று கூவி விற்கலாம், ஏன் ஒரு அரசியல் கட்சிகூடத் தொடங்கலாம்.

அந்த சுதந்திரத்தின்பேரில், சமீபகாலமாக தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தொடங்குவது தொடர்பான பல அறிவிப்புகளும், செய்திகளும் வெளிவந்துள்ளன. குறிப்பாக, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் அதிமுக முன்னாள், இந்நாள் பெரும்புள்ளி, அக்கட்சியின் மறைமுக ஆளுமை, தற்போதைய ஆர்.கே. நகர் தொகுதி எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன் ஆகியோரின் கட்சி அறிவிப்புகள், பேட்டிகள் மக்கள் மத்தியில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெருமுனை முதல் சமூக ஊடகங்கள் வரை இதுவே பேசுபடும் பொருளாகி உள்ளது.

புதிதாகக் கட்சி தொடங்குவதாக சொல்பவர்கள் கிட்டத்தட்ட ஒரே கருத்தை வழிமொழிகிறார்கள். ‘‘தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை, அதனால் சரிசெய்யவும், மக்களுக்கு நன்மை செய்யவும் அரசியல் கட்சி தொடங்குகிறோம்’’ என்கின்றனர்.

இதில், டி.டி.வி.தினகரன் தனி வகை எனலாம். ஏனெனில், இவர் பல ஆண்டுகளாக அதிமுக எனும் பெரும்கட்சியில் மக்கள் அறியாத வகையில், ஆனால் கட்சியினரிடையே செல்வாக்கு மிக்கவராகத் திகழ்ந்தவர். எம்.பி.யாக இருந்தவர். பரபரப்பான ஒரு சூழலில் ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேச்சையாக நின்று தமிழகத்தின் இருபெரும் அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக இரண்டையும் எதிர்த்து அவர்களை டெபாசிட் இழக்கச் செய்து வென்று காட்டியவர். அத்துடன், பத்திரிகையாளர்கள் கேட்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் சிரித்த முகத்துடன் பதில்களும் கருத்துகளும் கூறுவதில் வல்லவராக இருக்கிறார்.

ஆனால், இதற்கு நேர்மாறாக திரைப்பட நடிகர்களான ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அறுபது வயதைக் கடந்து, எழுவதை நோக்கிப் பயணிக்கும் வேளையில் அரசியலில் நுழைவதற்காக கங்கணம் கட்டியுள்ளனர். இருவருமே தாங்கள் சார்ந்த சினிமாவைப்போலவே தங்களது செயல்களிலும் தனித்தனி பாணியை கையாள்பவர்கள்.

அண்மையில், ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடன் போட்டோ செஷன் நடத்தினார். அந்நிகழ்வில் அதுவரை அவரது அரசியல் பிரவேசம் குறித்து இருந்துவந்த யூகங்களுக்கு பதில் தரும் வகையில் அதிரடியாக தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். மேலும், ஒரு படத்துக்கு பூஜை போடும்போதே பட ரிலீஸ் தேதி அறிவிப்பதுபோல, அடுத்த சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாகவும் அறிவித்தார்.

அடுத்தது, கமல்ஹாசன். பல நேரங்களில் இவர் பேசும், டிவிட்டரில் வெளியிடும் கருத்துக்கள் பாமரத் தமிழன் அறியாத செந்தமிழில் இருப்பதால் மக்கள் குழம்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், இவரது கட்சி தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பு, மக்களை சந்திக்கும் பயணம் என்ற அறிவிப்புகள் நடைமுறை அரசியலுக்கு ரிப்பன் வெட்டியதுபோல் ஆகியிருக்கிறது.

ஆனால் மக்கள்தான் உண்மையில் திகைத்துப்போய் இருக்கிறார்கள். தமிழக மக்களைக் காப்பாற்ற ஆபத்பாந்தவனாக அவதாரம் எடுத்துள்ள நடிகர்கள் இவ்வளவு ஆண்டுகளாக எங்கே போயிருந்தார்கள்? தமிழ்நாட்டில்தானே இருந்தார்கள்? இங்கே இதற்கு முன்னர், ஏன் இப்போதுகூட மக்களுக்கு பல பிரச்னைகளும் சிக்கல்களும் இருந்து கொண்டுதானே இருக்கிறது? இதுவரை அவற்றை எல்லாம் கண்டும், காணாமல் திரைப்படங்களில் டூயட் பாடிக்கொண்டு இருந்தவர்கள் ரிடையர்மெண்டுக்குப் பிறகு அரசியலில் கரை ஒதுங்குவது அவர்களுக்கு வேண்டுமானால் நல்லது, மக்களுக்கு?

