யார் இதற்குக் காரணம்?

நம்ம கோவை: விவாத மேடை

 

சில்லென்ற கிளைமேட், சிறுவாணி தண்ணீர் இவைதான் கோயம்புத்தூரின் முதல் பெருமை என்பார்கள். இன்று சில்லென்ற கிளைமேட்டும் இல்லை, சிறுவாணி தண்ணீரும் வறண்டு போய் பல நாட்களாகிறது. கொளுத்துகின்ற கோடையில் என்ன செய்வது என்று தெரியாமல் கோவை மக்கள் தவித்துப் போயிருக்கிறார்கள்.

பல இடங்களில் பதிமூன்று நாட்களுக்கு ஒரு முறைதான் தண்ணீர் கிடைக்கிறது. சில இடங்களில் அதுவும் இல்லை. லாரி தண்ணீர் பிடித்து பழக்கமில்லாதவர்கள் குடத்துடன் அல்லாடுவதும் நடக்கிறது. பல போர்வெல் கிணறுகள் காற்றைத்தான் தருகின்றன. புதிதாக போர்வெல் போடும் புண்ணியவான்களுக்கு பல நூறு அடி தோண்டியும் தண்ணீர் கிடைக்காத நிலை. கேன் வாட்டர் விற்பவர்கள் பலர் செல்போன் ஆப் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். அந்த அளவு டிமாண்ட். மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் கோமா பேஷண்ட்டை சுற்றி நிற்கும் டாக்டர்கள் போல, இருக்கும் நாட்களை தென்மேற்கு பருவமழை வரும் வரை தள்ளி விட்டால் போதும் என்று பெருமூச்சு விட்டுக்கொண்டு நிற்கிறார்கள்.

ஒரு பக்கம் வெயிலின் உக்கிரம் அதிகமாகிக் கொண்டே போகிறது. முன்பு எங்கோ தொலைதூரத்தில் வெயிலில் சுருண்டு விழுந்து முதியவர் சாவு, ராஜஸ்தான் மாநிலத்தில் வெயிலுக்கு ஆறு பேர் பலி என்றெல்லாம் செய்தியாக படித்தது இங்கு உண்மையில் நடந்துவிடுமோ என்னும் அளவுக்கு வெயில் போட்டுத் தாக்குகிறது. இன்னொரு பக்கம் வர்ண ஜபம், கிளைமேட் சேஞ்ச், மழை பெய்யாதது ஏன் என்று விவாதங்கள்.

உண்மையில் என்ன நடக்கிறது?

நாம் தான். நாம் எல்லோரும் தான். இயற்கையை இந்த அளவுக்கு சீரழித்ததும், ஒரு வரைமுறை இல்லாமல் இஷ்டம் போல பயன்படுத்தியதும்தான் இதற்குக்காரணம். யார் நம்மைக் கேட்பது என்ற திமிர். காசு இருந்தால் கார் பைக் வாங்கலாம். ஆனால் சாலையை வாங்க முடியாது. இருக்கும் சாலையைத் தான் எல்லோரும் பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படை கூட தெரியாமல் நடந்து கொண்டதற்கு பலன்தான் இந்த பரிசு.

வெயிலுக்கு காட்டாமல் வளர்க்கப்பட்ட பல பெண்கள் இன்று வீட்டில் உள்ள போர்வெல் கிணறும் வற்றி விட பொதுக்குழாயில் ஆளுக்கு இரண்டு குடம் தண்ணீர் பிடிக்கிறார்கள். ஏன் இந்த அவலம்? ரொம்ப நல்லவர்கள் போல நியாயம் பேசும் நாம் பூமியில் இருந்து எடுக்கும் அளவு தண்ணீரை திரும்ப செலுத்த வேண்டும் என்று எப்போதாவது நினைத்திருக்கிறோமா? நமது முன்னோர்கள் கோடைக்காலத்தில் பயன்படும் என்று வெட்டி வைத்த குளம், கிணறுகளை விட்டு வைத்தோமா? குப்பையும் சாக்கடையும் கொண்டு நிறைக்கும் போது நமக்கு தெரியவில்லை. இன்று நம் வீட்டு குழாயிலும், கிணற்றிலும் தண்ணீர் இல்லாத போதுதான் துன்பம் தெரிகிறது. காலடியில் இருந்த தேவதையை எட்டி உதைத்து விட்டு, இன்று காசு கொடுத்து கண்ட தண்ணீரை வாங்கும் நிலை வந்து விட்டது.

