தனியார் பேக்கரியில் கொரோனா விதிமுறைகளை மீறியதால் அபராதம் விதித்த ஆணையர்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் குமாரவேல் பாண்டியன் இன்று 09.04.2021 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி கொரோனா தொற்று பரவுதலை தடுப்பதற்காக பல்வேறு தொடர் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, மேற்கு மண்டலம் மேட்டுப்பாளையம் சாலை பூமார்க்கெட் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர் பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகள், இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் முகக்கவசம் அணியாமல் இருந்ததால் அவர்களுக்கு தலா ரூ.200 வீதம் 12 நபர்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டார்கள்.

அதனைத் தொடர்ந்து, மத்திய மண்டலம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர் அப்பகுதியில் செயல்பட்டுவந்த தனியார் பேக்கரியில் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முகக்கவசம் அணியாமலும் செயல்பட்டதால் ரூ.5400 அபராதமும், மற்றொரு கடைக்கு ரூ.5000 அபராதமும், முகக்கவசம் அணியாமல் இருந்த 2 நபர்களுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதிக்க உத்தரவிட்டார். பின்னர் அப்பகுதியில் வாகனங்களில் செல்வோர்களிடம் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமென ஆணையாளர் அறிவுறுத்தியதோடு, கொரோனா நோய் தொற்றின் தீவிரத்தை உணர்ந்து பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி மற்றும் அரசின் சுகாதார வழிமுறைகளை தவறாமல் பின்பற்றி நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிடுமாறு மாநகராட்சி ஆணையாளர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின் போது மேற்கு மண்டல உதவி ஆணையர் சுந்தர்ராஜ், மண்டல உதவிப் பொறியாளர் கமலக்கண்ணன், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.