ஏன், இவர்கள் அரசியலுக்கு வரக்கூடாதா என்றால் தாராளமாக வரலாம். ஆனால் தங்களது திருவாயைத் திறந்து, இதுதான் என் திட்டம் என்று மக்கள் சபையில் அறிவிக்க வேண்டும். தீப்பற்றி எறியும் தற்போதைய பிரச்னைகள் குறித்து தங்கள் நிலைப்பாடுகளை அறிவிக்க வேண்டும். அதைவிடுத்து, சும்மா பஞ்ச் டயலாக் பேசுவது, ட்விட்டரில் கருத்து போடுவது எல்லாம் இவர்களுடைய ‘‘பப்ளிசிட்டி ஸ்டண்ட்’’ தவிர வேறில்லை என்று ஆகிவிடும்.

மற்ற அரசியல் கட்சிகளுக்கு என்று சில கொள்கைகள் இருக்கும். மேலும் அவர்கள் மக்கள் பிரச்னைகள் பலவற்றில் கருத்து தெரிவிப்பார்கள், போராட்டம் நடத்துவார்கள், கூட்டணி சேர்வார்கள், பிரிவார்கள். இதனால் ஓரளவு இவர்களது நிலைப்பாடு என்னவென்று புரிந்து கொள்வது சுலபம். ஆனால், இந்த நடிகர்கள் இருவருக்கும் கடந்தகால செயல்பாடு, ‘சினிமா’ என்பதைத் தவிர வேறு எதுவும் பெரிதாக இல்லை. திரைத்துறையில் ‘நல்ல நடிகர்கள்’ என்பது மட்டுமே, தமிழக மக்கள் பணிக்கு ஆதாரமும் ஆகாது, அது ஒன்றே மக்கள் பணிக்கு உதவாது.

ஒன்று, ஏதாவது ஒரு கட்சியில் இணைந்து செயல்பட்ட அனுபவம் அல்லது தனிக்கட்சி தொடங்கி இயங்கிய அனுபவம் வேண்டும். இல்லையெனில், இவர்கள் நேரடியாக, தைரியமாக, தமிழக மக்களிடம் தங்கள் கொள்கைகளைத் தெரிவிக்க வேண்டும்.

அப்படி எதுவுமே செய்யாமல், பொது வாழ்வில் ஈடுபடுவேன், அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று வெறும்வாயில் ‘ராக்கெட் விடுவது’ இவர்கள்மீது எந்தவித நம்பகத்தன்மையையும் ஏற்படுத்தாது. அத்துடன், இவர்களைக்¢ குறித்து அவ்வப்போது வெறுமனே தொலைக்காட்சியில் பிரேக்கிங் நியூஸ் போடுவதால் மக்களுக்கு எந்தவொரு பயனுமில்லை.

முதலில், அரசியல் கடலில் குதிக்க வேண்டும். அதில் உள்ள மீன், சுறா, முதலை என எல்லாவற்றையும் எதிர்கொள்ள வேண்டும். பிறகு தானாகவே இவர்களை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். அதைவிடுத்து, திரைப்பட நடிகர் என்று நுழைவுச்சீட்டை வைத்துக்கொண்டு ஆட்சியையே பிடிக்க கனவு காண்பதும், திட்டமிடுவதும் வீண் வேலை.

ஓமந்தூர் ரெட்டியார், காமராஜர், பக்தவத்சலம், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என பல பெரும் ஆளுமைகள் தமிழக முதல்வர்களாக இருந்திருக்கிறார்கள். அந்த முதல்வர் இடத்துக்கு வரவேண்டுமானால், அதற்கான உழைப்பு வேண்டாமா? தியாகம் வேண்டாமா? சீரிய நோக்கங்கள் வேண்டாமா? திறமை வேண்டாமா?

யாரும் எதற்கும் ஆசைப்படலாம்-. தவறில்லை. நடிகர் என்று யார் வேண்டுமானாலும் தொப்பி, கண்ணாடி போடலாம், அதனால் அவர் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது, முதலமைச்சரும் ஆகிவிட முடியாது. ஏனெனில், இதையெல்லாம் அறியாமல் ஓட்டுப்போட தற்போதைய தமிழக மக்கள் ஒன்றும் அவ்வளவு இளிச்சவாயர்கள் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.