தமிழ், மலையாள புத்தாண்டு சிறப்பு வழிபாடு

சித்திரை திருநாள் என்றழைக்கப்படும் தமிழ் புத்தாண்டும், மலையாள மொழி பேசும் மக்களுக்கு விஷூ என்ற புத்தாண்டும் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மா, பலா, வாழை உள்ளிட்ட பழ வகைகளை இறைவனுக்கு படைத்து வழிபாடு நடத்தி புத்தாண்டை கொண்டாடினார்.

இதனை தொடர்ந்து கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. குறிப்பாக கோணியம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கோவை கேரளா மாநிலத்தின் அருகாமையில் அமைந்துள்ளதால் இங்கு மலையாள மொழி பேசும் மக்கள் அதிகமாக வசிக்கின்றனர். அவர்கள் புத்தாண்டை முன்னிட்டு இன்று சித்தாபுதூரில் உள்ள ஐயப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

கொரோனா பரவலை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பக்தர்கள் கோவிலுக்கு நுழையும் முன்பு சானிடைசர்கள் வழங்கப்பட்டு உடல் வெப்ப அளவு பரிசோதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.