பணமல்ல… லஞ்சம்!

தமிழக சட்ட மன்றத் தேர்தல் நடந்து முடிந்து இருக்கிறது. மேற்கு வங்காளம், அசாம் போன்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது இங்கு வன்முறை ஏதும் நடைபெறவில்லை என்றே கூற வேண்டும். அந்த அளவு கருத்து மோதல்களுடன் மட்டுமே இந்த மக்களாட்சி கருவி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
என்றாலும் இந்த தேர்தல் நமக்கு தரும் சில செய்திகள் உண்டு. சென்ற 2016ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுடன் ஒப்பிட்டால் இந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வாக்களித்தோர் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு சதவீதம் பேர் வாக்களிக்கவில்லை. தமிழகத்தில் மொத்தம் உள்ள 6,28,69,995 வாக்காளர்களில் 4,57,56,753 பேர் தான் தங்கள் ஜனநாயகக் கடமையை சரிவர செய்திருக்கிறார்கள். மீதம் உள்ள 1,71,13,202 பேர் பலவிதமான காரணங்களுக்காக வாக்குச்சாவடிக்கு வந்து தங்கள் மதிப்புமிகு வாக்கை செலுத்தவில்லை.

அடிப்படையில் இது மிகவும் வருத்தத்துக்குரிய செய்தி. ஏனென்றால் நூறு சதவீத வாக்காளர்களில் கிட்டத்தட்ட 27% பேர் வாக்களிக்க வரவில்லை என்றால் மீதம் உள்ள 73% பேரில் யார் அதிக வாக்குகளை பெறுகிறார்களோ, அவர்களே வெற்றி பெற்றதாக தீர்மானிக்க வேண்டி இருக்கிறது. பல இடங்களில் ஆயிரம், இரண்டாயிரம் வாக்குகளில் வெற்றி தீர்மானிக்கப்படும் இடங்களில் இந்த மிஸ்ஸிங் வாக்காளர்களின் வாக்கு குறித்து சிந்திக்க வேண்டி இருக்கிறது. இது தான் ஜனநாயகத்தின் மாண்பா என்று புரியவில்லை.
நடந்து முடிந்த இந்த தேர்தலில் காஞ்சிபுரம், கோவை, கரூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் வாக்குப்பதிவு சதவீதம் உயர்ந்துள்ளது. மற்றபடி உள்ள 32 மாவட்டங்களில் எல்லாம் வாக்குபதிவு சதவீதம் குறைந்திருக்கிறது.
இந்த முறை வாக்குப்பதிவு குறைந்ததற்கு காரணமாக கொரோனா நோய்த்தொற்று பயம், கொளுத்தும் வெயில், பூத் ஸ்லிப் மிஸ்ஸிங் போன்றவை சொல்லப்படுகின்றன.
மேலும் வழக்கம் போல தமிழகத்தின் சிங்காரச் சென்னை மாவட்டம் மாநிலத்திலேயே குறைந்த வாக்குப் பதிவை செய்து காட்டி இருக்கிறது. இது தமிழக சராசரி வாக்குப் பதிவான 72%க்கும் குறைவாக 59.06% வாக்குகள் சென்னையில் பதிவாகி உள்ளன. இது ஏன் என்று புரியவில்லை. மெத்தப் படித்தவர்கள், நாம் என்ன வாக்களிப்பது என்ற எண்ணம், ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்ற மனப்பான்மை. இது போன்ற காரணங்கள் இருந்தால் அதனை மாற்றிக் கொள்ள வேண்டியது அனைத்து வாக்காளர்களின் கடமை.

முன்பெல்லாம் சில இடங்களில் கட்சிக்காரர்கள் வீடு தேடி வந்து எங்கே வாக்களிக்க வேண்டும் என்ற பூத் ஸ்லிப் வழங்குவார்கள். இப்போது அந்த முறைக்கு தேர்தல் ஆணையம் தடைவிதித்து ஆணையமே வழங்கும் முறை உள்ளது. ஆனால் அது சரிவர செயல்படுத்தப்படாமல் பலருக்கும் ஸ்லிப் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவ்வாறு இருந்தால் அதில் உள்ள குறைகளை களைந்து சரிசெய்ய வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. மேலும் சென்னையில் வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் பலர் முகவரி மாற்றத்தை பதிவு செய்யாமல் இருப்பதும் இந்த சிக்கலை அதிகமாக்குகிறது. என்றாலும் வெறும் அறுபது சதவீதம் பேரில் பெரும்பான்மை பெறுபவர்கள் மொத்தம் நூறு சதவீதம் பேருக்கும் சேர்ந்து நியாயம் தருவது நல்லதல்ல.
அதைப் போலவே இந்த சட்டமன்றத் தேர்தலில் கிட்டத்தட்ட 9 லட்சம் இளம் வாக்காளர்கள் தேர்தல் களத்தில் வாக்காளர்களாக இணைந்திருப்பது குறிப்பிடத் தகுந்த செய்தி. இவர்கள் வாழ்நாள் முழுவதும் நம்பிக்கையுடன் ஜனநாயகக் கடமை ஆற்றும் வகையில் நமது தேர்தல் நடைமுறைகள் இருக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.

அதைப்போலவே இன்னொரு முக்கியமான செய்தி இந்த தேர்தலில் பலராலும் பல இடங்களிலும் உச்சரிக்கப்பட்டது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தல். அது பணமல்ல லஞ்சம் என்பதை அனைவரும் உணர வேண்டும். இல்லை அதற்கும் கீழே கூட பொருள் கொள்ளலாம். லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் எப்படி குற்றமோ அதைப்போலத் தான் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதும். இந்திய அரசியல் அமைப்பு சட்டம், ஒவ்வொரு சாதாரண குடிமகனுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லாமல் தந்திருப்பது இந்த வாக்குரிமை மட்டும் தான். அதனை ஆயிரத்துக்கும், ஐநூறுக்கும் விற்றுவிட்டால், கை நீட்டி காசு வாங்கி விட்டால் நாளை நம்முடைய தேவைகளுக்கு என்று மக்களாட்சி தந்துள்ள எந்த உரிமைகளையும் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு கேட்க முடியாது என்பதை உணர வேண்டும்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நமது பெருமைகளில் ஒன்றாக இந்த தேர்தலை கருத வேண்டும். இந்த சட்டமன்றத் தேர்தல் தரும் செய்திகளை உணர்ந்து அதற்கேற்ப நடக்க முயற்சிப்பது ஒவ்வொரு வாக்காளருக்கும் நல்லது. ஒவ்வொரு கட்சிக்கும் நல்லது.