இரண்டாவது நாளாக கோவை அரசு மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்

கோவை அரசு மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் இரண்டாவது நாளாக, இன்றும் (08.04.2021) வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருவதால் நோயாளிகள் சிரமமடைந்து வருகின்றனர்.

கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் கேரளாவில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள் நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், அங்கு பணி புரியும் பயிற்சி மருத்துவர்கள் நேற்று (07.04.2021) முதல் வேலை நிறுத்தபோராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முறையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணம் இல்லாமல் சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகம் கூறுவதாகவும், பயிற்சி மருத்துவர்களுக்கு உணவு மற்றும் தங்குவதற்கான இடவசதியை மருத்துவமனை நிர்வாகம் செய்து தருவதில்லை என்றும் கூறி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் கலந்து கொண்டு அரசு மருத்துவமனை டீன் அலுவலகம் முன்பு அமர்ந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில், மருத்துவர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் சிரமமடைந்து வருகின்றனர்.