விழிப்புணர்வுகளை அறிந்தும், அலட்சியப்படுத்துகிறோம் – பி.எஸ்.ஜி நர்சிங் கல்லூரியில் பட்டிமன்றம்

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 ஆம் தேதி உடல்நலம் மற்றும் நல்வாழ்வை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு பி.எஸ்.ஜி செவிலியர் கல்லூரியில் “ஆரோக்கியமான உலகத்தை உருவாக்கும் விழிப்புணர்வை மக்கள் அறிந்து இருக்கிறார்களா அல்லது அலட்சியமாக இருக்கிறார்களா” என்ற தலைப்பின் கீழ் பட்டிமன்றம் இன்று (7.4.2021)நடைபெற்றது.

இந்நிகழ்வினை பி.எஸ்.ஜி செவிலியர் கல்லூரியின் முதல்வர் ஜெயசுதா வரவேற்புரை ஆற்றி துவக்கி வைத்தார்.

விழிப்புணர்வை அறிந்து இருக்கிறார்கள் என பேசிய தனபால் தனது உரையில், உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் வாழ்நாள் முழுதும் மகிழ்ச்சியாக இருக்கலாம் என தெரிவித்தார். ஆரோக்கியம் என்பது நமது பொக்கிஷம்.விழிப்புணர்வு எங்கும் இருப்பதுதான். அதை அனைவரும் அறிந்துள்ளனர். நாகரிக உணவு எவ்வளவு தான் வளர்ந்து வந்தாலும், நம் பாரம்பரிய உணவுகளை அறிந்தும் அதன் நன்மைகளையும்,உடல் உள்ளத்தை பாதுகாப்பது எவ்வாறு என்பதை பற்றியும் தெரிந்து வைத்துள்ளோம். நோய்களை பற்றிய விழிப்புணர்வு நம்மிடம் உள்ளது.

இதைத் தொடர்ந்து பேசிய பகவதியம்மாள், எப்படி வாழவேண்டும், எப்படி இருக்க வேண்டும் என அனைவரும் அறிந்துள்ளார்கள் எனவும், கொரோனவை வெற்றிக் கொள்கிற ஆற்றல் நம்மிடம் உள்ளது எனவும் கூறினார். உடல் ஆரோக்கியத்திற்கு மருந்தும், மன ஆரோக்கியத்திற்கு குடும்பமும் காரணமாக உள்ளது. நம் பக்தியும் சுகாதாரத்தையே எடுத்துரைக்கிறது. நமது உடலும், உலகமும் பஞ்ச பூதங்களால் அடங்கியதுதான். பெண்களே ஒரு மருத்துவராக இருந்து குடும்பத்தில் உள்ள அனைவரையும் பராமரிக்கிறார்கள் என பேசினார் .

 

அலட்சியமாக இருக்கிறார்கள் என பேசிய வசந்திமாலா, வழிமுறைகளை கடைபிடிக்காததினாலும், நம் அலட்சியத்தினாலும் தான் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது என்றும், கொரோனவை பற்றிய விழிப்புணர்வு இருந்தாலும், அலட்சியமாகவே நாம் செயல்படுகிறோம் என தெரிவித்தார். விழிப்புணர்வை கூட அலட்சியமாக நினைக்கிறோம். நம் தமிழ் இலக்கியங்களில் சொல்லப்படாத வாழ்க்கை நடைமுறைகளே இல்லை. இருந்தும் அதை கண்டுகொள்வதில்லை.உணவு செய்யும் போதும், சாப்பிடும் போதும் விழிப்புணர்வுடன் இருந்தாலே நடைப்பயிற்சியை தேவையில்லை. வாழ்க்கையை முறையாக யாரும் திட்டமிட்டு நடைமுறை படுத்துவதில்லை. என கூறினார்.

தொடர்ந்து இது குறித்து பேசிய சாந்தாமணி, அன்றைய காலத்தில் இருந்த குடும்ப வாழ்க்கை முறை பலவற்றை நமக்கு கற்று கொடுத்தது. ஆனால் இன்று நிலைமை அப்படி இல்லை. சுகாதாரம் என்பது சுத்தத்தில் மட்டுமில்லை. அறிவியல் வளர்ந்துள்ளது ஆனால் மனிதன் வளரவில்லை. விலங்குகள் என்றும் அதற்கு பொருந்தாத உணவினை உட்கொள்வதில்லை ஆனால் மனிதன் அனைத்தையும் உட்கொள்கிறான். இதனால் நம் ஆரோக்கியம் முற்றிலும் சீரழிந்துள்ளது.வாழக்கையில் நிம்மதியை தொலைந்து கொண்டு நம் வாழ்கிறோம் என கூறினார்.

இறுதியாக நடுவர் பாரதி பேசியதாவது: கொரோனா காலத்தில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது என்பது அவசியமான ஒன்று. இருந்தும் நாம் அதை அலட்சியமாகவே எடுத்துக் கொள்கிறோம்.

ஆரோக்கியம் என்பது நம் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுடன் கலந்தது. ஒரு மனிதனுக்கு உடல் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டும் மிக முக்கியம்.கொரோனா பெருந்தொற்று நமக்கு அனைத்தையும் கற்றுக்கொடுத்துள்ளது. மனிதன் தன்னை திருத்திக் கொள்ள வேண்டும். கல்வி நமக்கு அனைத்தையும் அறியுறுத்துகிறது. ஆனால் நாம் தான் கற்றுக் கொண்டு அதனை பின்பற்ற வேண்டும்.

நாம் விழிப்புணர்வுகளை அறிந்தும் இருக்கிறோம், இருந்தும் அதை அலட்சியப்படுத்துகிறோம் என கூறி நிறைவு செய்தார்.

மேலும் இப்பட்டிமன்றம் வலையொளி வாயிலாகவும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.