இரவு நேர ஊரடங்கு – தமிழக அரசு எச்சரிக்கை

நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு முதற்கட்டமாக 50சதவீத கட்டுப்பாடுகளை அறிவித்தது.

பெருந்தொற்று குறைந்து வரும் வேளையில், தீடீரென வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. இவ்வாறு அதிகமாக பரவுவதற்கான காரணங்கள் பல சொல்லப்பட்டாலும் கொரோனா குறித்த அச்சம் கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் மக்களிடையே குறையத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக முக கவசம் அணிதலையும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதையும் நம்மில் பலர் மறந்தனர்.

கொரோனா பரவல் முழுமையாக இன்னும் ஒழிக்கப்படவில்லை என்ற நினைவில்லாமல் நாம் அச்சமின்றி கூட்டங்களில் கூடுகிறோம், கொண்டாட்டங்களில் எவ்வித வழிமுறைகளும் இன்றி கலந்து கொள்கிறோம். தேர்தல் நேர பிரச்சாரங்களில் பெருவாரியாக முக கவசம் இல்லாத முகங்களையே கண்டோம். குறைந்திருந்த தொற்றை நம் அலட்சியத்தால் அதிகப்படுத்தி விட்டோம்.

தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மெல்ல மெல்ல இப்பொழுதுதான் தலை தூக்கி வரும் நிலையில் ஊரடங்கு அமல்படுத்தினால் மக்கள் பெருமளவு பாதிக்கப்படுவர்.

இந்நிலையில் தான் தொற்றின் தீவிரத்தை உணர்ந்து அரசு சில புதிய கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. முழு ஊரடங்கு என்றில்லாமல் 50 சதவீதம் என்றளவில் வரும் 10 ம் தேதியிலிருந்து அமல்படுத்தப்பட உள்ளது.

இந்த கட்டுப்பாடுகளை மக்கள் முறையாக பின்பற்றாமல் பரவல் தற்பொழுது இருக்கும் நிலையை விட அதிகரித்தால் இரவு நேர ஊரடங்குகள் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.