தென்னை மரங்களை தாக்கும் வேர் வாடல் நோய் : கட்டுப்படுத்தும் முறை

தென்னைக்கு பெயர் போன பொள்ளாச்சி தாலுக்காவிலிருந்து தேங்காய் மற்றும் இளநீர் தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுவதோடு மற்ற மாநிலங்களுக்கும் அனுப்பி வருவது யாவரும் அறிந்ததே. தற்போது இப்பகுதியிலுள்ள தென்னை மரங்களை மிகவும் கொடிய நோயான ‘வேர் வாடல் நோய்’ தாக்கி விளைச்சலையும் மற்றும் மரங்களையும் பாதித்து வருவது பொள்ளாச்சி விவசாயிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தரின் வழிக்காட்டுதலின்படி, பொள்ளாச்சி தாலூக்காவிலுள்ள 32 கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள தென்னை மரங்களை தமிழ்நாடு வேளாண்மை பல்கழைக் கழக பேராசிரியர்கள் மற்றும் முதுகலை மாணவர்கள் அடங்கிய குழு விரிவாக ஆய்வு செய்தனர். இவ்வாய்வின் முடிவாக நோய் பாதிப்பானது 0 முதல் 65.82 சதவீதம் வரை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பெருவாரியான கிராமங்களில் 20 சதவீதத்திற்கும் குறையாமல் இந்நோய் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

பொதுவாக, இலை மட்டைகள் கீழ்நோக்கி வளைந்து விலா எலும்பு போல காணப்படுதல், இலைகள் மஞ்சள் நிறமாகவும் மற்றும் ஓரங்கள் கருகுவதும் இந்நோயின் மிக முக்கிய அறிகுறிகளாகும். இதனால் இலைகளின் எண்ணிக்கை குறைந்து, குட்டையாகவும் மற்றும் மெலிந்தும் விடுகிறது. பட்டைகள் மற்றும் தேங்காய் பருப்புகளின் தடிமன் குறைதல் இந்நோயின் மற்ற அறிகுறிகளாகும்.

இந்நோயினை கீழ்வரும் ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளைக் கொண்டு கட்டுப்படுத்தலாம்

குறைந்த அளவு (அல்லது) ஆரம்ப நிலையில் பாதிப்புக்கு உள்ளான தென்னை தோப்புப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மரங்களை வெட்டி அகற்ற வேண்டும்.

ஒரு மரத்திற்கு ஒரு வருடத்திற்கு 50 கிலோ தொழு உரம், பேசில்லஸ் சப்டிலஸ் 100 கிராம் மற்றும் வேப்பம்புண்ணாக்கு 5 கிலோ ஆகியவற்றை இட வேண்டும்.

ஒருங்கிணைந்த உர மேலாண்மை முறைகளை மேற் கொண்டும் நல்ல விளைச்சலை பெறலாம். உர மேலாண்மையில் ஒரு மரத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட அளவுகளான யூரியா-1.3 கிலோ, சூப்பர்பாஸ்பேட்-2 கிலோ, பொட்டாஷ்-3.5 கிலோ, மெக்னீசியம் சல்பேட்-1 கிலோ என ஆண்டிற்கு இட வேண்டும்.

வட்டப்பாத்திகளில் பசுந்தாள் உரங்களான தட்டைப்யிறு, சணப்பை, கல்லகோனியம் மியூக்கனாய்ட்ஸ், பியூரேரியா ஜவானிக்கா மற்றும் தக்கைப்பூண்டு போன்றவற்றை ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பயிரிட்டு பூக்கும் முன்னரே மடக்கி உழுதுவிட வேண்டும்.

தென்னையில் வாழை, மிளகு, கோகோ, மஞ்சள், ஜாதிக்காய் மற்றும் கருணைக்கிழங்கு போன்ற ஊடுபயிர் மற்றும் கலப்பு பயிரிடலாம்.

நோய்க்காரணியை பரப்பும் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த போரேட் குருணை மருந்து 20 கிராமை 200 கிராம் மணலுடன்கலந்து குருத்தின் அடிப்பகுதியில் இட வேண்டும்.

இந்நோயுடன் சேர்த்து வரும் இலை அழுகல் நோயைக்கட்டுப்படுத்த முற்றிலும் பாதிக்கபட்ட மட்டைகளை அகற்றி அழிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட அழுகிய பகுதிகளை வெட்டி அப்புறப்படுத்தி விட்டு அந்த இடத்தில் ஹெக்சகோனசோல் மருந்து 2 மில்லியை 300 மில்லி லிட்டர் தண்ணீரில் கலந்து குருத்தில் ஊற்றவும் அல்லது மேன்கோசெப் மருந்தை 0.3% என்ற அளவில் தெளிக்க வேண்டும்