இது எல்லாம் ஏதோ நமக்கு தொடர்பே இல்லாதது போல மாநகராட்சி தான் இதற்கு பொறுப்பு என்று சொல்லி நாம் ஒதுங்கிக்கொள்ள முடியாது. அவர்கள் இருக்கின்ற தண்ணீரை, அவர்களுக்கு தெரிந்த வகையில் பகிர்ந்து கொடுப்பவர்கள். அவ்வளவுதான்.

இனியாவது குளம் குட்டையை தூர் வாருவது, குப்பையை, கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டாமலிருப்பது, மரம் வளர்ப்பதை பார்த்து சிரிக்காமல் ஆதரிப்பது என்று நல்லதைச் செய்வோம்.  அவரவர் இருக்கும் இடங்களில் நீரை எப்போதும் சிக்கனமாக பயன்படுத்தவும், கிடைக்கின்ற மழைநீரை சரியாக சேமிப்பதற்கும் கற்றுக் கொள்வோம். மனசாட்சிப்படி அவற்றை நடைமுறைப்படுத்துவோம். கையில் கொஞ்சம் காசு இருந்து போர்வெல் போட்டு விட்டால் பூமிக்கு அடியில் இருக்கின்ற தண்ணீர் எல்லாம் என்னுடையது என்று நினைக்கும் அகங்கார மனப்பான்மையை குறைத்துக்கொண்டு தண்ணீரை நம் நியாயமான தேவைக்கு மட்டும் பயன்படுத்துவோம்.

இல்லாவிட்டால் இன்று தண்ணீருக்காக லாரியின் பின்னால் ஓட வேண்டிய நிலை மாறி, ரயிலில் வரும் தண்ணீருக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். அதிலும் இங்கு வரும் பல ரயில்கள் கோயம்புத்தூரில் நிற்காமல் கேரளா போய் விடுகின்றன என்கிறார்கள். இந்த நிலையில் தண்ணீர் ரயிலும் அப்படி போய்விட்டால் ஒரு குடம் தண்ணீருக்காக கேரளா டூர் போக வேண்டிய நிலை வந்து விடும்.

 

மக்கள் பார்வையில்:

சிந்து (குடும்பத் தலைவி):

இப்ப இருக்கற கடுமையான, தண்ணீர் பஞ்சத்துல தண்ணிய வீணாக்கக்கூடாது. முடிஞ்ச வரைக்கு தண்ணிய “ரீ- யூஸ்” பண்ணனும். பாத்ரூம், சமையலறை தண்ணிய வேற பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம்.

 

செல்வராஜ் (ஆட்டோ டிரைவர்):

இப்பவாவது நாம மரங்களோட பயன் பத்தி தெரிஞ்சுக்கணும். நெறைய மரம் இருந்தால் மழை கிடைக்குங்கிறத புரிஞ்சுக்கணும், மலைகாலத்துக்கு முன்னமே குளம், குட்டிகளை தூருவாரனும் அப்பத்தான் தண்ணிய சேமிக்க முடியும்.

 

கார்த்திக் (இளைஞர்):

வளர்ச்சி பணிக்காக மரம் வெட்டுவதை அரசாங்கம் அனுமதிக்க கூடாது. மரம் இல்லையெனில் மழைகள் கிடையாது.

 

மகேந்திரன் (வாட்டர் சப்ளையர்):

சாதாரண நாட்களை விட கோடைகாலங்களில் தண்ணீர் வீணாவது அதிகரிக்கும். ஆனால் இந்த கோடைகாலத்தில் வறட்சி நிலவுகிறது. தேவைகளும் அதிகரித்து விட்டது. இது மிகவும் வருத்தத்திற்குரியது. எவ்வளவு நாள் பூமியில் நீர் எடுக்க முடியும். எனவே மக்கள் நீரை சேமிக்க நிலத்தடி நீரை பெருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.